சனத்குமார முனிவர்



சனத்குமார முனிவர்   -   சாணக்கியர் முனிவர்



Jain United News Centre, Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொகுப்பு அஞ்சல்களுக்கு நன்றி.


பேரரசர் சனத்குமார் முனிவரான கதை!

(பள்ளத்தில் நீர் தேங்கும்உடலில் நோய் தங்கும். இந்த உடலை நான் என்று நினைத்தால் நோயின் துன்பம் தெரியும். உடலைத் தான் என்று நினையாத சனத்குமார் முனிவருக்கு நோய்கள் துன்பம் தரவில்லை. தவம் ஒன்றிலேயே அவர் உள்ளம் படிந்திருந்தது )
             இச்சம்பூத் தீவத்தின் பரதநிலத்தில் குருசாங்கணம் என்னும் நாட்டில் அத்தினாபுரம் என்னும் நகரம் இருந்தது.அதை ஆண்ட மன்னன் விசுவசேனன். அவனுடைய பட்டத்தரசியின் பெயர் சகதேவி. இவ்விருவருக்கும் பேரழகுடைய👦 சனத்குமாரன் என்னும் மகன் பிறந்தான். சிம்மவிக்ரமன் ,என்னும் படைத்தலைவனின் மகன் மகேந்திரசிம்மன் சனத்குமாரனின் நெருங்கிய தோழனாக இருந்தான். சனத்குமாரன் ஆண்மகனுக்குரிய அத்துணை நல்லிணக்கஙகளும் அறிவும் ஆற்றலும் நிரம்பியவன்.தேவர்களையும் வெல்லத் தக்க முகப்பொலிவும் உடற்கட்டும் ஒளிச்சிந்தும் மேனிப்பொலிவும் உள்ளவனாக இருந்தான்.
            ஒருநாள் இளவரசன் சனத்குமாரன் பட்டவாரகமாரகம் என்னும் அடங்காக் குதிரையின் மேலேறி இலக்குமி நிலையம் என்னும் உவவனத்திற்கு சென்றான். வழியில் குதிரை இடக்கு செய்தது. சனத்குமாரன் கடிவாளத்தை இழுத்துச் பிடித்துச் சாட்டையடிகொடுத்ததம் குதிரை கட்டுக்கடங்காமல் காற்றாக பறக்கத் தொடங்கியது.மேலெழும் செந்தூளில் அது எத்திசையில் ஓடுகிறது என்று கூட எவராலும் அறியமுடியவில்லை. மதயானை போல் வெறிகொண்டுஓடும் அக்குதிரையை இளவரசனால் அடக்கமுடியவில்லை. அக்குதிரை இருளடர்ந்த பெருங்காட்டின் நடுவே காற்றின் வேகத்தை விட அதிக வேகமாக        ஓடிக் கொண்டிருந்தது
      ( தொடரும் )
2
------------
     மகனுக்கு நேர்ந்த துன்பமறிந்து விசுவசேனன் மன்னன் பெரிதும் வருந்தினான். தன் படைகளையும் சேனைத்தலைவர்களையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடிவரப் புறப்பட்டான். படை சூழப் புறப்பட்ட சேனைத் தலைவர்களும் அரசனும் நாடுவிட்டு வெகுதொலைவு காட்டுக்குள் சென்றனர்  .குதிரையின் காலடிச் சுவடு வழியே சென்றவர்கள் முன்றாம் நாளுக்குப்பின் காலடிச் சுவடு தெரியாததால் வந்த வழியே தலைநக‌ருக்குத் திரும்ப நினைத்தனர்.அரசனுக்கோ மனமில்லை. " ஆ ! மகனே! "என்று மன்னன் புலம்புவதைக் கண்ட மகேந்திரசிம்மன் , "அரசே ! வருந்தாதீர்கள்.இளவரசன் பாதாள உலகத்திற்குச் சென்றிருந்தாலும் கூட தேடிக் கண்டு பிடித்து அழைத்து வருகிறேன் " என்று ஆறுதல் கூறினான். அரசனை அரண்மனைக்கு திரும்ப அனுப்பிவிட்டு படைகளுடன் மகேந்திரசிம்மன் சில நாட்கள் இளவரசனைத் தேடிப்பார்த்தான்.முயற்சி பலன் தராததால் மகேந்திரசிம்மனை மட்டும் காட்டில் விட்டு விட்டு படைகள் தலைநகரத்திற்குத் திரும்பின.
        மகேந்திரசிம்மன் தன்னந்தனியாக இளவரசனைத் தேடியலந்தான்.பல வேடர் இருப்பிடங்களிலும் பிற மலைவாழ் மக்களிடையும் சென்று பார்த்தான்.எங்கும் இளவரசன் வந்ததற்கான அடையாளம் தெரிய வில்லை.அங்கிருந்து பிரியங்குசண்டம் என்னும் பெருங்காட்டுக்குச் சென்றான்.இளவரசனைக் காண முடியாத துயரம் பெரிதாயிற்று. மகேந்திரசிம்மன் மனம் வருந்திப் புலம்பியவாறு கண்ணயர்ந்தான். கனவில் பழுத்துக் குலுங்கும் மாமரங்களையும் பெண் யானைகளோடு தெளிர்ந்த நீர் நிலையில் விளையாடும் மதக் களிற்றையும் கண்டான். தன் எண்ணம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. மீண்டும் நிம்மதியாக உறங்கலானான்.மகேந்திரசிம்மனின் மனத் துயரத்துக்காக இரக்கப்பட்ட பூதாம்பரன் என்னும் பேய்த்தேவன் அவனை வான் வழியாக எடுத்துக்கொண்டு போய் விசயார்த மலையை யடுத்த பூதரமணம் என்னும் காட்டினுள் உள்ள சுல்லகமான நீர் நிலையத்தின் கரையில் இட்டுப் போயினான்.
 (தொடரும் )
3.
-------------------
        கதிரவன் கிழக்கில் தோன்றிய இளங்காலைப் பொழுதில் மகேந்திரசிம்மன் துயில் நீங்கி விழித்தான். நாற்றிசைகளையும் பார்த்தான். நெடுங்கடலைப் போல் அலை வீசி மிளிரும் பெரிய நீர் நிலைகளை கண்டான். குமுதம்குவளைதாமரை போன்ற மலர்களாலும் வெண்ணிலா போல் நீந்தியும்முழுகியும் விளையாடும் அன்னப்பறவைகளாலும் அழகு பெற்ற அந்த நீர் நிலை அவன் உள்ளத்தை பெரிதும் கவர்ந்தது. பல்வேறு பறவைகளின் இன்னோசைகள் மாறொலித்தன.இவற்றைக் கண்டு பெருவியப்படைந்தான்.            அந்த பூதரமணப் பெருங்காட்டில் அசோகு, புன்னாகம்வகுளம்சண்பகம்தென்னை, புன்னைநாகவல்லி  முதலிய மரங்களடர்ந்த தோப்புகளும்நறுமணப் பூம்பொழில்களும் இருந்தன. அக்காடு இந்திரவனம் போல் இருந்தது.அப்போது அவன் எதிரில் தோன்றிய  புள் நிமித்தங்களும் (பறவைச் சகுனம்) நல்லவையாகவே இருந்தன. இந்த அழகிய சூழலில் இளவரசனைக் காணநேர்ந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினான்.
                   அப்போது மென்மதுரக் குழலோசை மத்தளம்தாளம்  முதலிய இன்னிசைக் கருவிகளின் ஓசை செவிக்குமு மனதுக்கும்இனிமையாகக் கேட்டது.அதைத் தொடர்ந்துஇனிய குரலில் பாட்டோசையும் கேட்டது.அரிச்சந்தனம் அகில் முதலிய நறுமனம் கமழத் தொடங்கியது. இது தேவர்களின் வாழ்விடமோ என்று மகேந்திரசிம்மன் கருதினான்.
    (தொடரும் )
4
-----------------

பேரரசர் சனத்குமார்" முனிவரான கதை!
      சிறிது தொலைவில் வித்தியாதர மகளிரைப் போன்ற அழகிய பெண்கள் பூங்கொடி போல் நாட்டியமாடுவதைக் கண்டான். அவர்களருகிற் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றிருந்தான். அவன் மேலும் உற்றுப் பார்த்தபோது அம்மகளிரின் நாட்டிய அரங்கினருகிலுள்ள மணி மண்டபத்தில் பேரழகுடைய இளமங்கையர் நடுவே உயர்ந்த அமளி மீதிருந்து நாட்டியம் கண்டு மகிழும் ஆணழகனைக் கண்டான். அவனுக்கு இருபுறத்திலும் இள மங்கையர்வெண் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். அந்த ஆணழகன் இளவரசனான சனத்குமாரனே என தெளிவாகப் புரிந்து கொண்டதும் எதிர் பாராத மகிழ்ச்சியால் மகேந்திரசிம்மனுக்கு பேச நாவெழவில்லை. நேராக ஓடி அவன் திருவடிகளில் விழுந்து மயக்கமுற்றான்
             சந்தன நறுமன நீரால் மயக்கம் தெளிவித்தனர். மயக்கம் தெளிந்த மகேந்திர சிம்மன் " இளவரசே! ஆறு திங்களாகத் தங்களைத் தேடியலைந்து இன்று கண்ணாரக் கண்டேன்.தலைவா! உன்னையே  என் உயிராக நம்பியிருக்கிறேன் " என்று அழத் தொடங்கினான். சனத்குமாரன்  தன் தோழனைத்  தேற்றி ஆறுதல்  மொழிந்தான். விபுலசிரி  என்னும் பெண்ணை அழைத்து " என் உடன் பிறப்பான இவனுக்கு வழிநடைக் களைப்பு  போக்கி நன்னீராட்டும் அறுசுவை உணவையும் உடையையும் கொடு " என இளவரசன் சனத்குமாரன் ஆணையிட்டான்.
