நீலகேசி - உரைகள்





கடவுள் வாழ்த்து    

பாடல் # 1


நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு
மில்லா னுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ்
சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மை யினா
னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேத்தி.

(நல்லோரால் வணங்கப்படுபவன்; பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகிய நால்வகைத் துன்பங்களும் இல்லாதவன்; அனைத்து உயிர்களுக்கும் துன்பங்களைப் போக்கி, உயரிய நல்லின்பத்தை அளிக்கக்கூடிய திருமொழியை அருளியவன்; ஆதி தீர்த்தங்கரர் காலம் தொடங்கி தன்மை வாய்ந்த அறத்தின் ஒளியை உடையவன்; மூவுலகங்களிலும் முக்காலங்களிலும் நடக்கும் நிகழ்வுகளை ஒரே நேரத்தில் முழுதும் உணரும் வாலறிவன்; அத்தகைய அருகனையே இறைவனாகப் போற்றி வணங்குவோம்.)
------------------


உரைகள்:

1. தர்ம உரை  -  (1)


பாஞ்சாலம் என்ற நாடு நீர் நிலவளங்கள் நிறைந்தது. அழகிய காட்சிகளை உடையது. அதன் மன்னனாகிய சமுத்திரசாரன், அந்நாட்டின் தலைநகராகிய புண்டரவர்த்தனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். நகர்ப்புறத்தில் பலாலயம் என்றொரு மயானத்தில் ஒரு காளி கோயிலிருந்தது. அதனருகில் முனிசந்திரர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் அந்நகர மக்கள் காளி கோயிலில் பலியிடும் படி எண்ணற்ற ஆடு மாடுகளை ஓட்டி வந்தனர். முனிவர் கொல்லா நோன்பியராதலால், இத்தனை உயிர்கள் கொலை செய்யப்பட வருவது கண்டு மனங் கலங்கினார்.

எனவே, அவர் அம் மக்களைப் பரிவுடன் நோக்கி, "இத்தனை உயிர்களைக் கொல்ல நீங்கள் எதற்காக முனையவேண்டும்? இதனால் நீவிர் அடையும் பயன் என்ன?'' என்று வினவினார். மக்கள் அவரைக் கைகூப்பி வணங்கி, "பெரியீர்!, எம் அரசன், நெடுநாள் மகவில்லாதிருந்து ஒரு மகனைப் பெற்றான். இறைவி அளித்த இப்பெரும் பரிசிற்காக இவ்வுயிர்களைப் பலியாகத் தந்து எம் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து வழிபாடாற்ற வருகிறோம்'' என்றார்கள்.

முனிசந்திரர் "அன்புடையீர், பிறப்பும் இறப்பும் அவரவர் வினைப்பயனேயன்றி, இறை செயலாகமாட்டா. அப்படியே இறைவன் தலையிட்டு இந் நன்னிகழ்ச்சி ஏற்பட்டதென்று கொண்டாலும்கூட, அதற்காக இவ்வுயிர்களைக் கொல்வது என்ன பயன்தரும்? உயிர்க் கொலையால் தெய்வம் சினமடையுமேயன்றி மகிழுமா?

உம் நன்றியை எப்படியும் வழக்கம் பின்பற்றித் தெரிவித்தல் வேண்டுமானால், உயிர்களைக் கொல்லாமலே அவற்றைப்போன்ற களிமண் வடிவம் சமைத்துப் பலியிட்டுக் கொள்ளலாமே. அவ்வாறு செய்வதனால் உம் வழிபாடும் குறைவுபடாது; இறையும் மகிழும். உங்களுக்கு இத்தனை உயிர்களைக் கொல்லும் பழியும் நேராது. கொல்லாமை சார்ந்த வழிபாடே உண்மை வழிபாடாம்'' என நயம்பட உரைத்தார்.

முனிசந்திரர் அறவுரையின் மேம்பாடும், நலமும் உணர்ந்து, மக்கள் அவர் கருத்துக்கிணங்கி உயிர்களைக் கட்டவிழ்த்து விட்டனர். பின் அவர்கள் களிமண் வடிவங்களாலேயே பலியிட்டுவிட்டு, மகிழ்ச்சியும் நிறைவும் உடையவராய் மீண்டனர். ஆனால் காளிதேவி, தன் மக்கள் வழக்கமாகத் தரும் குருதியுணவு பெறாது துயரடைந்தாள்.

தன் அடியவர்களைத் தன்னிடமிருந்து நல்மொழியால் விலக்கிய இம் முனிவனை ஒறுத்துப் பழிக்கும்பழி வாங்கவேண்டுமென்று அவள் உள்ளம் துடித்தது. ஆயினும், யோகத்தில் வல்ல முனிவரிடம் தன் மாயம் செல்லாது என்று உணர்ந்து செயலற்றிருந்தாள்.

காளிகளிடையே முடிசூடா அரசியாய் விளங்கியவள் மாகாளி நீலி அல்லது நீலகேசி. அவள் தமிழ்நாட்டில் பழையனூரில் புகழுடன் வாழ்ந்து வந்தாள். மனிதரைத் தெய்வங்கள் அடக்கி ஆள்வது போல், அவள் தெய்வங்களை அடக்கி ஆண்டு வந்தாள். பலாலயத்துக் காளி, தனக்கு நேர்ந்த இன்னலை நீலகேசிக்குச் சொல்லியனுப்பி, அவள் உதவி கோரினாள். நீலகேசியும் தன்னிடம் தோழமை கொண்ட காளியின் துயர் தீர்க்க எண்ணி அப்பணிக்கு ஒருப்பட்டாள்.

பலாலயத்தின் மயானத்தை அடைந்து நீலகேசி, தன் கூளிகளையும், பூதங்களையும், மாய உருக்களையும் ஏவி, முனிவனைச் சூழச் செய்து அச்சுறுத்தினாள். ஆனால் யோக உறக்கம் உறங்கியிருந்த முனிவரை, அவை எதுவும் அசைக்க முடியவில்லை. தன் ஆற்றலால் அடைய முடியாத வெற்றியைச் சூழ்ச்சியால் பெற எண்ணி, அவள் அந்நாட்டரசன் மகளாகிய காமலேகை யுருவில் அழகிய தோற்றம் தாங்கி அவனிடம் சென்றாள்.

அரச நிலைக்குரிய ஆடையணிகளுடன் அவள் அவனிடம் காதல் நாடகம் நடிக்கத் தொடங்கினாள். முனிவன் முக்கால உணர்வுடையவனாதலால், அவள் உருக் கண்டு நகைத்து "நீ பெண் அல்ல; பழையனூர்க் காளி நீலி என்றறிவேன். நீ விரும்புவது காதலன்று; என் அழிவே.

ஆனால் நோன்பு விமையுடைய என்னிடம் உன் செயல்கள் எதுவும் ஈடேறாது'' என்றான். அவர் யோக வலிவு கண்டு நீலகேசி வியப்படைந்து, அவர் காலில் விழுந்து, தன் தீயெண்ண முழுதும் ஒப்புக்கொண்டாள். மேலும் அவள் தன் மாய ஆற்றலினும் பன்மடங்கு ஆற்றலுடைய அவர் தன்மையைப் பாராட்டித் தன் தீ வழியினின்றும் தன்னைக் கரையேற்றி நல்வழிப்படுத்துமாறு அவரை வேண்டினள். முனிவர் அவள் பக்குவ நிலையையறிந்து, சமணநெறியை அறிவித்து அவளுக்கு அறிவு கொளுத்தினார்.

தன் கோர உருவாலும் செயலாலும் மக்களை அச்சுறுத்திய கொடுங்காளியாகிய நீலகேசி, முனிவர் அருள் திறத்தால் தன் இயல்பு முற்றும் மாறினாள். உலக வாழ்வின் தன்மை (சம்சாரம்) இது என்பதையும், இன்ப துன்பங்களின் மூலம் இது என்பதையும், விடுதலை வகை யாது என்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் முனிவர் அறிவுரையால் அவள் அறிந்து விளக்கமெய்தினாள்.

"உலகத் தொகுதி (பிரபஞ்சம் மூன்று பகுதிகளை உடையது. அவை மேல், கீழ், நடு பகுதிகள். கீழ்ப்பகுதி ஒன்றின்கீழ் ஒன்றாக ஏழு உலகங்களை உடையது. இவையே ஏழு நரகங்கள். இவற்றின் கீழே மீளா நரகமாகிய நிகோதம் அமைந்துள்ளது. நிகோதத்தில் சேர்ப்பவர்கள் மீள்வதில்லை. ஆனால் மற்ற ஏழு நரகங்களிலும் சென்று சேர்பவர்கள் தம் பழந்தீவினைப் பயன்களை முற்றும் துய்த்தவுடன் மீண்டும் நடு உலகில் வந்து பிறப்பர்.

இவ்வுலகிலேயே மக்களும் மாக்களும் ஆகிய உயிரினங்கள், ஓரறிவு உயிர்கள் முதலாக ஆறறிவுயிர்ரீறாகப் பல வகைப்படும். நடு வுலகத்திற்கு மேலுள்ள உலகங்கள், தேவருலகத்தின் பாற்படும். இம்முப்பகுதிகளும் சேர்ந்ததே உலகத்தொகுதி (பிரபஞ்சம்)'' என்று முனிசந்திரர் விளக்கினார்.

உலகத் தொகுதியில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து உழல்பவை. அச்சூழற்சியிலிருந்து விடுதலை பெறும்வகை நடு உலக வாழ்வில் மட்டுமே உண்டு. நடுப்பகுதியிலும் சில இடங்களில் மட்டுமே விடுதலைக்கு வேண்டும். நோன்பு, தவம் முதலியவை இயற்றுவதற்கான சூழ்நிலைகள் காணப்படும். இத்தகைய இடங்களையே நன்னிலங்கள் (கர்ம பூமிகள்) என்று கூறுகிறோம். நீலகேசி போன்ற தெய்வங்கள் மேலுலகங்களில் வாழ்பவர்கள். எனவே, அவர்கள் நடுநிலத்து அறவோரை விடத் தாழ்ந்த நிலையையே உடையவர்கள். ஏனெனில், அவர்களைக் கண்டு அஞ்சுபவர்கள் தீயவர்கள் மட்டுமே. எப்பகுதியிலும் நல்லவர்கள், அவர்களைப் பழித்து இழிக்கவே செய்வர். அவர்கள் தம் அடியவர்களை விடுவிப்பதற்கு மாறாக மென்மேலும் அடிமைக் கட்டில் இறுக்கவே உதவுவர்.




விடுதலை பெற வேண்டின், மூன்று வழிகள் உள. அவை அமுதம்போல் அழியா வாழ்வு தரத்தக்கவை. அவை நன் ஞானம், நற்காட்சி, நல்லோழுக்கம் ஆகியவை. உலகம் உய்யும்படி சஞ்சீவிகளான இந்நெறிகள் அறிவுமயமான வரும் அன்பு மயமான வருமான ஜினபகவானால் அருளப்பட்டவை. இவற்றை மேற் கொண்டவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடையவராய், உள மொழி மெய்கள் மூன்றினாலும், எவ்வுயிர்களுக்கும் துன்பம் உண்டு பண்ணா முறையில் வாழ்பவர்.

முனிசந்திரர் கூறிய அருள் நெறியைக் கேட்ட பின் நீலகேசியின் அறிவுக் கண் திறந்து, அதை மூடியிருந்த அறியாமை இருள் அகன்றது. அவள் அருள் உருவினனும் அறிவு உருவினனும் ஆகிய ஜினனையும் அறத்தையும் (ஜின தர்மத்தையும்) பாடிப் பரவினாள். தன் பழைய குருதி வாழ்வை வேம்பென வெறுத்தாள். அதனின்றும் தன்னைக் கரையேற்றி அறிவொளி தந்த குருவினிடமும், தலைவனாகிய ஜினனிடமும், தன் கடமையையும் நன்றியையும் தெரிவிக்கு முறையில், அவள் பல நாடுகளிலும் சமண அறவொளியைப் பரப்புவதென்று உறுதிகொண்டாள்.

தர்ம உரை - உரை முற்றும்

------------

2. குண்டலகேசி வாதம்

ஜின பகவன் கோயிலை வலம் வந்து வணங்கிய பின், நீலகேசி தான் அடைந்த புதிய அற நெறியாகிய சமண சமய நெறியை எங்கும் பரப்பும் எண்ணங் கொண்டவளாய், முதலில் புத்தரிடம் வாதிடுவதென்று தீர்மானித்தாள். இம்முடிவுக்குக் காரணம் புத்த நெறியினர் அக்காலத்தில் ஊனுண்பதை ஆதரித்து ஊக்கியும், உயிர் (ஆத்மா) இல்லை என்று மறுத்தும், சமயக்கோட்பாடுகளைப் புறக்கணித்தும் வந்ததேயாம். முனிவரிடமிருந்து அவள் பெற்ற அருள் திறத்தால் புத்த நெறி பரப்பி வந்தவர்களுள் சிறந்தவள் குண்டலகேசி என்றறிந்து, அவளிடம் வாதிடச் சென்றாள்.

அச் சமயம் குண்டலகேசி தென் பாஞ்சால நாட்டின் தலைமையிடமான காம்பிலி நகரில் வாழ்ந்து வந்தாள். அங்கே சமயப் போருக்கு அனைவரையும் அழைக்கும் அறிகுறியாக ஓர் மரத்தடியில் தருக்குடன் வீற்றிருந்தாள். அவளிடம் வாதிடும் துணிவும் இன்றிப் பணியும் விருப்பும் இன்றி அரசனும் மக்களும் அவள் முன் வாராது ஒதுங்கியிருந்தனர்.