           ஆணையைத் தலைமேற்கொண்ட அப்பெண் மகேந்திரசிம்மனை அழைத்துச் சென்று நறுமன நீராடுவித்து விலை மதிப்புமிக்க ஆடை அணிகலன்களை அணிவித்தாள். அறுசுவை உணவு விருந்தளித்தும் நறுமண கலவைகளையும் மலர் மாலைகளையும் சாத்தி தாம்பூலம் நல்கினாள். மகேந்திரசிம்மன் தான் வானுலகத்திற்கு வந்து விட்டதாகவே எண்ணி மகிழ்ந்தான். தேவேந்திரனைப் போல் அனைத்து இன்ப நலன்களையும்நுகர்ந்து வாழும் இளவரசன் அனைத்து அணிகலன்களும் அணிந்து நேத்திர மனோகரி என்னும் கொலு மண்டபத்தில்  வீற்றிருக்கும் கண் கொள்ளாக் காட்சியைக் கண் கொண்டு மகிழ்ந்த மகேந்திரசிம்மன் இளவரசனை நோக்கி , "அரசே! உலகில் முனிவர் பலர் பல ஆண்டுகள் கடுந்தவமியற்றி வானுலகத் தேவராகி இன்பம் பெறுகின்றனர்.தாங்கள் இப்பொழுதே வானுலகப் பெண்களின் நடுவே இந்திரனாகி விட்டீர்" என்றான். (தொடரும் )
5
------------
            இளவரசன் அவனை நோக்கிஇவர்கள் "தேவகன்னியர் அல்லர்வித்தியாதரிகள்" என்றதும் மகேந்திரசிம்மன் "தாங்கள் இவர்களை எங்குப் பெற்றீர்இங்கு எப்படி வந்தீர்இவற்றை எனக்கு விளக்கமாக சொல்லவேண்டும் " என்றான்.
           இருளெல்லாம் அதிரஞ்சனம் என்னும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால் தனக்குத் தூக்கம் வருவதாகக் கூறி கமலமதி என்னும் வித்தியாதரப் பெண்ணை அழைத்து "இவருக்கு என் வரலாற்றைச் சொல்" எனக் கட்டளையிட்டு விட்டு இளவரசன் பஞ்சனையில் துயிலச் சென்றான்.
             கமலமதி என்பவள் மகேந்திரசிம்மனுக்கு இளவரசன் அங்கு வந்த வரலாற்றை விளக்கமாக சொல்லத் தொடங்கினாள்.
          அடங்காத முரட்டுக் குதிரை அரசிளங்குமரனைக் காட்டு வழியாக சுமந்து கொண்டு மனவேகத்தில் மலைகாடுஆறுஆகியவற்றைத் தாண்டி மூன்று நாட்களாக இரவும் பகலும் ஓடிக்கொண்டிருந்தது.முள்ளும் கல்லும் மரக்கொம்புகளும் அந்த குதிரையின் வயிற்றைக் கிழித்ததால் குடல் அறுபட்டது.தொண்டையிலும் புண்கள் ஏற்பட்டன.மேற்கொண்டு ஓட முடியாமல் கீழே விழுந்து இறந்தது. அரசிளங் குமரன் பசியாலும் நீர்வேட்கையாலும் மிகவும் சோர்ந்து நினைவிழந்து ஒரு ஆலமரத்தின்🌳கீழ் இருந்த கல்லின்மேல் விழுந்து கிடந்தான்.
               அந்த ஆலமரத்தில் வாழும் மனோகரன் என்னும் இயக்கன் இதனைக் கண்டுஇவன் பேரரசன் என்பதுணர்ந்து சந்தன நீர்  தெளித்து விசிறி மயக்கம் தெளிவித்தான்.தங்க குவளையில் குளிர் நீர் கொணர்ந்து தந்து பருகச் செய்தான்.மயக்கம் தெளிந்த சனத்குமார இளவரசன்அவ்வியக்கனை நோக்கி , "நீ யார்இத்துணை குளிர்ந்த நீரை எங்கிருந்து கொணர்ந்தாய்?"என்று வினவினான். நான் இந்த ஆலமரத்தில் வாழும் இயக்கன்.என் பெயர் மனோகரன். சுல்லக மானசம்🌊 என்னும் பெரிய நீர் நிலையில் இருந்து இத்தண்ணீரைக் கொணர்ந்தேன்'என்று இயக்கன் மறுமொழி பகர்ந்தான்(தொடரும் ).
6
-----------
            'அந்த நீர் நிலைக்கு எடுத்துச் செல். அந்த நீர் நிலைக்கு சென்று நீர் அருந்தினால் அல்லது என் நீர் வேட்கை தணியாதுஎன்று இளவரசன் வேண்டிக்கொண்டதற்கேற்ப இயக்கன் இளவரசனை சுல்லக மானசம் நீர் நிலையின் கரையில் விட்டுப் போனான்.
         அப்போது அங்கு வந்த சிதயக்கன் என்னும் பேய்த்தேவன் இளவரசனைக் கண்டு பொறாமை கொண்டான். அவன் இளவரசனின் பழைய பகைவன்.கண்டோர்  அஞ்சும் வைரவ வடிவு கொண்டு நிலம் நடுங்க கர்ஜித்தவாறு அவன் இளவரசனைத் தாக்க வந்தான்.இளவரசன் எதிர் முழக்கம் செய்தவாறு கழுதை வடிவில் உள்ள ஒரு பெருங்கல்லைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு அரக்கனைப் போல் அவனைத் தாக்கத் தொடங்கினான். சிதயக்கன் நாகபாசத்தால் அவனைக் கட்டினான். இளவரசன் அதனைக் கையால் பிய்த்து எறிந்து விட்டான். பிறகு சிதயக்கன் பல மாயப்போர்களை செய்யத் தொடங்கி இளவரசனை வான்வழி எடுத்துச் சென்று கடல் நடுவே வடவைத் தீயிலிட்டுக் கொல்லத் துணிந்தான்.இளவரசனைத் தூக்கிக் கொண்டு நிலத்திலிருந்து வான்வழி எழும்பும்போது இளவரசன் அவன் தோள் முறியும்படி இடியைப் போல் தாக்கினான்.அந்த அடியைத் தாங்க முடியாமல் சிதயக்கன் இளவரசனை விட்டுவிட்டு புறமுதுகு காட்டி ஓடிப்போய் விட்டான்.இக்காட்சியைக் கண்ட ஏனைய இயக்க கிண்ணரர்கள் தலை மேல் கைகூப்பி வணங்கியவராய் அரசிளங்குமரனை வாழ்த்தினர். பூமாரி பொழிந்து பாராட்டினர்.
                 அப்பொழுது இந்திரப்பிரபன் என்னும் வித்தியாதரன் அங்கு வந்து இளவரசனின் திருவடிகளை வணங்கி , "பெருமானே! முப்பத்தாறு ஆண்டுகளாகத் தங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் நற்பேற்றால் தாங்கள் இன்று வந்தீர்கள். விமானத்தில் ஏறுங்கள் புறப்படலாம் 'என்றான். நீர் நிலையில் மகிழ்ந்து நீராடி வருவதாகக் கூறி இளவரசன் நீராடி வந்து விமானத்தில் ஏறினான். வான்வழிச் சென்று அக்காட்டில் மிகவும் அழகிய சோலைகளின் நடுவில் களித்து விளையாடிக் கொண்டிருந்த வித்தியாதர இளமகளிரின் அருகில் இளவரசனை இறக்கினான்(தொடரும் )
7
-----------
          இளவரசனின் மேனிப் பொலிவு என்னும் தூண்டிலில் சிக்கிய வித்தியாதர இளமகளிரின் கண்கள் என்னும் மீன்கள் தவியாய் தவித்தன. வித்தியாதர மகளிர் இளவரசன் மீது அளவற்ற காதல் மயக்கம் கொண்டனர்.இதுதான் காமனின் வில்லாற்றல் போலும்.காமனின் மலரம்புகள் மேனியைத் தாக்கா விடினும் உள்ளத்தைத் தாக்கி அலைக் கழித்து விடுகிறது.இது பெரும் புதுமை நிறைந்த உண்மை. ஆதலாற்றான் அம்மகளிர் அறுநீர்க்குள மீன்களைப் போல் தவித்தனர் போலும்.