அவளிடம் கொண்ட அச்சத்தால் நகர் ஒளியிழந்திருந்தது. நீலகேசி வாயில் காப்போன் மூலம் அரசனிடம் குண்டலகேசியின் அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்ததும், அவன் அகமகிழ்ந்து மக்களனைவரையும் திரட்டிக்கொண்டு வந்தான். அரசன் நடுவனாயிருந்து சொற்போர் தொடங்குவித்தான்.

குண்டலகேசியின் விருப்பத்திற்கிணங்க வெற்றி தோல்விகளுக்கான பரிசும், ஒறுப்பும் முடிவு செய்யப்பட்டன.

குண்டலகேசியே அவள் தன் சமய உண்மைகளை வரையறுத்துக் கூறும்படி நீலகேசி கேட்க, அவள் கூறத் தொடங்கினாள்.

குண்டலகேசி : எங்கள் சமயத்தின் அடிப்படை உண்மைகள் மரபுரை (ஆப்தம்) தெய்வமொழி (ஆகமம்) பொருள் விளக்கம் (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை.

எங்கள் சமயத்தின் தலைவர் புத்த பகவான். அவர் பரம்பொருள். உலகின் தொடக்க கால முதலிலிருந்து என்றுமுள்ளவர். ஊழி பேடூழியாக (கற்ப கற்ப காலமாக) உலக வாழ்வில் புகுந்து வாழ்ந்து தம் நலம் என்ற எண்ணம் சிறிதுமின்றி உலகுயிர்களுக்குப் புத்தநெறியை ஊட்டியவர் அவர். அவர் அருளிச் செய்த மூன்று பிடகங்களே (மறைகளே) எங்கள் முதல் நூல்கள்.

நீலகேசி : புத்த பகவான் தொடக்க முதலே முழுநிறைவுடைய பரம் பொருளானால், நூறாயிரம் பேடூழிகளாக அவர் உலகவாழ்வில் ஈடுபட்டுத் திரிவானேன்? தொடக்க முதலே அவர் நிறைவுடையவரானால், அவ்வீடுபாட்டின் பயன் யாது? வாழ்க்கையீடுபாடு, முன்வினையின் பயன் ஆகும். அவர் ஈடுபாடு எவ்வினையின் பயன்? அது முன்வினையின் பயனானால் அவர் தொடக்கத்திலேயே நிறைவுடையராதல் எவ்வாறு? அவர் தம் நலம் பற்றிய கருத்தேயின்றி, உலக நலத்துக்காகவே இங்ஙனம் ஈடுபட்டார் என்றால், அதை ஏன் தொடராது நிறுத்தினார்? கோடிக்கணக்கான உயிர்களை உழலவிட்டு தான் மட்டும் வீடு (நிர்வாணம்) பெறுவானேன்.

உயிர்கள் எல்லாவற்றின் நலத்துக்காகவே மூன்று பிடகங்களையும் புத்த பகவான் அருளினார் என்றாய். அப்படியானால், அவர் ஊனுண்ணலை ஒறுக்காததேன்? மறுக்காததுடன் மட்டுமல்ல, அதற்கு அவர் தூண்டுதலும் ஆதரவும் கூடச் செய்திருக்கிறாரே. ஒழுக்க நெறியின் அடிப்படையாகிய உயிரையே மறுக்கும் நீங்கள், ஒழுக்க உயர்வுப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்?

தலைவரைப்பற்றி நிலை இது. உலகைப் பற்றிய உங்கள் கருத்து யாதோ?

குண்டலகேசி : பேருலகு (அண்டம்) ஐங்கந்தங்கள் (ஸ்கந்தங்கள்) ஆகிய மூலப் பொருள்களாலானது. இம் மூலப்பொருள்கள் கணத்திற் றோன்றி மறைவன; உலகும் அதனைப்போன்றே கணத் தோற்றமாகி பொய்ம்மை நிலை (உறுதியற்றுக் கணந்தோறும் மாறும் நிலை) உடையது.

நீலகேசி : ஆம். இதுவே உங்கள் கண கழிவுவாதம் (க்ஷணபங்கவாதம்). இதன்படி மூலப் பொருள்களுள் ஒவ்வொன்றும் மறு பொருள் தோன்றுவதன் முன் இறந்து படுகின்றது என்று கொள்கிறீர்கள். ஒரு நிகழ்ச்சி அதன் முன்னைய நிகழ்ச்சிகளுடன் எத்தகைய தொடர்பு மற்றதாகிறது. இதனை நீங்கள் நிகழ்ச்சிப் பொய்ம்மை வாதம் (அசத் காரிய வாதம்) என்று கூறுகிறீர்கள்.

எனவே, நிகழ்ச்சிகளிடையே காரண காரியத் தொடர்புக்கு வழியில்லை. அப்படியானால், வான் மலர (ஆகாச புஷ்பம்) போன்ற இன்மை நிகழ்ச்சி ஏற்பட தடையில்லையல்லவா? காரண காரியத் தொடர்புக்கு இணைப்பாகப் பற்றுத் தொடர்பு (வாசனை) என்ற தத்துவம் கொள்ளப்படின், நிகழ்ச்சிகளிடையே ஒருவகை தொடர்பு ஒப்புக்கொள்ளப் பட்டுவிடும். கண கழிவு வாதமும், இன்மை வாதமும் இதனுடன் பொருந்தாது.

தத்துவ விளக்கம் கிடக்கட்டும். புத்தர் அருங்குணங்களை விளக்கும் போதிசத்துவர் (புத்தர் பழம் பிறவிகள்) கதைகளில் அவர் தம்மிடம் வந்து கேட்பவர்க்குத் தம் தலையும் கண்ணும் ஊனும் குருதியும் மக்களும் முதற்கொண்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பொருளைக் கொடுப்பவர் கொடையின் உயர்வு பெறுபவர்க்கு அவை பயன்படும் அளவேயாகும். தலை வேண்டியவர் தலையில்லாது முண்டமாகச் சென்றனரா? இது பொருளற்ற பொருந்தாக் கூற்றாயிற்றே?

இக்கொடைச் செயல்கள், இந்திரனால் போதி சத்துவர் சோதனைக்குட்பட்ட காலை எழுந்தன என்கிறீர்களா? நிறைவுடைய போதிசத்துவருக்குச் சோதனை ஏன்? தேவனாகிய இந்திரனுக்கு அவர் நிறைவை அறிய முடியாதா?

அவை எதற்கும் விடை பகர முடியாது குண்டலகேசி விழிக்கவே, அவள் அரசனால் அவமதிப்புடன் அனுப்பப்பட்டாள். நீலகேசி அனைவராலும் புகழப் பெற்றாள். பின், நீலகேசி குண்டலகேசியின் ஆசிரியரான அர்க்க சந்திரனைத் தேடிச் சென்றாள்.

குண்டலகேசி வாதம் - உரை முற்றும்
------------

அர்க்க சந்திர வாதம்

அர்க்க சந்திரன் உச்சயினி நகரில் வாழ்ந்தான். அவன் சொற் போரில் புலி எனக் கருதப்பட்டான். நீலகேசி அவனை அடைந்து வாது தொடங்கினாள். வாதப்பொருள் புத்தர் வினயபிடிகத்திற் கண்ட ஒழுக்க முறை பற்றியதாயிருந்தது. புத்தசமயக் கொள்கைகளுக்கும், புத்த சமயத்தைப் பின்பற்றியவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைக்கும், இடையிலுள்ள பெருத்த வேற்றுமையை நீலகேசி எடுத்துக்காட்டினாள். கொள்கைகளுள் சில நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்கவையாகக்கூட இல்லை.

புத்தர் பிறப்புக் கதைகள் (ஜாதகக் கதைகள்) பலவற்றில் போதிசத்துவர் தம் மனைவியையும் மக்களையும் கூட இரவலருக்குக் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து இரவலர் கேட்டதையெல்லாம் கொடுப்பதே உயர் நெறி என்று கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் தெளிந்த அறிவுடைய எந்தப் புத்தரும், இன்று இக்கொள்கையைப் பின்பற்றித் தம் மனைவியை ஆண்டி ஒருவன் கேட்டால் கொடுப்பான் என்று எதிர்பார்க்க முடியாது.

அடுத்தபடியாகப் புத்த சங்கத்தில் புகுந்துள்ள பல புதிய பழக்கங்களை நீலகேசி எடுத்துக்காட்டினாள். சங்க தத்த ஸ்தவிரன் என்ற புத்த மடத்துறவி புத்த கோட்டத்தில் ஒரு பெண் துறவியைக் கண்டு அவளைத் தன்னுடன் கூடியிருக்குமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. பெண் துறவி, கோட்டம் தூய இடமாயிற்றே; இச் செயலுக்கு இவ்விடம் ஏற்றதல்ல என்றாளாம். சங்கதத்தன்; துறவியர்க்குக் கோட்டமும் வீடும் ஒரே நிலையையுடையவைதான் என்று ஒழுங்கு கூறி யமைந்தானாம்.

இன்னொரு துறவி, ஒரு பெண்ணின் இறந்த பிணத்தைத் தழுவினான். இது கண்டு கடிந்த ஒருவரிடம், அவன் பிணத்துக்கும் உயிருள்ளவர்க்கும் இடையே அறிஞர் காணும் வேறுபாடு யாது? ஒன்று பிணமாய் விட்ட உடல்; மற்றொன்று பிணமாக இருக்கும் உடல். வேற்றுமை அவ்வளவுதானே என்றானாம். (இன்னோரிடத்தில் துறவி யொருவன், பெண் துறவி ஒருத்தியை இணக்குவிக்கையில் சிற்றின்பம் சமயத்துக்கு எதிரான தீமையன்று; மக்கள் வாழ்க்கைக் குழுவின் (சமூகத்தின்) கருத்துக்கு மாறானது மட்டுமே மக்களுக்குத் தெரிந்து அவர்கள் புண்படாத வகையில் நடந்தால் துறவியர்க்கு இழுக்கொன்றுமில்லை என்று பேசினான்.

இங்ஙனம் புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளும் மனித ஒழுக்கத்தின் அடிப்படை ஒழுங்குகளும் பல வகையில் சமய நூல்கள் மூலமே புறக்கணிக்கத் தூண்டுதல் தரப்பட்டிருக்கின்றன. ஒழுங்குகளைத் தளர்த்தி ஒழுங்கின்மையைத் தூண்டும் இத்தகைய தெளிவான விலக்குகள் பதினெட்டை நீலகேசி எடுத்துக்காட்டினாள்.
மேலும் துறவினை மேற்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் புத்த துறவிக்கு, எத்தனையோ ஆடையணி வகைகள் உரிமையாக்கப்படுவது பொருத்தமற்ற செயல். புத்தசமயம், எல்லா உயிர்களுக்கும் அருளும் அன்பும் காட்ட வேண்டும் என்று கூறுகிறதாயினும், ஊனுண்ணலுக்குப் பக்க மேளம் கொட்டுகிறது. வீடு பேற்றுக்கு வழி, ஒழுக்கமே என ஒருபால் பறை சாற்றுகிறது; மறுபால் பாழ்க்கோட்பாடு (சூனியவாதம்) பேசி ஒழுக்கத்தின் அடிப்படையான உயிர் (ஆத்மா) இப் பொருள் என்று கூறுகிறது.

எல்லாப் பொருள்களும் மலமுடையவை என்று கூறினும், புத்தர் சிலைக்கு மலரும் பூசையும் தரப்படுகின்றன. எல்லாப் பொருள்களும் கணந்தோன்றி மறையும் நிலையாமை உடையவை என்று கூறிக்கொண்டே பாரிய கோயில்களும் மடங்களும் எழும்புகிறது. உயிர்த்தொடர்பும் மறுபிறப்பும் மறுக்கப்படுகின்றன; புத்தர் பிறப்புக்களில் மேற்கொண்ட விலங்கு, பறவையுருக்கள் வணங்கப்படுகின்றன. இங்ஙனம் வழிபடப்படும் இத் தெய்வ உயிர்களும், பசிக்கு உணவாகப் பயன்படுவதில் குறையில்லை.

இக் குளறுபடிகளைக் கேட்டு அர்க்க சந்திரன் மனங்குழம்பிப் புத்தசமயத் திட்டங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டான். புத்தர் பேசும் கொல்லாமையும் ஒழுக்கநெறியும் வாய்ப் பசப்பே என்பதை உணர்ந்து நீலகேசியால் அருளுரைக்கப்பட்ட சமண அறத்தை மேற்கொண்டு அவனும் சமண அறத்தின் மும்மணிகளை வழிகாட்டியாகக் கொண்டு உய்ந்தான்.

அர்க்க சந்திர வாதம் - உரை முற்றும்

------------

மொக்கல வாதம்


அடுத்தபடியாக நீலகேசி பதுமபுரம் சென்று புத்தரின் நேர் மாணவரான மொக்கலன், சாரிபுத்திரன் ஆகிய இருவருள் ஒருவனான மொக்கலனை அடைந்து புத்தமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி வாதிட்டாள். இவ்வாதத்தில் பெரும் பகுதி சமணக் கோட்பாடுகள் பற்றிய புத்தர் கண்டனங்களுக்கு விடை தரும் முறையில் அமைந்துள்ளது. (பெரும்பாலும் இவ்வாதப் பகுதி புத்த தமிழ்க் காவியமாகிய குண்டலகேசியின் இறந்துபட்ட பகுதிகளுக்கு மறுப்புரைகளாயிருக்க வேண்டும்).

நீலகேசி புத்தத் துறவிக்கும் சமணத் துறவிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறாள். வெளித் தோற்றத்திலேயே சமணத்துறவியர் ஆடையைத் துறந்த எளிய வாழ்வு உடையவர். புத்தத் துறவியரோ பலவகைத் தையல்கள் வாய்ந்த பல பேருடைகளை அணிந்தனர். இவ்வுடை வண்மை துறவுக்கு அறிகுறியாகாது. தொடக்க காலத்தில் புத்தரும் கந்தைகளைப் பொறுக்கித் தைத்த உடைகளையே அணிந்தனர்.