           இவர்களிவ்வாறு காதற்களிப்பில் மூழ்கி யிருக்கும் போது இந்திரப்பிரபன் என்னும் வித்தியாதரன் பிரியசங்க நகருக்குச் சென்று பானுவேகன் என்னும் வித்தியாதர னிடம்தான் இளவரசனைக் கொணர்ந்து பூதரமணத்திலுள்ள சோதி விதானமெனப் படும் மணிமண்டபத்தில் கன்னியரிடையில் விட்டு வந்திருப்பதாகக் கூறினான்.இதை கேட்ட பானுவேகன் மிகவும் மகிழ்ந்து இந்திரப்பிரபன் மனம் குளிருமளவுக்கு நிறைய பரிசுகளை அளித்து மகிழ்ந்தான். விபுலசிரி என்னும் வித்தியாதரப் பெண்ணை அழைத்து "நீ விரைவில் சென்று இளவரசனுக்கு வேண்டிய அறுசுவை உண்டி முதலியவற்றைச் செய்து அணியமாக்கு" (தயாராக்கு) என்றான்.
          விபுலசிரி பானுவேகனின் ஆணையை ஏற்றுதோழியர் குழாத்துடன் சென்று இளவரசனுக்கு நறுமன நீராட்டிஅறுசுவை உண்டிஎழில் துலங்கும் ஆடை யணிகள்மனம் ததும்பும் நறுமனப் புகைகள்சந்தன கலவை தேய்ப்புகள் ஆகியவை நல்கி மகிழ்வித்தாள். இளவரசனை மலர் மஞ்சத்திலிருத்தி அனங்க சுந்தரி என்னும் ஆடலரசியை அவன் முன் நாட்டியமாடச் செய்தாள்.அந்நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த இளவரசனருகில்  பணிவுடன் கவரி வீசூம் தோழியரிடையில் விபுலசிரி இளவரசனின் ஆணையை எதிர்பார்த்து நின்றாள். (தொடரும் )
8
-----------
வியக்கத்தகு விருந்தோம்பல்களும் கண்ணும் மனமும் கவரும் காட்சிகளும் தனக்காக நடை பெறுவதைக்கண்ட இளவரசன் விபுலசிரி யை நோக்கி 'நீங்கள் யார்எனக்காக இத்துணைப் பெரிய நலங்களை ஏன் செய்கிறீர்கள்என்று வினவினான்.
         "பெருமகனே! தாங்கள் கேட்டவற்றிற்கு மறுமொழி சொல்கிறேன். கேளுங்கள்;
              விசயார்த மலையடுக்கத்தை அடுத்த பிரியசங்க நகரத்திலிருந்து ஆளும் வித்தியாதர அரசன் பானுவேகனுக்கு சீமாலை முதலிய பட்டத்தரசியர் எண்மர் (எட்டு பேர்). எட்டு பட்டத்தரசிகளின் வயிற்றில் பிறந்தவர்களே உன்னருகில் உள்ள எட்டு கன்னிப்பெண்கள்
  இலக்குமிபதிகனககாந்தைமந்தாரசேனைஅளகைஅலம்பூசைஏமவதிஏமமாலினிவிசயார்தவதி என்பது இவர்களின் பெயர். இந்தக் கன்னியர் எண் மரையும் யாருக்கு மனம் புரிவிப்பது என்று அறிய விரும்பிய மன்னன் நிருத்திகனை வரவழை த்து வினவினான்.
          சுல்லக மானசம் என்னும் பெருங் குளத்தின் கரையில் சிதயக்கன் என்னும் தேவனைப் போரில் யார் வெல்லுகிறார்களோ அவரே உன் மகளிரை மணக்கத்தக்கவர். என்று நிருத்திகன் கூறினான்.  அதன்படி சிதயக்கனை வென்ற பெருவீரனாகிய நீங்கள் இம்மகளிருக்கேற்ற மணமகன் ஆகியிருக்கிறீர் என்று விபுலசிரி கூறினாள். இதற்குள் மன்னன் பானுவேகன் அங்கு வருவதைக்கண்ட விபுலசிரி இளவரசனுக்கு அரசன் வரவை அறிவித்து 'தாங்கள் மாமனாரை எதிர் கொண்டு வரவேற்க வாருங்கள்என்றாள்.
            இளவரசன் சனத்குமாரன் தன் மாமனாரான அரசன் பானுவேகனைப் பணிந்து எதிர்கொண்டு வணங்கி அடக்கமாக நின்றான்.பானுவேகன் தன் மருமகனைக் கண்டு "மூவுலகத்திற்கும் நெற்றிக்குங்குமம் போன்ற பெரு வீரனான உன்னை மருமகனாகப் பெற்றேன்.இது நான் பெற்ற பெரும்பேறு!" என்று கூறி மருமகனை பாராட்பினான்.இளவரசனை தலைநகரத்திற்கு அழைத்துச் சென்று வெகு சிறப்பாக தன் மகள்கள் எட்டு பேரை யும் கைநீரிரைத்து உரிமை மனைவியராக்கிக் கொடுத்தான்.இளவரசன்  சனத்குமாரன் எட்டு மகளிரையும் மணந்து இனிது இல்லறம் நடத்தி வந்தான்.
      ஒருநாள் சுநந்தை என்னும் பெண்படும் துயரத்தைக் கண்டு தாளாத தேவ மகள் ஒருத்தி அவளுக்கு இரக்கப்பட்டு உதவி செய்வதற்காகச் சனத்குமாரனை வான் வழித் தூக்கிச்சென்று அரிகூட மலையில் உள்ள சோதிர் வனத்தில் மாயையால் உண்டாக்கிய ஒரு பூம் படுக்கையிலிட்டுச் சென்றாள்.விடியற்காலையில் தான் பூம்படுக்கையில் மலர்க்கொடி மணி மண்டபத்தில் படுத்திருப்பதைக் கண்டு  சுற்றிலும் பார்த்தான். தான் ஏதோ கனவு காண்பதாக நினைத்தான்.தன் கையில் இருந்த கங்கணத்தைப் பார்த்தான்.இது கனவன்று என்று உணர்ந்தான். (தொடரும் )
9
--------------
           ' ஊழ்வினை  வயத்தால் நடப்பது நடந்தே தீரும். ஆதலால் துன்பத்தில் நடுங்காமலும் இன்பத்தில் திளைக்காமலும் இருக்க வேண்டும் என்னும் பெரியோர் பொன்மொழி அவன் உள்ளத்தில் தோன்றியது.
     அப்போது சற்று தொலைவில் ஒரு பெண் அரற்றிப் புலம்பும் குரல் கேட்டது.அவள் புலம்பல் வருமாறு ,
       நான் சாகேத புத்தரசன்  சுரதனின் மகள். என் கணவனின் பெயர் சனத்குமாரன். என் பெயர் சுநந்தை. என்னை வஜ்ஜிரவேகன் எனனும் வித்தியாதரன் வலிந்து பற்றிக்கொண்டு வந்து இங்கே விட்டுப் போய்விட்டான். கின்னரர்களே! கிம்புரர்களே! கருடர்களே ! கந்தருவர்களேஇயக்கராக்கதர்களேகிம்புரர்களேதேவர்களேவித்தியாதரர்களே! ஆற்றாத் துயரில் அல மந்து உழலும் என்னை யாராவது வந்து காப்பாற்ற மாட்டீர்களா" என்று கூவி அழுதாள்.
       இக்குரலைக் கேட்ட இளவரசன் குரல் வந்த இடம் நோக்கிச் சென்றான். பளிங்கு மண்டபத்தில் இருந்த இயக்கக்கன்னி சுநந்தையைக் கண்டு , 'நீ உரைத்த சனத்குமாரன் என்பவன் யார்என்று வினவினான். சுநந்தை சொல்லத் தொடங்கினாள்.
            'நான் தாய் வயிற்றில் கருக்கொண்ட நாள்முதல் என் தந்தை சுரதனும் தாய் சந்திரயசியும்  நான் பெண் குழந்தையாகப் பிறந்ததால் சனத்குமாரனுக்கே திருமணம் செய்து தருவதாக உறுதி மேற் கொண்டனர்.நான் பிறந்து வளர்ந்தபோதும் அதே உறுதி பெற்றோர்க்கும் எனக்கும் இருந்து வந்தது. ஆதலால் சனத்குமாரனையே நான் என் மனத்தால் கணவனாக ஏற்றுக்கொண்டேன். நான் பூஞ்சோலையில் பொன்னூஞ்சல் ஆடிக் கொண்டிருந்தபோது இந்த வச்சிரவேகன் என்னைக் கவர்ந்து வான்வழியாக நான் கூக்குரலிடகூக்குரலிடக் கொண்டு வந்து இப்பளிங்கு மண்டபத்தில் கடந்த ஏழு நாட்களாக சிறை யிட்டிருக்கிறான். அவன் தங்கையை எனக்குக் காவலிட்டு தன் நகரில் தூங்கப் போயிருக்கிறான். அவன் தங்கையும் பொய்கையில் நீராடப் போயிருக்கிறாள்! என்றாள்.