பழைய எளிமை கைவிடப் பட்டபின் குருட்டுத்தனமாகப் பொருளற்ற முறையில் பகட்டான துணிகளும் அதேபோன்று தைக்கப்பட்டன. அதோடு கந்தை நிறத்தை உண்டு பண்ணவே தொடக்கத்தில் காவி நிறச் காயமேற்றப்பட்டது. ஆடை, தையல், சாயம் முதலியவற்றுக்கான தொழில்களால் துறவியரிடையேயும் உலக வாழ்வு பெருகியதை விளக்கி நீலகேசி நகையாடினாள்.

மொக்கலன் இது கண்டு சினங்கொண்டு, "நான் வாதத்தில் இரணியனை வென்றவன். அவளேபோல் நீயும் இழிவு பட்டே போவாய் என்பது உறுதி" என்றான். நீலகேசி ஒருவரை வென்றாயானால், நான் இருவரை வென்றிருக்கிறேன். குண்டலகேசியும், அர்க்கசந்திரனும் என்னிடம் தோற்றுப் பணிந்தனர்" என்றாள். மொக்கலன் அதுகேட்டு வியப்படைந்தான்.

மொக்கலன் சமண நெறியின் கொள்கையாகிய இயக்கதத்துவம் (தர்மம்) நிலைத்தத்துவம் (அதர்மம்), காலம், வான் (இடவெளி) உயிர் (ஜீவன்) பொருள் (புற்கலம்), நல்வினை, தீவினை, கட்டு (பந்தம்), வீடு (மோக்ஷம்) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இவற்றைப் பற்றிச் சமண ஆசிரியரான நாதகுப்தர் வாதிட்டுக் குண்டலகேசியிடம் தோற்றார் என்றார். குண்டகேசியின் வாதங்களையே மொக்கலன் கூற, நீலகேசி அவற்றிற்கு விடையிறுத்தாள்.

இயற்கையிலடங்கிய ஆக்கப் பொருள்களாகிய ஐந்து மூலப்பொருள்களுள் (அஸ்திகாயங்களுள்) இயக்கம் (தர்மம்) நிலை (அதர்மம்) ஆகிய இரண்டு அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிப் பலர் தப்பெண்ணங் கொள்கின்றனர்; இயக்கம் பொருள்களியங்க இடந்தருவது, இயக்குவிப்பதன்று. கடலில் நீரின் தன்மை இருப்பதால், கப்பல் ஓட முடிகிறது. ஆனால் ஓட்டுவது காற்று முதலியவற்றின் ஆற்றல். இயக்க தத்துவம் நீரின் தன்மை போன்றது; காற்றின் ஆற்றல் போன்றதன்று. அதுபோலவே, நிலை (அதர்மம்) இயக்கத்தைத் தடுக்க இடம் தருவது. தடுக்கும் ஆற்றல்கள் வேறு.

ஒன்றுக்கொன்று மாறான இத்தன்மைகள் எங்ஙனம் பொருந்தும் என்ற மயக்கத்திற்கு நீலகேசி விடையிறுத்தாள். இயக்கமில்லாமல் உலக வாழ்வு இல்லை. மாற்றம் இல்லை. ஆனால் நிலை இல்லாமல் மாறுபாடிடையே தொடர்ச்சி இராது. எனவே, இரண்டும் ஒத்தியல்வதே உலகு' என்று அவள் தெளிவுபடுத்தினாள்.

நீலகேசி : புத்தராகிய நீங்கள் உலகின் ஆக்கப் பொருள் ஐந்து கந்தங்கள் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் உலகின் எல்லைக்கப்பாலுள்ள தெய்வ உலகு, நரகு எப்படிப்பட்டவை? காலம் என்ற ஒன்றில்லை என்கிறீர்கள். ஆயினும் நொடிகளைப் பற்றியும் பெடூழி (கற்பங்)களைப் பற்றியும் பேசுகிறீர்கள். வானகோளங்கள் பொய் என்கிறீர்கள். ஆனால் வானநூலின்படி எதிர்காலப் பலன் கூறுகிறீர்கள்.

உயிரின் உண்மையை மறுக்கிறீர்கள். மறை (ஆகமங்)களாலன்றிக் கண்கூடு (பிரத்தியக்ஷம்) உய்ந்தறிவு (அனுமானம்) ஆகிய அளவையால் அதனை நிலைநாட்டக் கூடுமா என்கிறீர்கள். உங்கள் ஐந்து கந்தங்களுள் அறிவுக் கந்தமும் இதுபோன்றதுதானே. உள்ளுணர்வால் அறியக் கூடுவதாயின், உயிரும் அப்படியே? மறைமொழியால் காணப்படுவதெனின், அது உங்களுக்கு உடன்பாடன்று ஆயிற்றே?

தேவர்கள் பற்றிய கதைகளைக் கூறுகிறீர்கள். அவர்கள் கண்கூடாகவோ, உய்த்தறிவாலோ அறியக் கூடாதவராயிற்றே? மறையுரையால் மட்டும்தானே அறியப்படக்கூடும்? அம்மறைகளே (புத்தசாதகங்கள்) மறுபிறப்புகளை ஏற்பதால் உயிரையும் ஏற்பவை ஆகின்றனவே? உயிர் உடலின் உருவுடையது என்ற சமணரின் கொள்கையை மொக்கலன் எதிர்த்தான்.

நீலகேசி : உயிர் உடலுடன் சேர்ந்தியங்குவது என்பதே இதன் பொருள். உயிர் ஓர் அணு என்ற கருத்தை எதிர்க்கவே இங்ஙனம் கூறப்பட்டது. உயிர் அணுப்பொருளாயின், அது உடலின் ஓரிடத்திலேயே இருக்கும். உடலின் பகுதியாய்விடும். ஆனால் உயிர், உடல்போன்ற பருப்பொருளன்று. உடல் முழுதும் இயங்கும் ஆற்றல். ஆகவே, வடிவற்ற அதன் தன்மை உடல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இது பொருத்தமற்ற கூற்று என்று கூறிவிட முடியாது. ஏனெனில் புத்தர் கொள்கைப்படி அறிவுக் கந்தத்தின் செயலாலேயே ஊறு உணர்ச்சி ஏற்படுகிறது. 

ஊறு உணர்ச்சி உடல் முழுமையும் பரந்து இருப்பது. எனவே, அறிவுக்கந்தமும் உடல் முழுவதும் பரந்து நிற்பதாகிறது. அறிவுக் கந்தம் உடல் முழுமையும் பரந்திருப்பது கூடுவதானால், உயிரின் ஆற்றலும், உடல் முழுவதும் பரந்திருப்பது கூடுவதேயாகும்.

மொக்கலன் : உயிர் அறிபொருள் (சேதனம்); உடல் அறிவில் பொருள் (அதேசனம்). இங்ஙனம் மாறுபட்ட தன்மை உடையவற்றுக்கிடையே தொடர்பு இருத்தல் எவ்வாறு? உடலுக்கு ஊறுவந்தால் உயிர் வருந்துவானேன்? இது காளை காலிடறிக் கழுதை நொண்டியாயிற்று என்பது போன்றதல்லவா?

நீலகேசி : உயிர், உடல் முழுவதும் பரந்து நேரிடையாகவே உணர்கிறது என்பது சமணக் கோட்பாடு. அதற்கு இடையீடு எதுவும் வேண்டுவதில்லை. (உடல் அறிகருவி மட்டுமே). நீங்கள் கூறும் மறுப்பு உங்கள் நிலையை மறுப்பதேயன்றிச் சமணர் நிலையையல்ல. உயிர்வேறு; அறிவு வேறு; உயிரில் பொருள் ஆகிய உலகு (பிரகிருதி) வேறு, என்ற உங்கள் கோட்பாடும், வேறுவேறு கந்தங்கள் கோட்பாடும் இம்மறுப்புக்குப் பெரிதும் இடம் தருபவை. ஏனெனில், தொடர்பற்ற இவை ஒன்றுக்கொன்று காரணகாரியமாதல் எங்ஙனம்!

மொக்கலன் : சமணர் காரண காரிய ஒழுங்குப்படி காரியம் நிகழும்போது, காரணமும் உடனிகழவேண்டுமென்று கூறப்படுகிறதே. அப்படியானால், நல்வினைப் பயன்நாடிக் கோயில் கட்டுபவன் உடனடியாகவே அதன் பயனை அடையவேண்டுமன்றோ? பயன் பிற்பட்டுக் காணப்படுமென்றால், அதன் முன் காரணம் அழிந்து படுமே.

நீலகேசி : புத்தர் நெறிப்படி காரணம் அழிந்தபின் காரியம் நிகழும். இது இல்காரியக் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப்படும். நீங்கள் இதனை மனத்துட்கொண்டே பேசுகின்றீர்கள். சமணர் கோட்பாடு உள் காரியக் கோட்பாடு (சத்காரியவாதம்) எனப்படும். ஆனால் உங்கள் மறுப்பு, சாங்கியர் உள்காரியக் கோட்பாட்டைக் கருதிய மறுப்பேயாகும். சாங்கியர், காரணமும் காரியமும் ஒன்றே என்பர். சமணர் உள்காரியக் கோட்பாடு இவ்விரண்டு நிலைகளினின்றும் வேறுபட்டது.

காரியம் காரணத்தின் வளர்ச்சி ஆதலின், அதன் தொடர்ச்சி என்றும் ஆயின், அது காரணமன்று என்று ஒப்புமையில் வேற்றுமை கற்பிப்பது. உலகியலில் சமணர் கொண்ட கொள்கைக்கு இது ஒத்ததேயாகும். புத்தர்போல் உலகு தொடர்ச்சியற்ற மாற்றங்கள் என்றும் கொள்ளாது, வேறு சிலர்போல் மாறுபாடற்ற ஒரே நிலைப்பொருள் என்றாவது கொள்ளவில்லை.

மொக்கலன் : சமணர் துன்பத்தை மேற்கொள்வதே நோன்பு (தவம்) என்கின்றனர். இதனால் நல்வினை வரும் என்று கருதப்படுகிறது. ஆனால் துன்பம் தீவினைப் பயனாயிற்றே. ஆகவே, தவம் செய்பவன் முன்னைய தீவினையை நுகர்கிறான் என்றாகிறது. இதனால் நல்வினைப் பயன் வருமென்பது எவ்வாறு?

நீலகேசி : சமணத்துறவி மேற்கொள்ளும் துன்பம் தீவினைப் பயன் அன்று. ஏனெனில், அதுதானே அவனை வந்தடைவதன்று அவனாக விரும்பி மேற்கொள்வது, அது தவறி உட்கொள்ளும் நஞ்சு அன்று. உடல் நலன் கருதி உட்கொள்ளும் கசப்பு மருந்து போன்றது. பயன் நாடுபவன் அதனைத் துயராகக் கொள்வதுமில்லை. கொண்டாலும் அது பயனோக்கிய கருவியேயன்றி வேறன்று. மேலும் புத்தர்கட்கு அமைந்த துதாங்க ஒழுங்குகள் இவ்வகைப் பட்டவைதானே! புத்தரே தம் கண்ணும் தலையும் பிறருக்கு விரும்பி ஈந்ததை என்னென்பது?

மொக்கலன் : சமணர் மேற்கொள்ளும் இறப்புவரை உண்ணாத நோன்பு (சல்லேகனம்) கொல்லாமை நெறியினருக்கு ஒவ்வாத தற்கொலை முறையன்றோ?

நீலகேசி : சாவது விலக்கமுடியா நிலையில் மட்டுமே அது மேற்கொள்ளப்படும். எனவே, அது தற்கொலையன்று. கொலையை ஒறுப்பதுபோலவே, கொல்லாநோன்பினர்களான சமணர் தற்கொலையும் வெறுக்கவே செய்கின்றனர். இந்நோன்பு உயிர் நீப்பதற்கன்று; உயிர் நீங்குவதன்முன், உயிர் நிலையின் மேம்பாட்டுக்காவன செய்வதேயாகும்.

மொக்கலன் : கொல்லுதல் தீவினை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சமணர் ஊனுண்ணலைத் தீவினை என்பதேன்? தான் கொல்லாதபோது தின்பவனுக்குத் தீவினை ஏது?

நீலகேசி : தீமையை நேரடியாகச் செய்து மட்டுமன்று, தீமையைச் செய்யத் தூண்டுவதும் தீவினையே. நல்வினை வகையில் நீங்களே இதை ஒத்துக்கொள்கிறீர்கள். போதிமரத்தைச் சுற்றுவது நேரடியான நல்வினையன்றாயினும், புத்தர் நல்வினையை நினைவூட்டுவதாதலால் மறைமுறை நல்வினை எனக்கொள்கிறீர்கள். ஊனுண்ணலும் அதுபோன்ற மறைமுகத் தீவினையின் பாற்படும்.

மொக்கலன் : சமணத் துறவியர் மயிற்பீலியைப் பயன்படுத்துவது, மயிலைக் கொல்விக்கத் தூண்டுவது தானே? அதுவும் மறைமுறைத் தீவினையன்றோ?

நீலகேசி : மயிற்பீலிக்காக மயிலைக் கொல்வதில்லை. கொல்லத் தூண்டுவதுமில்லை. பீலியைக் கொல்லாமைக்குக் கருவியாகவே பயன்படுத்துகின்றனர். தமக்காக மயிலைக் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் என்பதும் உறுதி...

மொக்கலன் : தீவினை தீய செயலால் மட்டுமே வரும். ஊனுண்ணல் நுகர்தலால் செயலன்று.