      இதற்கிடையில் இளவரசன் சனத்குமாரன் சுநந்தையை நோக்கி ,
'நீ சனத்குமாரனைக் கணவனாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.அவனைப் பார்த்திருக்கிறாயா அல்லது பார்த்தால் அடையாளம் அறிவாயா என்று வினவினான். 'அறிவேன்.சனத்குமாரனின் தந்தை விசுவசேன மன்னர் என் தந்தையின் நெருங்கிய நண்பர். ஒருமுறை என் தந்தை  விசுவசேன மன்னரை நேரில் காணச் சென்றார்.விசுவசேனரையும் அவன் மகன் சனத்குமாரனையும் கண்டு சனத்குமாரனின்👲 உருவப் படத்தைக் கொண்டு வந்தார்.நான் அவ்வுருவத்தைக் பலமுறைக் கண்டு  அதே உருவத்தைப் பல முறை ஓவியமாக வரைந்து பார்த்திருக்கிறேன். அந்த உருவம் உங்களைப் போலவே இருக்கும் என்று சுநந்தை கூறினாள்.
(தொடரும் )

10
-----------
உடனே இளவரசன், 'நான்தான் சனத்குமாரன். உன்னை மீட்க வந்திருக்கிறேன்என்றான். இதைக் கேட்ட சுநந்தை தாள முடியாத மகிழ்ச்சியால் சிறிது நேரம் மெய்  மறந்தாள். தேடிச்சென்ற பூங்கொடி காலில் சிக்கியது போல் மகிழ்ந்தாள். தன் நற் பேற்றை வியந்தாள்.  பின்பு இளவரசனை நோக்கி இந்த கொடிய வச்சிரவேகனும் அவன் தங்கையும் வரும் முன் இங்கிருந்து போய்விடு ங்கள் என்றாள்.
       இளவரசன் அவளை நோக்கி,  'நீ அஞ்சாதிரு. உன்னை வலிந்து கொணர்ந்த அந்த வச்சிரவேகனின் முகத்தை நிலத்திலறைந்து கொன்றல்லது  இவ் விடத்தை விட்டுப் போகேன் 'என்றான்.  அச்சத்தால் நடுநடுங்கிய சுநந்தை 'வான்வழியாக பறக்கும் அவனை நீங்கள் எப்படி கொல்வீர்கள் என்றாள்.
        இளவரசன் இதைக் கேட்டு நகைத்தான்.'வான்வழி பறப்பவனை கொல்வது அரிதோ?' என்று வினவும்போது திடுமென வச்சிரவேகன் அங்கு வந்தான். வச்சிரவேகனைக் கண்டஞ்சிய சுநந்தை ஓடி ஒளிந்து கொண்டாள்.
            சுநந்தையுடன் பேசிக்கொண்டிருந்த இளவரசனைக் கண்ட வச்சிரவேகன் கடுஞ் சினம் கொண்டவனாய் உறையிலிருந்த வாளை உருவி இளவரசனை ஒரே வெட்டாக வெட்டுவதற்கு ஓங்கி வீசினான்.இளவரசன் தாவிக் குதித்து தப்பித்துக் கொண்டான் அடுத்த கணமே இளவரசன் சனத்குமாரன் ஒரே பாய்ச்சலாக வச்சிரவேகன் மேல் பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொன்று தொலைவில் தூக்கி எறிந்து விட்டான். வச்சிரவேகன் இறந்து ஒழிந்தான்.
           அதன்பின் சுநந்தை கன்னிப் பெண் ஆதலாலும்திருமணம் ஆகாத பெண் தனித்து இருக்குமிடத்தில் நற்குடிப் பிறந்த ஆண் மகன் இருத்தலாகாது என்பதாலும் சனத்குமாரன் சுநந்தையை பளிங்கு மண்டபத்தில் விட்டுவிட்டுத் தான் முன்பிருந்த மலர்க் கொடி மணிமண்டபத்தில் போய்ப் படுத்துக் கொண்டான்.
        அப்போது மலர்ப் பொய்கையில் நீராடச் சென்றிருந்த வச்சிர வேகனின் தங்கை சத்தியாவளி திரும்பி வந்து தன் அண்ணன் வச்சிரவேகன் இறந்து கிடப்பதை பார்த்து பதறினாள். கடுஞ்சினம் கொண்டு தன் அண்ணனைக் கொன்றவனைப்  பழிவாங்க நினைத்தாள். "அண்ணனைக் கொன்றவனைப் பாதாளத்தில் போய்ப் புகுந்தாலும் கொல்லாமல் விடமாட்டேன் என்று சூளுரைத்தாள்.அஞ்சத் தக்க வடிவம் கொண்டுஅனைத்து திசைகளையும் நோக்கினாள்.யாரும் கண்ணில் தெரியவில்லை. 'என் ஆண்ணனைக் கொன்றது யார் என்று உனக்கு தெரியுமா என்று சுநந்தையை வினவினாள். (தொடரும் )
11
-------------
  ' தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் பெருமகன்கள்ளனும் கொடியவனுமான உன் அண்ணனைக் கொன்ற
தில் தவறென்ன?'என்று சுநந்தை எதிர் வினா தொடுத்தாள். 'அவனை எனக்கு உடனே காட்டுஎன்று சத்தியாவளி அச்சுறுத்தினாள். சுநந்தை அவளை அழைத்துச் சென்று மலர்க்கொடி  மணிமண்டபத்தில் படுத்துறங்கும் இளவரசன் சனத்குமாரனைக் காட்டினாள்.
         சனத்குமாரனைக் கொல்வதற்காகக் கொடிய வடிவத்துடன் கேடயமும் வாளும் ஏந்தி அவனருகில் சென்றதும்சனத்குமாரனின் உருவ அழகையும் மேனிப் பொலிவையும் கண்டு மெய்மறந்து சினம் ஆறி காதல் ஊறும் நெஞ்சினளாய் கனிவான பெண்ணாக மாறிவிட்டாள்.
            'என் அண்ணன் அவன் செய்த தீமைகளால் இறந்தான்
 அவனை இந்த ஆணழகன் கொன்றதில் தவறில்லை 'என்று மனம் மாறி வந்த வழியே திரும்பினாள். தன் அண்ணன் உடலை நல்லடக்கம் செய்து இறுதிக் கருமங் களையும் ஆற்றி உள்ளம் உருக சோர்ந்து கிடந்தாள். தன் ஆற்றாமையையும் துயரத்தையும் சொல்வ தற்காக சுநந்தையை அழைத்தாள்.
          சுநந்தை! நான் உன் அருளால் வாழ்கிறேன்.நீ மனம் வைத்தால் தான் எனக்கு வாழ்வு உண்டு. நீ என் உடன் பிறந்தவளைப் போன்ற வள்.நீ எனக்காக சனத் குமாரனிடம் தூது சென்று என்னை அவர் மணந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். நான் இந்திரபுரத்தரசன் அசனிவேகனின் மகள். என் தாய் வித்தியுத்பிரபை எனவும் எடுத்துச்சொல்  என்று சுநந்தையை வேண்டிக்கொண்டாள்.
          சுநந்தை சனத்குமாரனிடம் சென்று சத்தியாவளி கூறியவற்றை ஒன்று விடாமல் கூறினாள். சனத்குமாரன்பெற்றோர் மகிழ்ந்து தராத பெண்ணை மணந்து கொள்வது அறமாகாதுஎன்றான். பெற்றோர் இல்லாத நிலையில் நண்பர் உறவினர் முன்னிலை யில் ஒரு பெண்ணை மணந்து கொள்வது அறநெறிப்படி தவறாகாது என்று சுநந்தையின் கருத்தை சனத்குமாரன் ஏற்றுக் கொண்டான்.
      அதன்படி வித்தியாதரரின் சுற்றம் சூழ சத்தியாவளியை சனத்குமாரனுக்குச் சுநந்தை மனமுடித்து வைத்தாள். சத்தியாவளிசுநந்தையைச் சனத்குமாரனுக்கு மணம் முடித்து வைத்தாள். இவ்வாறு சனத்குமாரன்சுநந்தை சத்தியாவளி ஆகிய இரு மனைவியருடன் இனிது வாழ்ந்து வந்தான்(தொடரும்)
12.
 -------------
இதற்கிடையில் அசனிவேகன் தன் மகன் வச்சிரவேகன் கொல்லப்பட்டதறிந்து பெரிதும் வருந்தினான். கொன்றவன் யார் என்று அறிவதற்காக அவலோகினி என்பவளை அனுப்பினான். அவலோகினி புறா வடிவம் கொண்டு வந்து ஆராய்ந்து செல்வதை சத்தியாவளி அறிந்து சனத்குமாரனை நோக்கி, ' பெருமகனே! என் தந்தை தாங்கள் என் அண்ணனைக் கொன்றதை அறிவதற் காக அவலோகினியை புறா வடிவில் அனுப்பி இருக்கிறார். அவர் கடுஞ்சினமும் பெரு வலிவும் கொண்டவர். உங்கள் மேல் படையெ டுத்து வர இருக்கிறார். ஆதலால் பிரக்ஏப்தி என்னும் வித்தையை அறிந்து கொள்ளுங்கள் என்றாள். சனத்குமாரன் புன்னகை புரிந்து, ' வித்தியாதரர்களின் வித்தைகளை நான் அறிவேன். வித்தியாதரர் எனும் இரலைகளை ( மான்களை ) கொல்ல புதிய வித்தைகளையும் கற்க வேண்டுமோஎன்றான். சத்தியாவளி அவன் திருவடிகளைப் பிடித்து கெஞ்சி 'இந்த வித்தையைத் தாங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்று வலுக்கட்டாயமாக சனத்குமாரனுக்கு அவ்வித்தையை நல்கினாள்.
              இப்பால் சக்கர வாளாபுரி மன்னன் சந்திரயசனிக்கும் வித்தியுத்வேகிக்கும் இருமைந்தர் இருந்தனர். அவர்களுக்கு சந்திரவேகன்பானுவேகன் என்று பெயர். அரசன் சந்திர யசனிக்கு உலக வாழ்வில் வெறுப்பு ஏற்ப்பட்டது.தன் மூத்த மகன் சந்திரவேகனுக்குஅரசனாக முடி சூட்டினான். இளைய மகன் பானுவேகனுக்கு இளவரசு பட்டம் கட்டப் பட்டது. குணதரர் என்னும் சாரண முனிவரிடம் அரசன் சந்திரயசனி துறவு பூண்டான். பலகாலம் தவம் செய்து சம்மேத மலையில் வீடுபேறு பெற்றான்.
               சந்திரவேகனுக்கு நூறு பெண் குழந்தை கள் பிறந்தனர். இப் பெண்களைத் தன்மகன் வச்சிரவேகனுக்கு மணம் புரிவிக்க நினைத்து,  அசனிவேகன் தன் பெருங்கடைகளை ( அதிகாரிகளை ) த் திறைப்பொருளாகப் பெண் கேட்டுவர அனுப்பினான். பிற வித்தியாதரர்களும் பெண் கேட்டு வந்தனர். எனினும் யாருக்கும் பெண் கொடுக்க சந்திரவேகன் இசைய வில்லை.தன் உறவினர் வந்து நீ உன் பெண்களை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்என்று சந்திரவேகனை வினவினர்.
         'சுல்லகமானசம் மலர்ப் பொய்கையின் கரையில் சிதயக்கனை கொன்றவனும்அசனிவேகனின் மகன் வச்சிரவேகனைக் கொன்றவனும்இனி அசனிவேகனையும் கொல்லக் கூடியவனுமான பெரு வீரனுக்கு உன் பெண்களை மணம் புரிந்து கொடு என்று எனக்கு தேவகுரு என்னும் நிமித்திகன் கூறியுள்ளான். ஆதலால் வேறு எவருக்கும் என் நூறு பெண்களைத் தரமாட்டேன்என்று சந்திரவேகன் கூறினான். பிறகுஅரிச்சந்திரர்சந்திரசேனர் என்னும் தன் ஆண் மக்களை தேரோடும் படைகளோடும் அனுப்பி, 'வச்சிரவேகனை வென்ற வீரனைத் தேடி வாருங்கள் 'என்றான்.அவ்வாறே அவர்கள் சனத்குமாரனிடம் வந்து பணிந்து இன்னுரையாடித் தாம் வந்த செய்தியைக் கூறினர். இதற்குள் சந்திரவேகனும்அவன் தம்பி பானுவேகனும் சுற்றமும் படைகளும் புடைசூழ சனத்குமாரனின் இருப்பிடத்திற்கு வந்தனர். (தொடரும்)
13
-----------------------------
          அதற்குள் அசனிவேகன் ,அவ  லோகினி வாயிலாக    தன் மகனைக் கொன்றது யார் என அறிந்து கடுஞ்சினம் கொண்டு சூளுரைத்துப் பொங்கிப் போர்க்கோலம் பூண்டெழுந்தான். என் மகனைக் கொன்ற வன் எங்கேஎங்கேஎன்று தேடிக்கொண்டு வந்தான்.இதைக்கண்ட சந்திரவேகன்,  சனத்குமாரனை நோக்கி, 'அரசிளங்குமரா! நீ அமைதியாக இங்கேயே இரு.நான் ஒருவனே அவன் படைகளை எதிர்த்து போராடுகிறேன் என்று புறப்பட்டான்.  சனத்குமாரன் இப் போரைக் காண வான் வழியாக வச்சிரசாரம் என்னும் தேர் ஒன்றில் ஏறிச் சென்றான்.மயிற்பீலி குடை பிடித்து நூற்றுக்  கணக்கான கொடிப்படைகளும் தேர்களும் விமானங்களும் தன்னைச் சூழ்ந்து வர வானிலுலாவி போர்காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தான்.
        அசனிவேகன் போரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்👲 சனத்குமாரனைக் கண்டு கடுஞ்சீற்றம்  கொண்டான். "என் மகனைக் கொன்ற உன்னை எமனுலகுக்கு அனுப்புகிறேன்" என்று சீறிவரும் அசனிவேகனைக் கண்டதும்👲 சனத்குமாரன் தன் வில்லை எடுத்து அர்த சந்திரம் எனும் பிறை அம்பைத் தொடுத்து அசனிவேகனின்  தலைக்கு குறிவைத்து எய்தினான். அந்த அம்பு அசனிவேகனின் தலையைக் கொய்து எறிந்தது.போர்க்களத்தில் அசனிவேகனின் தலை மணிமகுடத்தோடும் குண்டலங்களோடும் வீரர்கள் நடுவே வீழ்ந்ததைக்   கண்ட எதிரிகளின் படைகள் அஞ்சி நாற்புறமும் ஓடின. அசனிவேகனின் படை மறவர் சனத்குமாரனிடம் உயிர் பிச்சை கேட்டு அடைக்கலம் புகுந்தனர்.போரில் சனத்குமாரன் பெற்ற வெற்றியை அனைவரும் பாராட்டினர்.
     சந்திரவேகன் போர்க்களத்தில் வெற்றி வழிபாடு செய்து சனத்குமாரனை அழைத்துக்கொண்டு தலை நகருக்குச் அழைசுகச் சென்றான். நல்லநாள் முழுத்தம் ஓரை கிழமை பொழுதறிந்து திருமண நாள் குறித்தான். குறித்த நன்னாளில் சந்திரமதி முதலிய நூறு பெண்களையும் சனத்குமாரனுக்கு தந்து சிறப்பாகத் திருமணம் நடத்தினான். (தொடரும்நாளை சனத்குமாரனின் பழம் பிறவிகள்)

14
 சனத்குமாரனின் பழம் பிறவிகள்,
------------
        மற்றொரு நாள் சந்திரவேகன் சித்தகூட மலைக்குச்🗻சென்று அங்குத் தங்கியிருந்த சாரண முனிவரும் அவதிஞானிகளுமான சுமாலி முனிவரைக் கண்டு வணங்கினான். அவரிடம் அறவுரைகள் கேட்டான்.அதன்பிறகு அவரை நோக்கிஅடிகளே! சனத்குமாரனுக்கும் சிதயக்கனுக்கும் பகைமை எதனால் ஏற்ப்பட்டதுஅறிவித்தருள வேண்டும் என்று வேண்டினான். சுமாலி முனிவர் அதன் விளக்கத்தை சொல்லத் தொடங்கினார்.
         அரசனே! கேள். இச்சம்புத் தீவத்தின் பரதநில மகதநாட்டுக் காஞ்சனப் பொழில் (நகரம்) அரசன் பிரதிமுகன்.அவனுடைய அந்தப் புரம்மிகப் பெரிது.அவனுக்கு 800 அந்தப் புரங்கள் இருந்தன.