நீலகேசி : நுகர்தல் செயலன்று என்று கொள்வதானால், கற்பழித்தல் முதலியவையும் நுகர்ச்சியேயாதலால் தீமையன்றாய்விடும். பிற பல தீமைகளும் அவ்வாறே. ஊனுண்ணல் மறைமுகக் கொலையன்று என்று நாட்ட மொக்கலன் கூறும் பல்வகை எதிர் உரைகளையும் நீலகேசி எளிதில் மறுத்தாள்.

மொக்கலன் : துன்பத்தை வரவேற்கும் தவத்தை மேற்கொள்ளும் நீங்கள், உயிருடன் உடலை எரித்தல் போன்றவற்றையும் தவத்திற்கொப்பான செயலாகக் கொள்ளலாம் அன்றோ?

நீலகேசி : பிற உயிர்கட்கு ஊறுசெய்வது மட்டுமன்றித் தனக்கு ஊறு செய்வதும் கொல்லாமைக்கு மாறானதே. சமணர் தவம், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாத தவம். தனக்கும் ஊறு செய்வதும் சமணர் நோக்கமன்று. உடலாற்றலறிந்து படிப்படியாகவே அவர்கள் துன்பத்தை ஏற்பர். மேலும் இம்மறுப்பு புத்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு மாறானது. புத்தர் பிரான் மேற்கொண்ட நிறைபாடுகள் (பாரமிதைகள்) முற்றிலும் தன்னொறுப்பேயாகும். விசாகையிடம் உணவு ஏற்குமுன், அவரே பல நாள் உண்ணாநோன்பு நோற்றார். இவையனைத்தையும் மறந்து, சமணர் நோன்பை எள்ளுதல் பொருந்தாது.

மொக்கலன் : மரவகைகள், உயிர் இனங்களுட்பட்டவையே என நீங்கள் கொள்கிறீர்கள். மரங்கள் வளர்வதால் உயிரினமானால், வளர்கின்ற காரணத்தால் புற்றும் உயிருடையதாக வேண்டும். உணர்ச்சியற்ற மயிரும் நகமும் போல்வனகூட வளர்கின்றவே?

நீலகேசி : புற்று வளர்ச்சியும் உயிர் வளர்ச்சியும் சொல்லளவில் வளர்ச்சிகளாயினும், வேறு வேறு வகை வளர்ச்சிகள். புற்றின் வளர்ச்சி, பொருள் புறத்திருந்து அடுக்கடுக்காய் மேல் சேர்ந்து வளரும் வளர்ச்சி. உயிர் வளர்ச்சி, உள்ளீடாய்ப் பொருள் முழுதும் உருப்பெருக்க மடைந்து வளரும் உள் வளர்ச்சி மயிர் வளர்ச்சியும் நக வளர்ச்சியும் கூடப் புற்றுவளர்ச்சி போன்றவையே. செம்பஞ்சி ஏற்றிய நகம் வளர்ந்தபோது, புது வளர்ச்சியைத் தனிப்படக் காணலாம்.

மேலும் மரவகைகள் பிற உயிரினங்களைப் போலவே அவ்வப்போது இலைகளை மடக்கி உறங்குகின்றன. புளி முதலியவற்றில் இது எளிதிற் காணப்படும்.

மொக்கலன் : ஒரு சில மரங்களே இலைகளை மடக்குகின்றன. இது உறக்கம் என்று கொள்வதற்கில்லை.

நீலகேசி : உயிரினங்கள் எல்லாம் உறங்கும்போது கண் மூடுவதில்லை. மரவகைகளும் அப்படியே. மேலும் மரவகைகள் உயிரினங்களைப் போலவே விருப்பு வெறுப்பு செயலெதிர் செயல் உடையன.

மொக்கலன் : அனலருகில் பட்டவுடன் மெழுகு உருகுவதில்லையா? அது உயிர் எனக் கொள்வதில்லையே. செயல், எதிர்செயல் உயிரின் குறியாவது எங்ஙனம்?

நீலகேசி : மெழுகின் மாறுதல் அனலின் சூடுபோன்ற புறநிலையைமட்டும் பொருத்தது. மரவகை, உயிரினம், ஆகியவை தம் விருப்பு, வேண்டுதல் ஆகியவற்றுக்கேற்பச் செயலாற்றும்.

மரவகைகளும் உயிர்களும் வளர்வதற்கும் வாழ்வதற்கும் எல்லை உண்டு. வளர்ந்தபின் அவை நலிந்து அழிவு எய்தும். உயிரில் பொருள்களுக்குத் திட்டமான வரையறையும் எல்லையும் இல்லை. விறகுள்ளவரையும் எவ்வளவு நாள் வேண்டுமாயினும் தீ எரியும்.

வெட்டினால் அழிவது, நோயினால் நலிவது, குணப்படுவது ஆகிய பண்புகள் வாளிலும் தோலிலும் காணப்படும் மாறுதல் போன்றவை. காந்தத்தால் வளைந்த வாள் நிமிர்வதுபோல் தான், மருந்தால் நோய் நீங்குவதும் என்று பலவாறு மொக்கலன் வாதிட்டான். நீலகேசி அவற்றின் பொருந்தாமை விளக்கி, தம் வடிவும் பண்பும் மாறா இனப் பெருக்கம் உயிர்வகைகளின் சிறப்புப் பண்பு என்பதையும் விளக்கினாள்.

மொக்கலன் : நில உயிர், நீர் உயிர், அனலுயிர், காற்றுயிர், வானுயிர் என்று மூலப் பொருள்களிலும் உயிர்களிருப்பதாகக் கூறுகிறீர்களே. இது உயிரில் பொருள்களிலும் உயிர் இருப்பதாக மயங்குவதல்லவா?

நீலகேசி : மூலப்பொருள்கள் (பூதங்கள்) உயிர் உடையவை என்று சமணர் கொள்வதாகக் கொள்ளுகிறீர்கள். இது தவறு. கண்காணா நுண் உயிர்களாகிய ஓர் உணர்வு உயிர் இனங்கள் எண்ணற்றவை உண்டு. அவை நில நீர் முதலியவற்றிலிருப்பதையே இப்பாகுபாடு குறிக்கும்.

மொக்கலன் : நிலையுடைமை (நித்தியம்) நிலையாமை (அநித்தியம்) ஆகியவை மூலப்பண்புகளா? தற்செயல் நிகழ்ச்சிகளான துணைப்பண்புகளா? உலகு நிலையுடைமையை மூலப் பண்பாகக் கொண்டதானால், உயிரினங்கள் மீது அதன் தாக்கு எவ்வாறு ஏற்படும்? நிலையாமை மூலப் பண்பானால், உயிரினங்கள் ஒரே தொடர்ச்சியான உலக நுகர்ச்சி பெறுதல் எங்ஙனம்?

நீலகேசி : சமணர் முடிந்த பொருளொருமைக் கோட்பாட்டினர் (ஏகாந்தவாதிகள்) என்ற தப்பெண்ணைத்தால் இவ்வினா எழுந்தது. சாத்தன் என்ற ஒரே ஆள் வேலனுக்குத் தம்பியாகவும், மூலனுக்கு அண்ணனாகவும் இருத்தல் கூடுமன்றோ? இருதன்மையும் ஒரே பொருளின் இருவேறு தொடர்புகளே. அதுபோல, நிலையுடைமையும், நிலையாமையும் உலகின் இருவேறுப்பட்ட தொடர்புகள். முழுமையாகப் பார்க்க அது நிலையுடையது. பகுதிகளாகப் பார்க்க அது நிலையாமையுடையது. இன்னொருவகையாகக் கூறினால், மூலப்பண்பை (அனுவிருத்த சுவபாவம்) நோக்கப் பொருள் நிலையுடையது. துணைப் பண்பை (வியாவிருத்த சுபாவம்) நோக்க நிலையாமை உடையது.

மொக்கலன் : பொருள்களின் அடிப்படை இயல்பு நிலையானது என்றும், தற்காலிக இயல்பு நிலையாததென்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் பண்புகளல்லாமல் அவற்றுக்கப்பாற்பட்ட பண்பி அல்லது பொருள் இல்லையென்று கொள்ளலாகுமல்லவா?

நீலகேசி : பண்புகளிலிருந்து பொருளைப் பிரிக்க முடியாது என்பது நீங்கள் கூறுவதன் பொருளாயின, அது சரியே. ஆனால், பண்புகளின் கூட்டே பொருள் என்று கொள்வதானால் அது தப்பாகும். கடல் நிலையானது; அலைகள் நிலையாமையுடையவை. பொன் நிலையானது; அணிவகைகள் நிலையாதவை. ஆயினும், அலைகள் கடலிலெழுவனவேயன்றிக் கடலல்ல. அணிவகைகள் பொன்னாலானவையேன்றிப் பொன்னல்ல.
மொக்கலன் : பொருளும் பண்பும் இரு பொருள்களா? ஒரே பொருளா? இரு பொருள்கள் என்றும் ஒரு பொருள் என்றும் நீங்கள் மயங்க வைக்கிறீர்கள்.

நீலகேசி : மெய்ம்மை ஆராய்ந்து பார்ப்பவருக்கு இதில் மயக்கமில்லை. புத்தசமய நூலிலேயே ஐங்கந்தங்கள் சேர்ந்தே ஆன்மா செயலாற்றுகின்றதாயினும், கந்தங்களே ஆன்மாவல்ல. ஒரே சித்தம் முன்னைய சித்தத்தின் பயனாகவும், வருகிற சித்தத்தின் காரணமாகவும் கொள்ளப்படுகிறது. ஒரே பொருளுக்கு இவ்விடங்களில் இருநிலைகள் கூறப்படுகின்றன. இவைபோலவே, பண்பும் பொருளும் ஒன்றுபட்ட ஒரு மெய்ம்மையின் இரு வேறு நிலைகளாம்.

மொக்கலன் : மெய்ம்மை உரைகடந்ததென்கிறீர்கள். உரைகடந்ததென்றதே அதுபற்றிய உரைதானே. உரை கடந்த ஒன்றுபற்றி வாளா இருத்தலன்றோ வேண்டும். அதுபற்றி வாதிட இடமேது?

நீலகேசி : உரைகடந்தது (அவ்க்தவ்யம்) என்றால், உரைக்கிடமில்லாததென்று பொருள் அன்று. அது ஒரு தரப்பில் அழியாததென்றும், ஒரு தரப்பில் ஒன்று என்றும், ஒரு தரப்பில் வேறுபாடுடையதென்றும் கூறப்படலாம். உரைகடந்தது என்பதன் பொருள், முற்ற விளக்க உரைபெற முடியாதது என்று மட்டுமே பொருள்படும்.

மொக்கலன் : பொருள்கள் மாறுகையில் அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேண்டும் என்கிறீர்கள். பால் தயிராகும்போது, பாலே தயிருருவில் உள்ளது என்றால், தயிர் பால்தான் என்று ஆகும். அப்போது மாறுபாடு என்ன?

நீலகேசி : பொருளின் மாறுபாட்டை உள்பயன் கோட்பாடு (சத்காரியவாதம்) எனச் சமணரும், இல்பயன் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப் புத்தரும் கூறுவர். இல்பயன் கோட்பாட்டின்படி பால் முற்றிலும் ஒழிந்து தயிர் புதிதாகத் தோன்றுகிறது என்று கொள்ளப்படுகிறது. இது உண்மையானால், பால் ஏன் தயிராக மட்டும் மாறவேண்டும்? எண்ணெயாகவும் தேனாகவும் மாறலாமே. 

பால், தன் அடிப்படைத் தன்மை மாறாமல் உருவில் மட்டும் தயிராக மாறுகிறது. அதாவது பாலின் அணுக்கள் உருவிலும் ஒழுங்கிலும் மட்டும் மாறி, தயிர் அணுக்களாகின்றன. காரணகாரியத் தொடர்பில்லாவிட்டால், புத்தர் வீடு பேறு (நிர்வாணம்) மதிப்பற்றது. யாரும் வீடு பெறலாம் பெற்றவர் பழைய நிலைக்கு மீளலாம் என்றாய்விடும்.

மொக்கலன் : உண்மை அன்பைப்பற்றிய உங்கள் கொள்கைப்போக்கு புதுமையானது. தன்னிலையில் உண்மைவாய்ந்த ஒரு பொருளே பிறிதொரு தன்மை, இடம், காலம், முறைமை ஆகியவைகளில் அன்மையாகவும் கூறப்படும் என்பது எவ்வாறு? ஓரிடம் இருப்பது மற்ற இடமில்லை என்று கூறுவது ஒரு பெரிய கோட்பாடா?

நீலகேசி : முக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையிலும் உள்ள உண்மை, இல்லாத இன்மை ஆகியவற்றிலிருந்து தன்மை, இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபாடும், உண்மை இன்மைகளைப் பிரித்தறிவதற்கே இப்பிரிவினை ஏற்பட்டது. யானை ஒரு பெரிய விலங்கு என்பது என்றுமுள்ள உண்மை. யானை தறியிற் கண்டுண்டு நிற்கிறது என்பது தற்காலிக உண்மை. 

ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் மட்டுமே குறிப்பிடுவதாகும். என்றுமுள்ள தன்மை, உண்மை முயற்கொம்பு போல் என்றுமில்லாத தன்மை, இன்மை. தற்காலிகமாக இல்லாத தன்மை அன்மை. ஒரு பொருள் இங்கு அன்று, இவ்வாறு அன்று என்றால் வேறிடம் உண்டு, வேறு பண்பு உண்டு என்று தெரியவரும்.

மொக்கலன் : பெயரில்லாத பொருளும் நுகரப்படாத பொருளும் பொருளல்ல என்று கூறப்படுகிறது. ஒருவனால் நுகரப்படாத பொருளும், ஒருவன் பெயர்த் தொகுதியில் அடங்காத பொருளும் இல்லை என்றால் கூடுமா?