           அந்நகரில் நாக சந்திரன் என்னும் வணிகசாத்து(கூட்டம்) களின் தலைவனிருந் தான்.அவன் பெருஞ் செல்வன். அவன் மனைவி விட்டுணுசிரி மிகப் பேரழகி. அவளைப் போன்ற அழகி எங்குமில்லை என்று பாராட்டப் பட்டவள் அவள். ஒரு நாள் உத்தியானவனத் திற்கு போய்க் கொண்டிருந்த அரசன் பிரதிமுகன் வழியில் மணிமாளிகையின் முற்றத்தில் நின்று இருந்த விட்டுணுசிரி யைக் கண்டு கழிபெருங் காதல் கொண்டான். கண்ணை  காமம் மறைத்தது. உடனே மந்திர வலிமையால் அவளைக் கவர்ந்து வந்து தன் அந்தப்புரத்தில்  அரசி ஆக்கி வைத்துக் கொண்டான்.விட்டுணுசிரி வந்ததால் பொறாமை கொண்ட அந்தப்புரத்து அரசிகள் அனைவரும் அவளை ஒழித்துக் கட்ட நாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
          ஒருநாள் அரண்மனையிலிருந்த 'சார்வபௌமம் என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு எதிர்ப்பட்ட அனைவரையும் கொன்று குவித்துக் கொண்டு அலைந்தது. நகரில்  எல்லா இடங்களிலும் புகுந்து கொலைவெறித் தாண்டவம் ஆடியது. நகர மக்கள அஞ்சிக் கூக்குரல் இட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் நகர மக்கள் அனைவருமே கொல்லப்பட்டு விடுவர் என்னும் அச்சம் நிலவியது. யாராலும் அடக்க முடியாமற்போன அந்த யானையை அடக்க அரசன் புறப்பட்டான்.
       அந்த நேரம் பார்த்து அனைத்து அரசிகளும் திட்டமிட்டவாறுவிட்டுணுசிரிக்கு உணவில் நஞ்சிட்டுக் கொன்றனர். யாரும் அறியாமல் சுடுகாட்டில் எரித்து விட்டனர். அரசன் மத யானையை அடக்கி வயப்படுத்தி அரண்மனைக்கு மீண்டான். அந்தப்புரத்திற்கு வந்ததும் அரசி விட்டுணுசிரியைக் காணாது தவித்து, 'அவள் எங்கேஎன்றான். அவள் இறந்துவிட்டாள் என்னும் மறுமொழியைக் கேட்டதும் மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்தெழுந்து ஆற்றாத்துயருடையவனாகி சுடுகாட்டிற்கு அவளுடலைக் காணச் சென்றான்.சுடுகாட்டில் வெந்து நீரான சாம்பலைக் கண்டு மனமழிந்தான். உலக வாழ்க்கை அவனுக்கு வெறுத்துப் போய் விட்டது. (தொடரும் )
16
******************************
      பாரத்துவாச முனிவர்அரசனின் வேண்டுகோளை ஏற்று கொண்டு என் விருப்பப்படி இந்த சினவருமனின் முதுகின் மேல் அடியில்லாத தட்டில்  கொதிக்கும் கன்னலை (பாயசத்தை) ஊற்றினால்தான் அதை உண்பேன்  அல்லது உண்ணேன் என்றார். அரசனும் சினவரனை  உடன்படச் செய்து ஒப்புக்கொண்டு முனிவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
       அரண்மனையில் முனிவரை இருக்கையில் அமர்த்தி எதிரில் சினவருமனை குப்புறப் படுக்கவைத்து அவன் முதுகில் அடியி ல்லாத பெரிய தட்டை வைத்து அதில் கொதிக்கக்கொதிக்க கன்னலை(பாயசத்தை) ஊற்றினார்கள். குளிர்ந்து ஆறும்வரை பொறுத்திருந்து பாரத்துவாச முனிவர் அதைப் பசியாற உண்டு எழுந்தார். தட்டை எடுத்ததும் சின வருமனின் முதுகு தோல் முழுவதும் உரிந்து வந்துவிட்டது.  மிகப் பெரிய புண் சினவருமன் முதுகில் அருவருப்பான தோற்றம் தந்ததைக் கண்ட மன்னன் கடுஞ் சீற்றம் கொண்டான். இந்த முனிவன் உண்மைத் துறவியல்லன்மோசக்காரன்கொடுமனத்தரக்கன். இவனை ஊரை விட்டுத் துரத்துங்கள் என்றான்.
           சினவருமன் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு "முனிவரைத் துரத்தாதீர்கள். இது நான் செய்த தீவினையின் பயனாக இருத்தல் கூடும் " என அரசனை வேண்டினான். பின்பு உலக வாழ்க்கை துறந்து சீவருமர் என்னும் முனிவரிடம் துறவு மேற்கொண்டான். மகிச மலையில் தவஞ் செய்யத் தொடங்கினான். இப்புண் தானாக ஆறும்வரையில் தொங்கவிட்ட கையை மேலெடுப்பதில்லை என்று உறுதி பூண்டான்  கழுகுகளும் காக்கைகளும் முதுகுப் புண்ணை கொத்தித் தின்றன. மேருமலை போல் அசையாமல் இருந்து அத்துன்பங்களைப் பொறுத்திருந்து உள்ளடங்கு இயற்கை ( சமாதி மரணம் ) எய்தினான். அச்சுத கல்பம் என்னும் விண்ணுலகத்தில் இருபத்திரண்டு சாக ரோப கால வாணாள் பெற்று  அச்சுத இந்திரனாகப் பிறந்தான். அவ்வுலக இன்ப நலங்களை நெடுங்காலம் நுகர்ந்து இப்பொழுது சனத்குமாரனாகப் பிறந்திருக்கிறான்.
      பாரத்துவாச முனிவன் அச்சுத இந்திரனுக்கு வாகன தேவனாகப் பிறந்து இறந்துஅஞ்சனகிரி மலையடிவாரத்தில் வசிட்டன் என்னும் தவசிக்கும் கூகை என்னும் பெண் தவசிக்கும் பகன் என்னும் மகனாகப் பிறந்தான். பகன் இறந்த பின்   சிதயக்கனாய் பிறந்தான்.இதுதான்   சனத்குமாரனும் சிதயக்கனும் முற்💥 பிறப்புகளின் வாழ்க்கை வரலாறு. என்று சுமாலி என்னும் சாரண முனிவர் வித்தியாதர மன்னனுக்கு விளக்கமாக   கூறினார். (தொடரும் )
17
**********
         இதுவரை சொல்லப்பட்ட கதைகளையெல்லாம் கமலமதி என்னும் வித்தியாதரப் பெண் சனத்குமாரனின் ஆணைப்படி மகேந்திரசிம்மனுக்கு சொல்லி முடித்தாள். இதற்குள் சனத்குமாரன் துயில் நீங்கி எழுந்தான். மகேந்திரசிம்மன் அவனருகில் சென்று "உன் பிரிவால் துயரம் தாளாமல் நாள்தோறும் உருகி மெலியும் உன் தந்தை விசுவசேன மன்னரும் உன் தாய் சகதேவியும் உன்னை பார்க்கும் ஆசையில் கண்ணில் உயிர் வைத்துக்  கொண்டு உன் வரவை எதிர் நோக்கியுள்ளனர். ஆதலால் நம் தலை நகருக்கு உடனே போகலாம் புறப்படு" என வேண்டினான். சனத்குமாரன் இசைந்தான்.
             தன்    தலைநகருக்குப் புறப் படுவதற்காக சனத்குமாரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். இம் மகிழ்ச்சி செய்தியை மனைவியர் அனைவருக்கும் அறிவித்தான். மாமன்மார்களிடம் விடை பெற்றுக் கொண்டான்.
          நால்வகைப் படைகளுடனும்அன்னங்கள்மயில்கள் முதலிய அழகுப் பறவைகளுடனும்விலை உயர்ந்த பொருள்களுடனும்வித்தியாதரன் படை சூழ இந்திரன் எழுந்தரு ளுவது போல் கோலாகலத்துடன் பயணம் செய்து தன் தலை நகரம் வந்து அடைந்தான்.
          தன் தந்தை விசுவசேன மன்னரையும் ,தாய் சகதேவியையும் கண்டு  திருவடிகளில் விழுந்து வணங்கினான். இழந்த கண்ணைப் பெற்றது போல் பெற்றோர் மகிழ்ந்தனர். இளவரசனையும் வித்தியாதர இளவரசி களையும் வரவேற்று நகரமே விழாக்கோலம் பூண்டது. மன்னன் விசுவசேனன் சனத்குமாரனுக்குப் பேரரசனுக்குரிய பட்டம் கட்டி மகிழ்ந்தான்.சனத்குமாரன் அனைத்து பட்டத்தரசிகளுடனும் கூடி மக்களை அறநெறிப்படி காத்து நெடிது காலம் இனிது வாழ்ந்தான்.
விண்ணுலகில் ஒரு வியப்பு
-----------------------------
       சுதரும கல்பம் என்னும் விண்ணுலகத்தில் சுதருமேந்திரன்தன் தேவக் கொலு மண்டபத்தில் தேவர்கள் புடைசூழ வீற்றிருந்து சுதாமினி என்னும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தான்.