நீலகேசி : நீங்கள் குறிப்பிடுவது சமணர் கொள்கையன்று. நாங்கள் கூறுவதெல்லாம் நம்மால் பெயரிடப்பட்டு நுகரப்படும் பொருள், உண்மையற்றதாயிருக்க முடியாது என்பதே.

மொக்கலன் : ஒரு பொருளின் தன்மை அதற்கே சிறப்பு என்றால், இரும்பு பழுப்படைவதையும், தண்ணீர் வெந்நீராவதையும் என்னென்பது. அவற்றின் தன்மையாகிய கருமையும் தண்மையும் மாறுபடுகின்றவே.

நீலகேசி : இரு பொருளின் தன்மை ஒரு பொருளில் காணப்படுவதால், பொருள் மாறுவதுபோல் தோன்றும். அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. சேர்க்கை நீங்கிய பின், தனித்தன்மை மீண்டும் காணப்படும். இரும்பு சிவப்பதும், தண்ணீர் வெப்பமடைவதும் தீயின் பண்பு அதில் ஏறுவதனாலேயே. தீயின் செயல் நீங்கியபின், அவை பழைய தன்மையுடனேயே விளங்கும். பூவிருந்த தட்டில் சிலகாலம் மணம் இருப்பதும் இவ்வாறே.

மொக்கலன் : துறக்கம் (வானுலகு) ஓர் இடமானால், அதுவும் மாட்டுத் தொழுபோன்ற ஓர் இடமாதலால் அதன் சிறப்பு, உயர்வு யாது?

நீலகேசி : புத்தர் அறிவுபெற்ற இடமாகிய போதியடி, பிற இடங்களிலிருந்து எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே என்க.

மொக்கலன் : பிறப்புடைய உயிர், துறக்கமெய்திய பின் மீள்வதில்லை. இச்சிறப்புத் தரத் துறக்கத்தில் என்ன இருக்கிறது?

நீலகேசி : இது இடத்தின் சிறப்பல்ல. அங்கே செல்லுமுன், உயிர் இருவினை வேரறுத்துவிடுவதால் வரும் பயன்.
மொக்கலன் : வீடுபெற்ற உயிருக்கும் அறிவு இருப்பதால், செயலும் வினையும் உளதாக வேண்டுமே.

நீலகேசி : உலகின் உயிர்கள், அறிவு பொறியறிவாதலால் வினையெய்தும், வீடெய்திய உயிரின் அறிவு, வினையறுத்த அறிவு. அது வினைப்பயன் சாராது.

மொக்கலன் ஐயங்களெல்லாம் நீங்கப்பெற்றுச் சமண அறிவு பெற்றான். அதோடு நீலகேசியைத் தன் தலைவரான புத்தரிடமும் செல்லும்படி தூண்டுகிறான்.

மொக்கல வாதம் - உரை முற்றும்

------------------

புத்த வாதம்

புத்த சமயத்தைத் தோற்றுவித்த முதல்வரான புத்தபிரான் கடற்கரையோரமுள்ள கபிலபுரத்தில் வாழ்ந்து வந்தார். (உணவுக்கு மீன் எளிதில் கிடைப்பதற்காகப் புத்தர்கள் கடற்கரையோரமே மடங்கள் அமைப்பர் என்று இங்கு ஏளனமாகக் குறிப்பிடப்படுகிறது. ஊன் விலைஞரும் உயிர்கொலைஞரும் அடுத்துத் தொழிலிடங் கொண்டிருந்தனர் என்பது குறிக்கப்படுகிறது).

அவர் அரசர் மரபினராயிருந்ததற்கேற்ப, அவர் தங்கிய மடம் அரண்மனைக் கொப்பானதாகவேயிருந்தது. அவர் ஓர் உயர்ந்த தவிசின் மீதமர்ந்து, தம்மைப் புடைசூழ்ந்திருந்த தம் திருச்சபை மாணவருக்குப் புத்தநெறியை விளக்கிக் கொண்டிருந்த சமயம், நீலகேசி அவரைச் சென்று கண்டாள். நீலகேசி விருப்பத்திற்கிணங்கப் புத்தபிரான் தம் நெறியின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கினார்.

புத்தர்பிரான் : மெய்ம்மையின் அடிப்படைத் தத்துவங்கள் ஐந்து கந்தங்களாக வகுக்கப்படும். அவை உருவ கந்தம் (மூபம்) உணர்ச்சிக்கந்தம் (வேதனை) அறிவுக்கந்தம் (விஞ்ஞானம்) பெயர்க்கந்தம் (சம்ஜ்ஞா) செயற்கந்தம் (சமஸ்காரம்) என்பவை.

உலகின் பொருள்கள் அனைத்தும் உருவகந்தத்தைச் சார்ந்தவை. அப்பொருள்கள் எட்டினங்களாக (அஷ்டகம்) அறியப்படும். அவையாவன: மண், நீர், காற்று, அனல் ஆகிய மூலப்பொருள் (பூதங்)களும் அவற்றுக்குச் சரியான பொறியுணர்ச்சிகளாகிய நிறம், சுவை, மணம், ஊறு ஆகியவைகளும் ஆம். இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத ஒரே தொகுதியாக எட்டினம் எனப்படும். மூலப்பொருள்களின் பண்புகள் முறையே திட்பம், நெகிழ்ச்சி, வெப்பம், சுழற்சி ஆகியவை. அவற்றின் செயலும் நால்வகைப்படும்.

உணர்ச்சிக்கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகைப்படும். அறிவுக்கந்தம், பொறி அறிவு ஐந்து, மன அறிவு ஒன்று, ஆக ஆறு அறிவுகளையும் பகுதிகளாகவுடையது. பெயர்க்கந்தமும் இதேபோல ஆறு வகை. செயற்கந்தம் மனமொழி மெய் என மூவகை.

இக்கந்தங்கள் கணந்தோறும் தோன்றி மறைவன. (பல தனிப்படங்கள் விரைவாக ஓடித் திரைக் காட்சியில் தொடர்ச்சி காட்டுவதுபோல) அவை தொடர்ச்சியுடையவைபோலத் தோற்றுதல் மயக்கமே. உண்மையில் எல்லாப் பொருள்களும் நிலையற்றனவே.

ஐந்து கந்தங்களின் சேர்க்கையையே ஆன்மா என்பதன்றி, ஆன்மா அல்லது உயிர் என்ற ஒன்றில்லை. கண வாழ்வும் அழிவுத் தன்மையுமுடைய இக்கந்தங்கள் நிலையாமை, துன்பம், தூய்மையின்மை, உயிர்ப்பின்மை (அனாத்மா) ஆகிய இயல்புகளை உடையன. இவற்றின் இயல்பை உணர்ந்தவன் உலகத்தோற்ற (சம்சார)த்தின் தன்மை உணர்ந்து துறக்கம் அல்லது வீடு (நிர்வாணம் அல்லது மோக்ஷம்) அடைகிறான்.

நீலகேசி : ஐந்து விரல்கள் சேர்ந்த கைபோலும், செங்கல் முதலிய பொருள்கள் சேர்ந்தமைந்த வீடுபோலும் கந்தங்கள் சேர்ந்ததே மெய்ம்மை (உலகு) என்கிறீர்கள். ஆனால் கந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க ஒண்ணாதவை; ஒருங்கே கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழிபவை என்று கூறுகிறீர்கள். விரல்கள், வீட்டுக்கான பொருள்கள், இவ்வகையில் பொருத்தமான உவமைகள் அல்ல. ஏனெனில் அவை தனித்தனி இயங்கவோ தோன்றவோ அழியவோ கூடும். கந்தங்கள் கூட்டாகவோ இயங்குவதற்கும் அழிவதற்கும் அவற்றைப் பிணைக்கும் அடிப்படை இணைப்பு இன்றியமையாதது. இதனை ஏற்றால், ஆன்மாவை ஏற்றதாகும். இக்கந்தங்கள் அத்தகைய ஆன்மாவின் பண்புகளேயாகும்.

நாலு முதற்பொருளைக் கூறுகையில் அவற்றின் பண்பும் செயலும் குறித்தீர்கள். பொருளினின்று வேறாகப் பண்பும் செயலும் பொருளாவது எங்ஙனம்? பிற கந்தகங்களையும் பிரித்தறிய அறிவு வேண்டும். பொறியுணர்விற்கு அடிப்படையான மண்ணை ஏற்கும்போது, உணர்ச்சி முதலிய கந்தங்களுக்கு அடிப்படையான உயிரை (ஆன்மாவை) ஏற்காததேன்?

புத்தர் : நாங்கள் ஏற்பதெல்லாமே பண்புகள்தான்; பொருள்கள் அல்ல.

நீலகேசி : அப்படியானால் பண்புகளே பொருள்களாயின. அவற்றின் செயல்கள் பண்புகளாகும். பொருள் பண்பு உறவு ஏற்பட்டுவிடுகிறது. நீங்களோ அத்தகைய உறவை ஏற்பதில்லை.

புத்தர் : பண்புகளல்லாது பிண்பி (பொருள்) ஒன்றிருப்பதாகக் கொள்வதேன்? அதனை அறியமுடியுமா?

நீலகேசி : பிரிந்தியங்களோ பிரித்துணரப்படவோ முடியாத காரணத்தால் பொருளில்லை என்றாக முடியாது. உணர்ச்சி முதலிய கந்தங்களின் அடிப்படையாக உயிர் நிலை அல்லது அறிவவுநிலை (போதம்) இருக்கவேண்டுவது விலக்க முடியாத உண்மை.

மேலும் கந்தங்கள் பிரிந்தியங்காதென்றால், ஒன்றுக்கொன்று மாறான தீ, நீர், ஆகியவை ஒருங்கே இயங்கம் என்ற முரண்பாடு ஏற்படுகிறது.

ஒவ்வொரு மூலப்பொருளிலும் மற்ற மூன்றும் கலந்துள்ளன என்கிறீர்கள். அப்படியானால் அக்கலவை மூலப்பொருளிலும் அத்தகைய கலப்பு இருக்கவேண்டும். அக்கலப்பிற் கலந்துள்ள கலப்பிலும் அதனுட் கலப்பிலும் அவ்வாறாகி எல்லையற்ற குழப்பநிலை ஏற்படுகிறது. மூலப்பொருள் என்பதற்குப் பொருளே இல்லாமலாகிறது.

புத்தர் : அப்படி அன்று. ஒவ்வொரு மூலப் பொருளிலும் தன் பண்பு மிகுந்து, பிற பண்புகள் குறைந்து இயல்கின்றன.

நீலகேசி : மிகுதிப் பண்புக்குமுன் குறைந்த பண்பு அழியும். அப்படியும் அவை ஒத்தியங்குதல் அரிது. மேலும் பொறியாலுணரப்படும் எட்டினப் பொருள்கள் அங்ஙனம் உணரப்படாதவற்றுடன் இயங்குவதெவ்வாறு? தவளையின் காற்சுவடு காற்றில் இருப்பது போலன்றோ இந்நிலை? அறிவு செயலுக்கும், செயல் இன்ப துன்பங்களுக்கு இடமாகும் என்கிறீர்கள். அறிபவன், செய்பவன், நுகர்பவன் ஆகிய ஆன்மா இல்லை என்கிறீர்கள். அப்படியானால் இம்மூன்றும் தொடர்பற்றவையாகவன்றோ இருக்க வேண்டும். ஒன்று மற்றதற் கிடமாவது எவ்வாறு? அறிவுக் கந்தம்ம ஆறனுள் ஒரே நேரத்தில் ஒன்று தானே உணர்விலிருத்தல் கூடும்? மற்றவை மறைவிலுள்ளனம என்னின், மறைவில் வைத்துள்ள உள்ளம் அல்லது ஆன்மாம ஒன்றும இருத்தல் வேண்டுமன்றோ?

அறிவுக்குக் காரணம் விருப்பம் (இச்சை) என்கிறீர்கள். விருப்பம் அறிவுக்கும முந்தியதாகவே அது எங்கிருந்து எழுகிறது என்ற வினா ஏற்படுகிறது. உடலிலிருந்து என்றால் அறியாப் பொருளி (அசேதனத்தி)லிருந்து வந்த தென்றாகிறது. அது அறிவினின்று எழுந்ததாயின் காரியமே காரணமாகின்றது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளுறை அறிவும என்ற ஒன்றைக் கொள்கிறீர்கள்.

ஆனால் அது ஆன்மாவிற்கு ஒரு மறுபெயரேயன்றி வேறன்று. புத்தக் கோட்பாட்டின்படி பொறியுணர்ச்சிகளுள் மணம், சுவை, ஊறு மூன்றும் பொறிகள்மீதுபொருளுலகு தாக்குவதால் ஏற்படுகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்படுகிறது. நீலகேசி ஓசையும் அத்தகைய தாக்குதலாலேயே ஏற்படுகிறது. என்றும விளக்கினாள். (இது தற்கால அறிவியல் கொள்கையை வியத்தகு முறையில் நினைப்பூமட்டுவதாகும்) ஒசை காற்றணுக்களினியக்கத்தால் உண்டாவதென்றும் அது ஒளியினும் வேகம் குறைந்ததென்றும் கூறி, அதனை எடுத்துக்காட்டினால் விளக்குகிறாள்.

வண்ணான் துணி தப்பும்போது அவன் செயலைக் கண்கொண்டு பார்ப்பவருக்கு அச்செயலைப் பார்த்தபின் சிலநொடிகள் கழித்தே அதனுடன் ஏற்படும் ஓசை செவியிற்படும். மேலும் கட்புலனுதவியின்றியே ஓசையின் அண்மை தொலைவுகளையும் வரும் திசையையும் உய்த்துணரலாகும்.