      அப்போது சங்கமதேவன் மிக எளிதில் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தான். முழு நிலவு எழுந்ததும் விண்மீன்கள் ஒளியற்றுப் போவது போல் ஒளியுமிழும் மேனிப் பொலிவுடைய சங்கமதேவன் கொலு மண்டபத்தின் உள்ளே வந்ததும் தேவர்கள் அனைவரின் மேனிப் பொலிவும் ஒளிகுன்றிப் போய் விட்டது. இது தேவர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் உண்டாக்கியது. தேவர்களை விட இந்தச் சங்கமதேவனுக்கு மேனிப் பொலிவும்ஒளி சிந்தும் எழிலும் எப்படி அதிகரித்தது என்று அனைவருக்கும் ஐயம் தோன்றியது. தேவர்கள் சுதருமேந்திரனை யடுத்து இதன் விளக்கம் கூறுமாறு வேண்டினர். சுதருமேந்திரன் சொல்லத் தொடங்கினான். (என்ன சொன்னான்நாளை!)
18
******************
      'இந்த சங்கமதேவன் முற்பிறப்பில் கீரகுமரனாகப் பிறந்திருந்தான். இவன் தந்தை புட்கலவதி நாட்டை புண்டரீகிணி நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த பேரரசனாக விமலவாகனன்.இவன் தாய் விமலமதி.கீர குமரன் இளமையில் அனைத்துக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி உலக வாழ்வில் வெறுப்புற்று துறவியாக நினைத்தான். அவன் தாய் துறவியாகக் கூடாது எனத் தடுத்து விட்டாள். தாயின் தடையை மீற முடியாமல் கீரகுமரன் அரண்மனையில் இருந்தவாறே மாணியம்(பிரம்மச்சரியம்) முதலிய நோன்பு களைக் கைக்கொண்டு  புலனடக்கத்தோடு வாழ்ந்தான்.ஆசம்லவர்தனம் என்னும் நோன்பைப் பன்னிரண்டு ஆண்டுகள் நோன்று உள்ளடங்கு இயற்கை ( சமாதி மரணம் ) எய்தினான். அதனாற்றான் இவனுக்கு இத்துணை எழிலார்ந்த உருவும் ஏரார்ந்த தோற்றமும் மேனிப் பொலிவும் உண்டாயினஎன்றார்.
             இதைக்கேட்ட தேவர்கள், 'பெருமானே!  இந்தச் சங்கதேவனைப் போல எழிலும் பொலிவும் கொண்டவர் யாரேனும் உளரோஎன்று வினவினர்.
            'உளன். அத்தினாபுர நகரில் சனத்குமாரன் பேரரசன் என்பவன் அவன். அம் மன்னன் தேவரின் உருவும் திருவும் ஏரும் எழிலும் திறனும் பொற்பும் வாய்ந்தவன். அவன் பெருமை அளவிட முடியாதது.என்று சுதருமேந்திரன் கூறினான்.
              இந்திரனின் இப்பேச்சைப் பிற தேவர்கள் நம்பவில்லை. மண்ணுலகத்தில் பிறந்த ஒருவன் விண் உலக தேவர்களைப் போன்ற பொலிவுடையவனாக இருக்க முடியாது. நேரில் கண்டால்தான் நம்பமுடியும் என்று எண்ணினர்.ஆதலால் விசயன் வைசயந்தன் இரு தேவர்களும் பார்ப்பன வடிவம்  தாங்கி  சனத்குமார மன்னனைக்  காண மண்ணுலகிற்கு வந்தனர்.
       அத்தினாபுரத்திற்கு வந்ததும் அரண்மனை வாயிற்காவலரை நோக்கி அரசனின் மேனிப் பொலிவு காண நெடுந்தொலைவிலிருந்து தாம் வந்திருப்பதாக அறிவிக்க பணித்தனர். வாயிற்காவலர் வழி செய்தி  யறிந்த மன்னன் அவர்களை உள்ளே வரப் பணித்தான்.
         பார்ப்பன வடிவில் இருந்த தேவர் இருவரும் அரசனை சாரச் சென்று பார்த்தனர். அரசன் உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிப்பதற்காக உட்கார்ந்திருந்தான். அரசனின் உருவ அழகைக் கண்டு வியந்த தேவர்கள் அரசனை உச்சந்தலை கூந்தல் தொட்டு முன் கால் பெருவிரல் நகம் வரை ஏற இறங்கப் பலமுறை பார்த்துப் பார்த்துப் தம்முள் மகிழ்ந்தனர். மன்னா!  உன்னைப் போன்ற மேனிப் பொலிவுடைய மண்ணுலகத்தவரை நாங்கள் கண்டதில்லை  விண்ணுலகத்திலும் உனக்கீடான இளமையும் உடற்கட்டும் மேனிப் பொலிவுடையவர்கள் இல்லைஎன்றனர். இவ்வாறு புகழ்ந்ததும் அரசன், 'நீங்கள் யார்?  எங்கிருந்து வருகிறீர்கள்?  என்றுக் கேட்டான். (தொடரும் )
19
*****************
         'நாங்கள் விண்ணுலகில் இருந்து வருகிறோம். நாங்கள் தேவர்கள். சுதரும கல்பம் என்னும் தேவருலத்தின் தலைவனான சுதருமேந்திரன் தன் கொலு மண்டபத்தில் உன் மேனிப் பொலிவையும் எழிலார் ந்த வடிவத்தையும் புகழ்ந்து பேசினான். அவன் உன்னை நச்சி யுரைத்ததை நம்பாது அது உண்மையா என நேரில் கண்டறிவதற்காக வந்தோம். உன்னை நேரில் பார்த்த பிறகு சுதருமேந்திரன் கூறியதைவிட உன் தோற்றமும் அழகும் அதிகமாகவே இருப்பதை நேரில் கண்டறிந்தோம். இனி நாங்கள் தேவருலகத்தி ற்கு செல்கிறோம் என்றனர்.
           அரசன் தேவர்களின் புகழ் மொழிகளைக் கேட்டு உள்ளங்குளிர்ந்தான். தூதர்களிடம் சொல்லி தான் நீராடி ஆடையணிகள் அணிந்து கொலு மண்டபத்திலிருக்கும் கோலத்தை காணும் வரை தேவர்களைக் கொலு மண்டபத்தில் இருக்குமாறு பணிந்தான். தேவர்கள் மேலும் சிறிது நேரம்  தங்கினர்.
            அரசன் நீராடி நறுமண்கலவைகளை பூசிஆடையணிகளை அணிந்து மணிமுடி சூட்டி தேவேந்திரனைப் போல் சுற்றம் புடைசூழ கொலு மண்டபத்து அரியணையில் வந்து அமர்ந்தான்.  அவனை சுற்றிலும் முப்பத்திரண்டாயிரம் சிற்றரசர்களும் வித்தியாதரரும் இயக்க தேவர்களும் பெருமிதமாக வீற்றிருந்தனர். முப்பத்திரண்டு வெண் சாமரங்களை வித்தியாதர மகளிர் விசிறி நின்றனர். தேவர்கள் அரசனின் கொலு மண்டபக் காட்சியைக் கண்டு வியந்து பாராட்டினர்.
            பாராட்டிய அதே தேவர்கள், 'மாந்தரின் இளமையழகும் பொலிவும் வானவில்லைப் போல் நொடியில் அழிந்து மறையக் கூடிய நிலையாதது என்றும் கூறினர். கணப் கொழுதில் மாந்தரின் பொலிவும் குன்றக் கூடியது என்று அவர்கள் கூறியதைக் கேட்ட மன்னன் வியப்புற்று, 'தேவர்களே! நீங்கள் என்னை வாயாரப் புகழ்ந்த பின் மறுநொடியில் முன் சொன்னதற்கு மாறாக இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று வினவினான். அதற்கு தேவர்கள் மறுமொழி கூறினர். (தொடரும் )
20
*************
         கேள்! அரசா! தேவர்களின் பொலிவும்இளமையும் தோன்றிய நாள் தொட்டு பெருகிக் கொண்டு போகும். தேவர்களுக்கு மூப்பும் இல்லை. மேனிப் பொலிவும் குன்றுவதும் இல்லை. ஆனால் உன்னைப் போன்ற மாந்தரின் இளமையும் அழகும் மூப்பாலும்நோயாளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். மாந்தரின் நிலையாத இளமையழகும் பொலிவையும் தோற்றத்தையும் எதிர் காலத்தில் அதன் அழிவையும் தேவர்கள் ஆகிய நாங்கள் அவதிஞானத்தால் முன் கூட்டியே அறியும் திறன் பெற்றவர்கள் என்றனர். மாந்தருக்கு மட்டும் பொலிவு குன்றும் என்றனர். மாந்தருக்கு மட்டும் பொலிவு குன்றும் என்பதை உங்களால் நிறுவிக் காட்டமுடியுமாஎன்று வினவினான்.  அதை நிறுவிக் காட்டமுடியும் என்று தேவர்கள் கூறினர்.