நொடிக் கோட்பாட்டின் முரண்பாட்டையும் நீலகேசி நன்கு விளக்கினாள். நொடிதோறும் பொருள்கள் அழிந்து மாறுவதானால் புத்தர் என்ற பெயரைச் சொல்வதற்குள் பல நொடிகள் ஆகி, ஒரு நொடியில் கேட்ட உணர்வு அழிந்து, பின் மறுநொடி உணர்வு ஏற்படும. தொடர்ச்சியுமிராது, தொகையாகக் கேட்ட கேள்வியுணர்வுமிருக்க முடியாது என்று அவள் காட்டினாள்.

நீலகேசி : ஓசை என்பது பொருளன்று; போலித் தோற்றம் என்கிறீர்கள். ஓசைகளால் ஏற்பட்ட உங்கள் பிடக முதலிய நூல்களும், ஓசை வாயிலாகச் செய்யப்படும் உங்கள் அறிவுரைகளும் என்னாவது!
அறிவுக் கந்தமும் பெயர்க்கந்தமும் ஒரேவகைப் பொருள் குறிக்கின்றன. இரண்டுக்கும் புலனாவது ஒரு பொருளாயின், அவை இரு பொருள்கள் ஆகா. ஒரு பொருளாயின் அறிவுக் கந்தம் பொருளற்றதாகிறது.

செயற் கந்தத்தில், அவா, வெகுளி, மயக்கம் ஆகியம மனத்தின் செயல்களும், பொய், குறளை, இன்னாச்சொல், பயனில் சொல் ஆகிய மொழியின் செயல்களும், கொலை, களவு, காமம் ஆகிய உடற் செயல்களும் கூறப்படுகின்றன. இப் பத்துத் தீமைகளுள் குடியும் பேரவாவும் இடம்பெறாதது ஏன்? மேலும் அவா தீமையாகுமானால், புத்த துறவியர் குடை, மிதியடி, குண்டிகை ஆகியவை வைத்துக்கொள்ளல தகாதன்றோ?

மெய்யறிவுடன் நோக்கினால் அவவாவனைத்துமே தீமை என்று கூறுவதற்கில்லை. அது நன்மையாவதும் தீமையாவதும் அவாவிய பொருளின் தன்மையை மட்டுமே பொருத்தது. வெகுளியோடு எவ்வகையிலும் ஒப்பாகும் செருக்கு, மயக்கம் (மாயை), சிறுமை (லோபம்) ஆகியவற்றையும் தீமைகளாக எண்ணத் தவறிவிட்டீர்கள். 

உம் வாழ்க்கை வரலாற்றிலேயே இத் தீமைகளை அகற்றப் பாடுபட்டிருந்தும், உங்கள் சமயக் கோட்பாட்டில் இவற்றைக் கவனிக்காது விட்டுவிட்டீர்கள். மொழிச் செயல்களிலும் தீமை பயக்கும் மெய்ம்மை, புறங்கூறாது நேரிடையில் இழித்துரைத்தல், ஆகியவற்றை நீங்கள் ஒதுக்கத் தவறிவிட்டீர்கள். மேலும் தீமைகளை மன மொழி மெய் என முற்றிலும் பிரித்ததும் வழுவாகும். எல்லாத் தீமைகளிலும மனத்தின் செயல் உண்டு என்பது தெளிவாக்கப் படவில்லை.

கொலைக் குற்றத்திற்கு ஐந்து கூறுகள் தெளிவுபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். செயலுக்காளானது உயிருடைய பொருளாயிருக்க வேண்டும்; உயிருடைய தெனச் செய்பவர் அறிந்திருக்க வேண்டும். கொல்லும் எண்ணம், கொலைச் செயல், ஆளான உயிர் இறத்தல் இத்தனையும் இருத்தல் வேண்டும்.

இவ்வைந்தில் எக்கூறு குறைபாட்டிலும்ம கொலைக் குற்றம் இல்லை என்கிறீர்கள். எனவே, நடைமுறையில் வெற்றிபெறாத கொலை முயற்சிகூடக் கொலையாகாது என்மறாகிறது. ஆனால் உங்கள் நூமலில் காந்திபாலன் (க்ஷ¡ந்திபாலன்) என்ற துறவியைக் கொல்லமுயன்ற மன்னன் கலாகன் (கலாஹன்) நரகு மசென்றதாகக் கூறப்படுவானேன்?

உங்கள் பேரறவுரை (மகாவாக்கியம்) நான்கனுள், எல்லாமே துன்பம் (சர்வம் துக்கம்); எல்லாமே தூய்மையற்றவை (சர்வம் அசுசி); எல்லாம் நிலையாதவை (சர்வம் அநித்யம்); எல்லாம் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்ற நான்கு உண்மைகள் கூறப்படுகின்றன. முதல் உரையின்படி நீங்கள் வற்புறுமத்தும் நல்லறமும் நற்பயன் அற்றதாகும்.

இரண்டாவதன்படி உங்கள் மறை, போதிமரத்தடி முதலியவையும் தூய்மையற்றவையாக வேண்டும். மூன்றாவது வாழ்க்கைக் கொவ்வாதது. நொடிதோறும் எல்லாம் அழிவது உண்மையானால், அரசன் உடமைகளைப் பறிமுல் செய்யும்போதோ, வெள்ளம் முமதலியவற்றால் அழியும்போதோ, வருந்துபவர் நொடிதோறும் வருந்தாததேன்? மேலும் சமயத் தலைவராகிய நீங்களும் மறையும் நிலைப்பதெவ்வாறு? கடைசி உரைக்கு மாறாக நீங்களே உயிர், மறுபிறப்புப் பற்றிப் பேசுகிறீர்கள். அது வெறும் உலகியல் வழக்கு (வியவகாரப் பிரயோகம்) ஆனால்கூட உங்கள் பழைய நினைவுத் தொடர்ச்சி (பிரத்தி பிஜ்ஞை)க் கொள்கையுடன் அது ஒத்துவாராது
மெய்ப் பொருள்களை, நாம் அவற்றின் பெயர் (நாமம்) உருவம் (ஸ்தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல்வகை (பாவம்) ஆகிய நாலு வகைகளால் அறியலாம். 

நீங்கள் கடைசிவகை ஒன்று மட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள். முதல் மூன்றுவகைகளாலும் மட்டுமே ஆன்மா தெளியப்படும். வான்மலர் போன்ற தொடர்கள் இல்பொருள் குறிக்கின்றனவே எனின், வான், மலர் என்ற இரண்டும் உள்பொருள்களே என்றும், இல்பொருள் என்பது தொடரின் முரண்பாடு என்றும்ம காட்டலாம். பொருள் குறித்தே பெயர் எழுமாதலால், பெயர் பொருளின் அறிகுறியேயாகும்.

வினைப்பயன், வினையுலகு (சம்சாரம்) வீடுபேறு ஆகியவற்றை ஏற்கும் புத்தநெறியாளர் இவற்றுக்கு அடிப்படைமயான உயிர்நிலை (ஆன்மா) உண்டென்பதை மறுப்பது பொருத்தமற்றது என நீலகேசி கூற, அதை மறுக்கப் புத்தர்பிரான் கூறிய உவமைகள் பலவற்றுள்ம பொருத்தமின்மையை அவள் விளக்கிக் காட்டினாள். மேலும் வீடுபேறு என்பது வினை உலகுத் தொடர்பு அறுவதேயாயின், நொடிதோறும் அழிந்து புதிதாகும் உலகில், வீடுபேறுதான் நொடிதோறும் நிகழும் செய்தியாயிற்றே என்று நீலகேசி ஏளனம் செய்தாள். 

நொடி மாற்றுக்கொள்கையும் மாறுதலின் கொள்கையும் தவறு என்றும், உள்ளார்ந்த நிலைமையுமாகிய தொடர்ச்சியினிடையே மாற்றமாகிய நடுநிலைக் கொள்கையே நேர்மையுடையதென்றும் அவள் விளக்கினாள்.
நீலகேசி அறிவின் திறத்தைக் கண்டு வியந்து, புத்தருடைய குறைபாட்டை ஒப்புக்கொண்டு, இனி அவள் கூறிய உண்மைகளை ஏற்பதாகக் கூறினார்.

புத்த வாதம் - உரை முற்றும்

----------------

ஆசீவக வாதம்

புத்தர் வாழ்ந்த கபிலபுரத்தினின்று அகன்று, நீலகேசி வான்வழியாக வென்றியஞ்செல்வனை (ஜின பகவானை)ப் பாடிப் பரவிக்கொண்டு சென்று, கோழியூரை (குக்குட நகரை) அடைந்தாள். அங்கே ஆசீவகர் என்ற சமயப்பிரிவினர் வாழ்ந்தனர். அவர்களையும் வாதில் வெல்ல எண்ணி நீலகேசி, அவர்களுடைய ஆசிரியராகிய பூரணரிடம் சென்று, "உங்கள் சமயம் எத்தகையது'' என வினவினாள்.

நீலகேசி : உங்கள் சமயம் கண்ட தலைவர் யார்? உங்கள் மறை நூல்கள் 'ஒன்பது ஒளிக்கதிர்கள்' எனப்படுபவை. எங்கள் கோட்பாட்டின்படி அடிப்படைப் பொருள்கள் ஐந்து. அவை ஐந்தும், ஐந்து வேறு, வேறு வகை அணுக்களாலானவை. அவை மண், புனல், அனல், காற்று, உயிர் என்பன.

உள்ளது அழியாது; அல்லது பிறவாது. ஆயின் உள்ளவை நீரில் மிதப்பவைபோன்று மேற்படத் தோன்றும்; அமிழ்ந்துகிடப்பவை போல மறைந்திருக்கும்.

எம் தலைவர்பெருமான் நிறையறிவுடையவர்; இருவினைத் தொடர்பற்றவர். எனவே, அவரிடம் பேச்சும் செயலும் இரா. பேசினால்கூட வெளியிடமெங்கம் நிறைந்த அணுவுயிர்களுக்கு ஊறுவிளையும் என்பதனாலேயே அவர் பேசுவதில்லை. மூப்பும் இறப்பும் தவிர்த்தவர் அவர். வானவில்லின் தோற்றம் மறைவு ஆகியவைபோல, அவர் தோற்றமும் மறைவும் அறியவும் விளக்கவும் ஒண்ணாதவை. எனவே, அவரை யாம் நிறைவர் (பூரணர்) என்கிறோம். அவர் அருளிய மறைகளாகிய 'ஒன்பது கதிர்கள்' ஐவகை மெய்ப்பொருள்களாகிய உருப்படிகளை (மூர்த்தங்களை)ப் பற்றியும் தோற்ற மறைவுகளின் அறியொணாத் தன்மையையும் காரணமின்மையையும் விளக்கும்.

ஐவகை உருப்படிகள் வேறுவேறு இயல்புடையன; ஆயின் பண்பற்றவை. மெய்ம்மைக்கு ஊறும, சுவை, நிறம், மணம் ஆகியவை மட்டுமே அவற்றுக்கு உண்டு. ஓசை என்பது கிடையாது. ஆனால் நீருக்குத் தண்மையும், தீக்கு வெம்மையும், காற்றுக்கு ஓசையும், உயிருக்கு உணர்வும் (போதமும்) உண்டு. இவையும் மூலப்பொருள்களின் அணுக்களின் குணங்களேயன்றி, இவற்றின் சேர்க்கையாலான பொருள்களின் பண்புகள் அல்ல.
கணங்கள் உண்டெனினும் தொடர்ச்சியான காலம் என்ற ஒன்றை நாங்கள் ஏற்பதில்லை.

எங்கள் ஒழுக்கமுறை, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட உலகியல் ஒழுக்கமுறையே. பிறர் இதுகண்டு நகையாடலாமாயினும், அதுவே உண்மையில் பகுத்தறிவுக் கொத்தமுறை என்பதை எண்பிக்கக்கூடும்.

நீலகேசி : உங்கள் கோட்பாட்டின் நான்கு கூறுகள் தலைவன், மறைமொழி, மெய்ம்மை இயல்பு, செயல்வகை (ஆப்தம், ஆகமம், பதார்த்தம், பிரவிருத்தி) என்பவை. நான்குமே கண்கூடு, உய்த்தறிவு ஆகிய இருவகை அளவைகளின் ஆதாரமற்றவை. தலைவர் வாளாமை (மெளனம்) பொருளற்றது; அறிவுமுறைக்கு முரணானது. அவர் வாய்திறவாதபோது, உங்கள் "ஒன்பது கதிர்க''ளாகிய மறைமொழி தோன்றிய வகை யாது?

பூரணர் : அவை ஒக்கலி, ஓகாலி என்ற இரு தேவர்களால் அருளிச் செய்யப்பட்டவை.

நீலகேசி : அத் தேவர்கள் மறைமொழி அருளின், அவர்கள் நிறை அறிவுடையவர்களா? நிறை அறிவுடைய தலைவர்போல் அவர்களும் வாய்திறவாதிராததேன்? நிறை அறிவற்றவர்களானால், மறைமொழிகளின் வாய்மை குறைபடுகிறதே. குறையறிவுடைய நம்போலியரே அன்பு காரணமாகப் பிறருக்க உதவ முன்வருகிறோம். நிறையறிவுடைய தலைவர் மஸ்கரி வாளா இருந்ததேன்?

தோற்றம் மறைவு ஆகியவை காரணமின்றி இயல்பாக நிகழ்பவை என்கிறீர்கள். ஆனால் தலைவர் தோற்றம் காரணமற்றதென்று விளக்க முன்வருகிறீர்கள். இதற்குக் கூறும் உவமையாகிய வானவில் விளக்கமே காரண காரியத் தொடர்பு வகையில், உங்கள் அறியாமைக்குச் சான்றாகிறது. முகில்கள்மீது ஞாயிற்றின் கதிர்கள் விழுவதனாலேயே அது தோற்றுகிறது என்பதை நீங்கள் அறியவில்லை !

வாளாமை நிறை அறிவுக்கு அறிகுறியாகுமானால், பேச அறியாக் குழந்தைகள், செவிட்மூமைகள், மரங்கள், குன்றுகள், நிறை அறிவுடையவையா? அவர் உறுப்பசைவுகூட அற்றவரானால் அவர் உயிரற்றவா? பாசாங்குக்காரரா? பேசாத அவர், ஐந்து மெய்ப்பொருள்களியல்பு, இருவினையியல்பு ஆகியவற்றுக்கு விளக்கம் தருவாரா? செயலற்ற அவர் வாழ்வில் சிற்றின்ப வேட்கை புகுந்ததெவ்வாறு?

மூலப் பொருள்களில் மண்ணுக்கு மட்டுமே நிறம், சுவை, மணம் ஊறு உண்டென்கிறீர்கள். அடுத்த மூன்றுக்கும் அவை இருப்பதால் அவை மண்ணின்பாற்படுமா? அப்படியானால் மூலப் பொருள்கள் இரண்டாக வல்லவோ வேண்டும்? மேலும் இவ்வுணர்ச்சிகளை உணரும் பொறிகளும் மண்தானா?

புலன் அறிவுக்கு உட்பட்டவற்றில் இருளும் ஒன்றாயிருக்க, அதை ஏன் பொருளாகச் சேர்க்கவில்லை?
மூலப் பொருள்களுக்க இயல்பு உண்டு என்று கூறியபின், பொருள்களுக்குப் பண்பு இல்லை என்றல் எவ்வாறு? இயல்பு பொருளிலிருந்து பிரிக்க முடியாதென்றாலும், அதை ஏற்பவர் பண்புகளும், பிரிக்க முடியாத நிலையில் ஏற்கப்படலாமன்றோ?

மெய்ம்மையின் மாறாத்தன்மை (அவிசலித நித்தியம்) பற்றிக் கூறுகிறீர்கள். மரம் படகாதலும், பொன் அணிகலனாவதும், வெண்கலமும் கிண்ணமும் மாறுதலல்லவா? வெண்கலத்திலேயே வெளிப்படையான தட்டை உருவும், மறைநிலையாக கிண்ண உறவும் உள்ளன என்றாலும், இரண்டு வேறுவேறு பொருள்களாகி மாற்றம் ஏற்படுகின்றன என்று ஆகிறதே! இலக்கணத்தில் சொற்கள்கூட வேற்றுமையிலும் தொகைகளிலும் மாறுகின்றன.

வளர்ச்சிமுறை வகையில் நீங்கள் நான்கு, கூறுகளை ஒப்புக்கொள்கிறீர்கள். அவை வளர்ச்சியின் கட்டாயத் தன்மை, வளர்ச்சியின் படிமுறை, வளர்ச்சியின் உச்ச எல்லைநிலை, வளர்ச்சியின் கால அளவு ஆகியவை. அதாவது பெண் குழந்தை மாது ஆகமட்டுமே வளர முடியும். சிறுமி, நங்கை, மங்கை, பேரிளம் பெண் ஆகிய படிகள் கடந்தே வளரமுடியும். கிழவிப் பருவத்துக்கப்பால் வளர முடியாது. வளர ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் வரை செல்லும்.

மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

குழந்தையின் வளர்ச்சியில் உருப்பெருக்கம் மாற்ற மல்லவா? ஒன்றரை அடிக் குழந்தை உருவிலேயே ஆறடி முழுவளர்ச்சியும் இருப்பதென்பது பொருந்துமா? மீசை தாடி முதலிய ஆண் உடற்கூறுகளும், கருப்பை முதலிய தாய்மை உறுப்புக்களுமாவது புது வளர்ச்சியாகிய மாறுபாடுகள் என்பதை மறுக்க முடியாதன்றோ?

உயிர்கள் (பாலைக்கனியின் நிறமாகிய) நீலநிறமென்றும்; போதிய நீள அகலமும் நானூறுயோசனை உயரமும் உடையவை என்றும் கூறுகிறீர்கள். இவ்வளவு பெரிய அளவுடைய உயிர்கள், சிற்றளவினவாகிய உடலில் அமைந்திருத்தல் எவ்வாறு? பல கோடியாதலால் அத்தனைக்கும் உலகில் இடம் ஏது?

உயிர், பூசணிக்காய் போன்ற நீளம் அகலம் உயரம் உடைய பருப்பொருளானால், அக் காயைப்போலவே துண்டுபடக்கூடியதாயிருக்க வேண்டும். உயிர்கள் எல்லாம் வீடு பெற்றால், உலகியல் வாழ்வில்லையே என்ற கடாவுக்கு மறுமொழியாக, வீடுபெற்ற பின்னும் உயிர்கள் மீண்டும் உலகியலில் தொடக்கநிலையெய்தும் என்ற மண்டல வீடு பேற்று (மண்டல மோக்ஷ)க் கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அது உயிர்கள் எண்ணற்றவை என்பதன் முழு இயல்பை அறியாமல் நீங்கள் தரும் விடையாகும். எண்ணற்றவை (அனந்தம்) எத்தனை பிரிந்தாலும் பின்னும் எண்ணற்றவையாகவே இருக்கும் என்ற கணக்கியல் மெய்ம்மையை நீங்கள் உணரவில்லை.

மூலப் பொருள்களுள் மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை என்றும், தீயும் உயிரும் மேல்நோக்கிச் செல்பவை என்றும், கூறுகிறீர்கள். மேல் நோக்குவதாகக் கொள்ளும் தீ, ரிநிலையிலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் பொருளே என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. உயிர்கள் தொடர்ந்து மேல் நோக்குபவையானால், அவை திங்கள் மண்டிலம், விண்மீன் மண்டிலம் ஆகியவற்றை எளிதில் அடையவேண்டுமன்றோ? பக்கநோக்கிச் செல்வதாக நீங்கள் கூறும் காற்று, உடலில்மேலும் கீழும் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை.

காலமில்லை என்று கூறும் நீங்கள், வளர்ச்சியின் கூறுகளுள் காலப்போக்கை ஒன்றாகக் கூறுகிறீர்கள்.
காரண காரியத் தொடர்பை மறுக்கும் நீங்கள், நோன்பும் தவமும் நாடுவதேன்?

நீலகேசியின் வாதத்தால் பொய்ம்மை தவிர்ந்த ஆசீவக ஆசிரியர் பூரணர், தன் குழப்பநிலையிலிருந்து விடுதலை தருமாறு வேண்ட, நீலகேசி தன் மறுப்புக்களுக்குத் தானே விளக்கம் கூறி, அவரைச் சமணநெறி மூலம் தேற்றினாள்.

ஆசீவக வாதம் - உரை முற்றும்

------------------  

வைசேடிக வாதம்


சாங்கிய ஆசாரியனை விடுத்து நீலகேசி, வைசேடிக சமயத்தலைவராகிய லோகஜிதர் குடிலை (ஆசிரமத்தை) அடைந்தாள். அவர் வைசேடிக முதல்வராக கணாத முனிவருடனேயே ஒப்பானவர் என்று சொல்லத்தக்க அளவு, அறிவாராய்ச்சியும் புகழும் உடையவர். அவர் தம் நெறியின் அடிப்படைக் கொள்கைகள் விரித்துக் கூறலானார்.

லோகஜிதர் : எங்கள் சமயக் கோட்பாட்டின்படி பொருண்மைகள் ஆறு. பருப்பொருள் (திரவியம்) பண்பு (குணம்), செயல் (கர்மம்) தொகை (சாமான்யம்), வகை (விசேஷம்) கோப்பு (சமவாயம்) என்பன. அவற்றுள் பருப்பொருள்களாவன: மூலப்பொருள்கள் ஐந்து, திசை, மனம், காலம், உயிர் ஆகிய ஒன்பதும் ஆகும். பண்பும் செயலும் பருப்பொருள்களைச் சார்ந்து நிற்பவை.

தொகை பெருந்தொகை உள்ளுறைதொகை என இருவகை. முன்னது பொருளின் உண்மை அல்லது இருப்பை உணர்த்தும், பின்னது பொருள்களில் உள்ளீடாக உள்ள பொதுப் பண்புகளைக் குறிக்கும். இத்தொகை என்றும் நிலையாய், பொருள்களின் ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகும். வகைவேற்றுமைகளுக்கு அடிப்படைக் காரணமாயிருப்பது கோப்புப் பொருள்களுடன் அவற்றுக்குரிய பண்புகளையும் செயலையும் இணைப்பது. முதல் மூன்று பொருண்மைகளும் மட்டும் தனி இருப்பு உடையவை. மற்றவை சார்பு நிலையின.

நீலகேசி : பருப்பொருள்கள் ஒன்பது என்று வகுத்திருக்கிறீர்கள். அவற்றுள் மண், நீர், அனல், காற்று ஆகிய முதல் நான்கும் ஒருவகையே. உலகியல் மரபுப்படி நான்காம் எனில், மண்வகைகளும் பிரிக்கப்படவேண்டும்.

ஒலி வானியல்பாகத் கூறப்படுகிறது. ஆனால் அது பருப் பொருளணுக்களின் உராய்வால் ஏற்படுகிறது. வானில் இயல்பு என்பதைவிட, வெளியின் இயல்பு என்பதுகூடச் சால்புடையது. எடை பருப்பொருள் தொடர்புடையது அன்று எனின், மணியை அடிப்பதனால் ஓசை உண்டாவதை என்னென்பது? வானம் பருப்பொருளன்று; அழியாதது; எங்கும் நிறைந்தது. ஆனால் ஓசையோ வரையறைப்பட்ட பரப்பும் கால எல்லையும் உடைய, பருப்பொருள் தன்மை உடையது.

திசை பருப்பொருளுடனொப்பத் தனிப்பொருளாகக் கூறப்பட்டது. ஞாயிறு முதலிய பொருள்களின் நிலைகளுடன் தொடர்புப்படுத்தினாலன்றி அது அறியொணாதது. அது இடவெளியின் ஒரு முறையேயன்றித் தனிப்பொருளன்று. தெற்கு மேற்கு என்ற திசையும், வலம் இடம் என்பதும், உறவு என்ற முறையிலும் தனி நிலையுடையவையல்ல. ஒன்றின் நிலை ஒன்றுக்குக் கிழக்கு என்றால், மற்றொன்றுக்கு மேற்கு ஆகும். ஒன்றுக்கு இடமுள்ள பொருள் மற்றொன்றை நோக்க, வலம் ஆகும். இவை பொருள்களின் பலவகைச்சார்பு விளக்கங்களே (Predicals) அன்றி வேறல்ல.

மனம் என்பதும் ஆன்மாவின் இயக்கமேயன்றித் தனிப்பொருள் அன்று. மனம் தனி வகையில், அதனால் அறியப்படும் புல உணர்வுகளும், தனி நிலைகளாய்ப் பருப்பொருள்கள் என்பது ஆகாது, பதினான்கு ஆகும். காலம் என்பதும் இதுபோலப் பொருள்களின் இயக்கத்தினால் ஏற்படும் தொடர்புகளுள் ஒன்றே. குணம், செயல் அகியவை பொருளுடமன் ஒன்றுபட்டே உயிருக்கு உணர்வளிக்கிறது. இவ்வுணர்வுக்கான கொள்ளின் உயிரும் பொருளும் இயக்கமற்ற பொருள்களாகின்றன. அறிவும் செயலும் உயிரின் இணையறாப் பண்பேயன்றி, கோப்பினால் ஏற்படும் தன்மைகளல்ல.

லோகஜிதன் : பண்பும் பண்பியும் ஒன்றானால், ஒன்று அழியும்போது மற்றதும் அழியவேண்டும். பச்சோந்தியின் நிறங்களுள் ஒன்றழியும்போது பச்சோந்தி அழிவதில்லையே. ஆகவே, இரண்டும் வேறு என்று ஏற்படுகிறது. மனிதனிடமிருந்து இளமை போயினும் மனிதன் அழிவதில்லை. முதுமைதாங்கி நிலைபெறுகிறான். சுருண்டிருந்த பாம்பு ஊரத் தொடங்கினால், சுருளுரு நீங்கும் பாம்பு நீங்குவதில்லையன்றோ?

நீலகேசி : பண்பில்லாத பொருளில்லை. அது அறியப்படவும் முடியாது. அதோடு தனிப் பொருளாயின் பருப்பொருளிலிருந்து பிரித்துத் தனிவகையாகத்தான் கருதப்படுவானேன். பருப்பொருளிலேயே அடக்கப்படலாமே! உண்மையென்னவெனில், பொருள் தொடர்பும் நிலையும் உடையது. பண்புகள் அதனுடன் தொடர்புடையவையாய் மாறும் இயல்புடைய தன்மைகள். இரண்டும் பொருள் வகையில் ஒன்று; தன்மை, தோற்றவகையில் வேறுபாடுடையவை.

பண்பும் செயலும் கோப்பினால் பொருளுடன் இணைவு உடையவை என்கிறீர்கள். இணைவு ஏற்படுமுன் அவற்றிற்கு நிலை ஏது? உள்பொருளாயின், பொருள் தொடர்பு இல்லாதபோது நிலைபெறுவது எவ்வாறு? இல்பொருளாயின், கோப்புக்கு உரியதாகாது!