       ஒரு பெரிய மண் பாண்டத்தில் ததும்பும் அளவுக்கு தண்ணீர் கொண்டு வருமாறு கூறினர். நீர் ததும்ப மண் பாண்டம் கொணர்ந்து வைக்கப் பட்டது. தேவர்கள் கவரி மயிரால் செய்யப்பட்ட சிறிய வெண் சாமரத்தை நீரில் சிறிது நனைத்துவீசி உதறினர். மென் பனித்துளி போன்று நீர் துளிகள் அரசவையில் அனைவர் மீதும் பட்டன. உடனே தேவர்கள் அரசனை நோக்கி, ' நீங்கள் பாண்டத்தில் வைத்த நீர் நிறைகுடமாக அப்படியே உள்ளது. நீர் குறையவில்லை என்று சொல்ல முடியுமாஉங்கள் மீது தெறித்த நீர்துளிகள் குறைந்திருப்பதை நிறை குடத்தை பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. அதைப் போலவே மாந்தரின் இளமையும் மேனிப் பொலிவும் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அவர்களால் அறிய முடியாது 'என்று தாம் கூறியதை நிலை நிறுத்திக் காட்டி அரசனிடம் விடை பெற்று விண்ணுலகம் சென்றனர்.
       இப்பால் மன்னன் சனத்குமாரன் உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு கொள்ள நினைத்தான். உலக இன்பங்களில் அவனுக்கு வெறுப்புத் தோன்றியது. இளமையும் எழிலும் புலன்களுக்கு விருந்தாகின்றனவேயன்றி அவற்றால் உயிருக்கு நன்மை இல்லை. புலனின்பங்களும் உடலும் ஆற்றலும் உறவும் நட்பும் செல்வங்களும் நிலையில்லாதவை.இதை உணர்ந்த ஞானிகள் துறவிகளாகி ன்றனர்.
     உலகில் பிறப்பதுவளர்வதுமூப்படைவதுநோயுறுவதுஎமன் கைப்பட்டிறப்பது மீண்டும் மீண்டும் இவ்வாறு பிறவிக் கடலில் சக்கரம் போல் சுழல்வதுமாகிய பிறவியைத் தெளிவு பெற்றவர்கள் விரும்புவதில்லை' 'என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.  (தொடரும் )
21
*****************
       சனத்குமார மன்னன் தன் மூத்த மகன் விசயகுமரன் என்பவனை அழைத்து அவனுக்கு மணிமுடி சூட்டி அரசனாக்கினான் நாட்டையும் செல்வங்களையும் பிற இன்பங்களையும் ஒரே மனதாக துறந்து உறுதி பூண்ட நெஞ்சினனாய் வினயந்தர பட்டாரர் என்பவரிடம் துறவு பூண்டான். கடுந்தவம் மேற்கொண்டு😷 சனத் குமார முனிவர் என்று அழைக்கப்பட்டார்.
          ஒரு நாள் உணவு க்காக ஊருக்குள் பயணம் புறப்பட்டபோதுஒரு ஏழைக் கிழவி அவரை நிறுத்தி முதல்நாள் சமைத்த பழைய வரகு அரிசிச் சோற்றையும் அவரையையும் ஆட்டின் தயிரையும் படைத்தாள். இன்னின்ன உணவுதான் உண்ண வேண்டும் என்பதில் கருத்தூன்றாமல் சனத் குமார முனிவர் அந்த உணவை அமுதமாக நினைத்து உண்டார்.
      இவ்வுணவை உட் கொண்ட மூன்றாம் நாள் இரவுக்குப் பின் அவருக்குச் சொறிசிரங்குகடுங் காய்ச்சல்ஈளைவயிற்றுப் போக்குகண் நோய்வயிற்று வலி ஆகிய பல நோய்கள் உண்டாயின. இத்தகைய நோய்களை நூறாண்டு காலம் பொறுத்துக் கொண்டு கடுந்தவம் (உக்ர தவம்) மிகைத் தவம்(தீப்த தவம்) மாத்தவம்(மகா தவம்)கொடுந்தவம் (கோர தவம்) ஆகிய தவங்களைச் செய்து வந்தார்.
       மற்றொரு நாள் சுதருமேந்திரன் தன் விண்ணுலக கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பெரும் முனிவர்களின் பண்பு நலங்களை விரித்துரை க்கும் போது சனத்குமாரமுனிவரின் பெருமைகளை பெருமைப் பட கூறினார்.
    'வாதம்,பித்தம்சிலேத்துமம்ஈளைஇருமல்மூலம்சூலை தொழு நோய் முதலிய ஏழுநூறு நோய்கள் நூறாண்டு காலமாக சனத்குமார முனிவரின் உடலில் தோன்றி நலி வுற்ற போதும் சிறிதும் மனம் தளராமல் அவர் கடுந்தவம் செய்து வந்தார். நோய்க்கு மருந்து உண்ண மறுத்து விட்டார். அவரது உறுதி பாராட்டத் தக்கதுஎன சுதருமேந்திரன் கூறுவதைக் கேட்ட தேவர்கள் முன்பு சனத்குமாரன் அரண்மனைக்கு வந்த இரு தேவர்களும் சனத்குமார முனிவரை நேரில் கண்டு மருந்திட்டு அவர் நோய்களை போக்க நினைத்தனர். அரிய மருந்துகளைத் தேடி ஒரு பையிலிட்டு எடுத்துக் கொண்டு மருத்துவர் வேடத்தில் சனத்குமார முனிவர் தவம் செய்யுமிடத்திற்கு வந்தனர்.
22
*********************
       சனத்குமார முனிவரைக் கண்டு வணங்கிஅடிகளே! நாங்கள் மருத்துவத்தில் கை தேர்ந்த பேரறிஞர்கள். எத்தகைய நோயானாலும் அது எத்துணை நாட் பட்டதாக இருந்தாலும் ஏழு நாட்களுக்குள் முற்றிலும் குணப்படு த்தி விடுவோம். உங்கள் உடலில் உள்ள 700 நோய்களையும் போக்கி விடுகிறோம். அருள் கூர்ந்து இசைவளியுங்கள். நாங்கள் உங்கள் நோய்களை நீக்கியபின் தாங்கள் இனிதாக தவம் செய்யலாம் என்றனர்.
       சனத்குமார முனிவர் அவர்களை நோக்கி, ' நான் சொல்லும் நோய்களுக்கு உங்களிடம் மருந்து இருக்கிறதாஎன்று வினவினார். 'எங்களுக்கு தெரியாத நோய்களே உலகில் இல்லை. நீங்கள் சொல்லும் நோய்கள் அனைத்தையும் எங்களால் நீக்க முடியும்.சொல்லுங்கள் என்றனர்.
     ' உலக வாழ்வின் நிலையாமைபல்வகை பிறவித் துன்பங்கள்பிறப்புஇறப்புஇளமைமூப்புஇன்பம்துன்பம் ஆகிய நோய்களுக்கு மருந்து கொடுக்க முடியுமாஎன்று வினவினார். மருத்துவராக வந்த தேவர்கள்சொல்வது  அறியாமல் விழித்தனர் 'உடல் நோய்க்கு மருந்திட்டு பயனில்லை. உயிருக்கு வரும் நோய்க்கு மருந்து தேடுபவனே சிறந்தவன். தவம் ஒன்றுதான் அத்தகைய மருந்து.அதற்கு நிகரானது அது ஒன்றே! என்று சனத்குமார முனிவர் கூறியதைக்கேட்ட தேவர்கள்சனத்குமார முனிவரை நோக்கிஅடிகளே! தேவருலகில் சுதருமேந்திரன் உங்களை புகழ்ந்து பேசினான்.துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதோடு நூற்றுக்கணக்கான நோய்களையும் நூறாண்டு காலம் பொறுத்துக் கொண்டு கடுந்தவம் செய்தவர்கள் தங்களை தவிர வேறு எவரும் இலர் என்று சுதருமேந்திரன் கூறியதை நம்பாமல் உங்களை நேரில்  காண்பதற்கென்றே மருத்துவர் வடிவில் வந்து உங்கள் பெருமையை அறிந்தோம்.உங்கள் தவ ஆற்றலுக்கு எங்கள் பணிவான வணக்கம்என்று வாழ்த்தினர். பின்னர் மருத்துவ பைகளை ஒரு பழ வாவியுள்(பாழ டைந்த குளம்) எறிந்து விட்டு விண்ணுலகம் சென்று சுதருமேந்திரனிடம் நிகழ்ந்ததை கூறினர். அந்த வாவி(குளம்) யின் நீர் நோயாளிகளின் நோயை தீர்க்கும் திறம் பெற்றதாயிற்று.
      சனத்குமார முனிவர் கடுந்தவமியற்றி உள்ளடங்கு இயற்கை ( சமாதி மரணம் ) எய்தி சனத்குமார கல்பம் என்னும் விண்ணுலகத்தில் பிறந்து இந்திரனாகி ஏழு சாகரோபகால வாணாள்  பெற்றார்.
      
சனத்குமாரரை வழிபடும் அன்பர்கள் அவரைப் போன்ற உயர் பண்புகள் பெற்று விண்ணுலக இன்பங்களை எய்துக !

(முற்றும் )



**************************** 

No comments:

Post a Comment