தொகை என்பது அறிவால் அறியப்படும் பண்புகளின் பொதுத்தன்மையன்றித் தனியாய் இருப்பதன்று. எல்லாப் பொருள்களிலுமே வேறுவேறு பொதுப்பண்புகள் இருக்கின்றனவாதலால், எல்லாம் தொகைகளாதல் வேண்டும். தொகை வகைகள் ஓர் உறவேயன்றி வேறன்று ஒரு முறையில் தொகையாவது இன்னொரு முறையில் வகையாகும்.

லோகஜிதன் : பண்புகளில் கூடுதல் முறைகள் உண்டு. தித்திப்புப் பொருள்களில் மிகுதித் தித்திப்பும், குறைந்த தித்திப்பும் அறியப்படுகின்றன. தொகை அவ்வாறு அறியப்படாது.

நீலகேசி : பொதுப் பண்புகளினால் ஏற்படும் தொகுதியே தொகையாதலால், அதிலும் கூடுதல் குறைகள் உண்டு. எடுத்துக்காட்டாகக் குதிரை என்ற தொகையில் பொதுப் பண்புகளின் உயர்வு தாழ்வுகளால் உயர்வகைக் குதிரை, தாழ்ந்தவகைக் குதிரை என்ற படிப்படியான வேறுபாடு காணலாம். தொகை, வகை ஆகியவை பண்புகளின் பொதுமை, வேறுபாடுகளேயன்றி வேறல்ல. தனிப் பொருள்களாயின், எல்லாப் பொருள்களும் எல்லாப் பண்புகளுடனும் சேர இடந்தரவேண்டும். வெண்கொக்குப் போல் கருங்கொக்கும், பறக்கும். பறவைபோல் பறக்கும் விலங்கும் இருத்தல் கூடியதாகவேண்டும்.

கோப்பு நிலையுடைய (சத்) அன்று என்று நீங்களே ஒப்புக்கொள்வதால், அதுவும் தனிப்பொருளன்று.

லோகஜித்தன் : பொருள் ஒருமை உடையது, நிலையாயானது. பண்புகள் பன்மை வாய்ந்தவை. நிலையற்றவை, இரண்டும் ஒன்றாதல் பொருந்தாது. பொருள் பண்பாயின் பண்புகள் ஒன்றாகம். பண்புபோல் பொருளும் அழியும்.

நீலகேசி : பண்பு பொருள் என்று நான் கூறவில்லை; பொருள் சார்ந்தது. பல பண்புகள் ஒரு பொருள் சார்ந்து ஒரே நேரத்திலும் அறியப்படலாம். பாற்கட்டி என்ற ஒரே பொருள், வெண்மையாகவும் பெரியதாகவும் தித்திப்பாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நேரம் ஒரு பண்பு பிரித்தறியப்படும். ஆகவே, பன்மைவாய்ந்த பண்புகளும், நிலையற்ற பண்புகளும், ஒரு நிலையான பொருளைச் சார்ந்து அறியப்படுதல் பொருந்துவதேயாகும்.

ஒரே பொருளே தொகையாகக் கருதப்படும்போதும் சில பண்புகள் கருத்தில் முந்தும்; வகைகளாகக் கருதப்படும் போது, அவை மறைந்து வேறு கருத்துக்கள் முன்வரும். தென்னையை மரம் என்று கூறும்போது மரப்பொதுப் பண்பும், தென்னைவகை என்று கருதும்போது கிளையற்றது, இறகு வடிவ ஓலை முதலிய சிறப்புப் பண்புகளும் கருத்தில் இடம்பெறும்.

நீலகேசி கூறிய உண்மைகளின் திட்டத்தை உணர்ந்து, லோகஜிதன் மனமாறி அவளுக்குத் தலைவணங்கிச் சமண நெறியே பெற்றான்.

வைசேடிக வாதம் - உரை முற்றும்
-----------

வேத வாதம்

அத்தினாபுரியிலிருந்து புறப்பட்டு, நீலகேசி பல கல் தொலைவு நடந்து, காகந்தி நகரை அடைந்தாள். அங்கே வேத நெறியாளர் கலைக்கூடம் ஒன்றிருந்தது. அதில் பூதிகன் என்ற வேத ஆசிரியன் பல மாணவர்கட்கு வேதநெறி புகட்டிக்கொண்டிருந்தான். நீலகேசி வேதநெறி பற்றி வாதிட வந்திருப்பதாகச் சொல்லவே, அவன் மாணவர் புடைசூழ முன்வந்து அவளிடம் வாதாடினான்.

பூதிகன் : எங்கள் முதனூல் வேதம் ஆகும். அது காலங் கடந்தது; தானே இயங்குவது. வேதத்தை மூலமாகக் கொண்டு பல மெய்ந்நிலை விளக்க விளக்க முறைகள் ஏற்பட்டுள்ளன. 25 மெய்ந்நிலைகளைக் கொண்ட சாங்கியம், 6 பருப்பொருள்களை விரித்துரைக்கும் வைசேடிகம், படிப்பு முறைகூறும் படைப்பு வாதம் (சிருஷ்டி வாதம்), கடவுள் இயல்புரைக்கும் கடவுள் வாதம் (பிரம வாதம்), பல தெய்வங்கள் பெயரையும் கொள்கைகளின் பெயரையும் ஒட்டி ஏற்பட்ட, வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாஞ்சராத்திரம், பரிவிராஜிகம் முதலிய முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றிலும் உட்கிளைகள் பல. இவை எல்லாமே வேதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை.

நீலகேசி : உங்கள் வேத நெறி அல்லது மீமாம்சக வாதம், கடவுள் மறுப்பு (நாத்திகச் சார்பானது; எல்லாமறிந்த தலைவரை ஏற்பதன்று. ஆயினும், கடவுளையும் சிறு தெய்வங்களையும் வழிபடும் பல நெறிகளுக்கு அதனைத் தாயகமெனக் கொள்கிறாய். பிந்தியவை சிறந்ததென உங்களுக்குத் தோன்றினால், உங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை வாய்ந்த வேத நெறியை விட்டுவிடுவதுதானே?

பூதிகன் : (கடுஞ்சினத்துடன்) யாரைக் கடவுள் மறுப்பாளர் என்றாய்! எங்கள் வேதம் யாவராலும் உரைக்கப்பட்டது அன்று (அபெளருஷேயம்) என்ற நிலையை உன்னால் அறியப்பட முடியாது. அதனைக் கற்கும் தகுதி சூத்திரச்சியாகிய உனக்கு இல்லை. அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்க உரிமை ஏது?

நீலகேசி : நன்று சொன்னாய். நால்வகுப்புக்குப் புறம்பான சண்டாளர்கள் (பஞ்சமர்) கூட உங்கள் வேதமொழிகளை உரைத்திருக்கும்போது, அதனை அறிய ஒரவரக்குத் தகுதி இல்லை என்றுகூற வெட்கமில்லையா? வேதங்களை வகுத்தும் மந்திரந் தந்தும், முனிவர்கள் என்று உங்களால் கொள்ளப்பட்ட வசிட்டர், அகத்தியர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் ஆகியவர்கள் பிறப்பையும் மரபையும் ஓர்ந்து பார்க்க வேண்டும்.

வசிட்டரும் அகத்தியரும் நான்முகனுக்குத் தேவருலக நடனமாதான திலோத்தமையிடம் பிறந்தவர்கள். சக்தி வசிட்டருக்குச் சண்டாளமாதொருத்தியிடம் பிறந்தவர். பராசரர் சக்தி மகன். வியாசர் பராசரருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர். வியாசர் தம் மூதாட்டியான திலோத்தமையிடம் பெற்ற பிள்ளை சுகர். இத்தகைய உயர் பிறப்பாளர் மொழிகளுக்குத் தெய்வத்தன்மை கற்பித்த நீங்கள், என் நல்குடிப் பிறப்பை இழித்துரைப்பது நகைக்குரியது.

பிறப்பால் உயர்வு இழிவு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பெயர்களையே எடுத்துக்கூறி, அவர்களை மேம்பாடடையச்செய்தது தவமே என்று உங்கள் நூற்களே கூறுவதை நீங்கள் உணரவில்லை.

பூதிகர் : சரி போகட்டும். நீ வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறாய். தெய்விகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதேனும் குறை காட்ட முடியுமா?

நீலகேசி : ஏராளமாகக் காட்டமுடியும். அவை மனிதர் வாய்மொழி என்பதற்கு அவையே சான்று பகர்கின்றன. அவற்றுட் பல நடைமுறைக்கு ஒத்து வாராதவை. பொய்யுரைகள் மலிந்தவை. அத பிற்காலத்தது என்பதற்கான தெளிவுகளுண்டு. கீழ்வகை உலக அவல்களையே அவை வற்புறுத்துகின்றன. தீநெறிக்கு ஊக்குகின்றன. கொடுமை, கீழ்மை அகியவற்றுக்குத் துணை தருகின்றன.

பூதிகர் : இவ்வுரைகள் எவ்வாறு பொருந்தும்?

நீலகேசி : மனிதர் வழங்கும் மொழியில் பிற நூற்களிற் காணப்படும் அதேவகை பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்பதற்கான சிறப்புப் பண்பு எதுவும், இல்லாதிருப்பதனால் அது மனிதர் ஆக்கிய நூலே. தெய்வமே மாந்தர் நாவில் நின்று கூறியது எனக் கொண்டால், வேதமட்டுமென்ன, எல்லா நூல்களும் தெய்வத் தன்மை மிக்க ஆன்றோர் நாவில் தோற்றியதேயாகும். மேலும் வேதங்களைப்பற்றிக் கூறுகையில், பிருகதாரணிய உபநிடதம் பெரியோர்களால் கூறப்பட்டது. (மஹாதோ பூதஸ்ய நிஸ்வாஸிதம்) என்றே குறிப்பிடுதல் காணலாம். வேதங்களில் ஒன்று தித்திரியால் கூறப்பட்டதாதலால், தைத்திரி எனப்பட்டது. இதுவும், ஓர் ஆசிரியன் அருளியது எனக் கூறுகிறது. தித்திரி என்ற மனிதர்கூட அதே நூலில் குறிப்பிடவும் பெறுகிறார்.

பூதிகர் : வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப்பட்டன : ஆதலால், வேதங்கள் தொடக்கமற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது.

நீலகேசி : தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப் பொருந்தாதவை. இந்திரனும் சூரியனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்கிரிவரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல் ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம்விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழியாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞான காண்டத்தில்) எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், வினைப்பகுதியில் (கர்ம காண்டத்தில்) வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு யானை பரிசு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர்சனகரிடம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில் மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளரினும் கீழ்நிலையடைகிறது வேளாண் செல்வன் ஒருவன், தன் புதல்வருள் ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செயல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக உங்கள் சமயநூல்களே கூறுகின்றன.

உங்கள் மறை நூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம்ஆகியவற்றை ஆதரிக்கின்றன. செளத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சரிக்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையும் ண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம் தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற்படுகின்றன.

எடுத்துக்காட்டாக 'அஜேநயஷ்டவ்யம்' என் தொடரில் அஜம் என்பதனை ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொரு சாராரும் பொருள்கொள்ளும் படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபரிசரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபரிசரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிருகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக 'மாவிலங்கு' செய்யும்படி கூறுவது கேட்டு, ஊனுண்ணும்; விருப்புடன் வேள்விக்கு வந்த 'தேவர்கள்' வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதரிக்க, இருவரிடையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச்சான்றுமீறித் தேவர்புறம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் 'மா அரிசி' முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில் செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறுக்கக் கூடியதாயிருத்தலும் அதை நீங்கள் வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக்கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

பூதிகர் : நீங்கள் உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங் காட்டுவதானால் உங்கள் இறைவனாகிய அருகன் அதில் குறிப்பிடப்பட வேண்டும்!

நீலகேசி : ஆம் : இருக்கு வேதத்திலேயே,

"Arhan Bibarshi Sayakani Danvan
Arhantu Viswaroopam
Arhat Brahmi
Arha Eva Itham Sarvam
Eth Bootham Yach Abavyam
Ya Yevam Veda".
முதலிய வாசகங்கள் உள்ளன. இதேபோன்று வாய்மொழி (ஆகமங்கள்) அருளிய இறைவன் நிறையறிவினன் என்று சமணர் கொள்வதுபோலவே வேதங்களும்,


"Savetti Viswam Na Hi Thasya Vetta Thamahu ragriyam Purusham
Mahantam and Hiranyagarbasarvagnaha"

என்று கூறுகின்றன.

எல்லா மக்களும் நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள், உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல் இழிவும் ஆம் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலேயே உயர்வு தாழ்வு ஏற்படுமா? மேலும் உங்கள் நூல்களிலேயே திருமால் தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும் காலில் பிறந்த கங்கை தூயதாகவும்; உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மது கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறதே.

வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள், உங்கள் கொலைவேள்விக்கே இடம் தேடுகிறீர்கள். வேதங்களை முன்னோர்கள் நூலாகமட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம்.

நீலகேசியின் சொற்கள் பூதிகன் உள்ளத்திலும், அவன் மாணவர் உள்ளத்திலும் பதிந்து அவர்களைத் திருத்தின. அவர்கள் கொல்லாநெறி மேற்கொண்டு அப்பழ அறநெறியில் நிற்கத் தொடங்கினர்.

வேத வாதம் - உரை முற்றும்
---------

பூத வாதம்

வேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.

பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.

பிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயிரிழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன.


அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பிரிந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.

உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.

நீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்துணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது.

நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா)? முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?

பிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.

நீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எரிந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.

மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.

நல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.

ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகைதோறும் வேறுபடுவானேன்?

உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?

ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?

பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.



பிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயிரிழை ஆராய்ச்சி!

நீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றாள்.

பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.

பூத வாதம் - உரை முற்றும்


4 comments: