ARUNGALA CHEPPU - அருங்கலச் செப்பு












        # அருகன் வாழ்த்து


#     அணிமதிக் குடை அருகனைத் தொழ
அருவினைப் பயன் அகலுமே

      அழகானவனும் முழு நிலவைப் போன்ற வடிவும் வண்ணமும் பெற்ற சந்திராதித்யம், சகல பாசனம், நித்ய வினோதம் என்ற முக்குடை உடையவனும் ஆகிய அருகப் பெருமானை வணங்க நீங்குவதற்க்கு அரிதான வினைகள் அகலும்.
      ________________________________________

 **    அருங்கல மும்மை

1.     முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்
குற்றம்ஒன்று இல்லா அறம்.

      அனைத்துப் பொருளையும் ஒருங்கே அறியும் அறிவனை வாழ்த்தி, அவர் அருளிய குற்ற மற்ற அறத்தைக் கூறுவன்.
      ________________________________________

2.     நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்
தொக்க அறச்சொல் பொருள்.


      நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் கூடியதே அறம் என்று சொல்லப்படும் பொருள்.
நற்காட்சி
      ________________________________________

 **    நற்காட்சி

3.     மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந்தார்.

      எல்லாப் பொருள்களின் இயல்புணர்ந்த அருகபெருமான் அருளிய உண்மைப் பொருள்களை தெளிதல் நற்காட்சி என்பர்.
      ________________________________________

 **    நிலையான மெய்ப்பொருள்கள்

4.     தலைமகனும், நூலும், முனியும்இம் மூன்றும்
நிலைமைய ஆகும் பொருள்

      இறைவன், அவன் அருளிய ஆகமம், அதன்படி ஒழுகும் முனிவர் இம்மூன்றும் நிலைபெற்ற உறுதிப் பொருளாம்.
      ________________________________________

 **    இறைவன்

      இறைவன் இயல்பு

5.     குற்றம் ஒன்றுஇன்றி, குறைஇன்று உணர்ந்துஅறம்
பற்ற உரைத்தான் இறை

      குற்றம் குறை ஏதுமின்றி, அனைத்தின் இயல்பையும் உணர்ந்து, இல்லறத் துறவறங்களை எடுத்து விளக்கியவன் இறைவன்.
      ________________________________________

**     இறைவனிடம் இருக்கத் தகாதவை

6.     பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை

 *    பசி, வியர்வை, தாகம், பற்று, கோபம், கலக்கம் முதலான பதினெட்டுக் குற்றங்கள் இல்லாது ஒழித்தவன் இறைவன்
      ________________________________

**     இறைவனிடம் இருக்கத் தக்கவை

7.     கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி
உடையான் உலகுக்கு இறை

 *    வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு இறைவன்

      ________________________________

 **    இறைவனிடம் அறத்தினை உரைத்தல்

8.     தெறித்த பறையின் இராகாதி இன்றி
உரைத்தான் இறைவன் அறம்

 *    வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன் இறைவன்

      ________________________________

 **    நூல்

9.     என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர்

 *     உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் ஒலி வடிவில் வெளிப்பட்டு, பிறகு எழுத்தில் நிலைபெற நின்றது நூல் என உணர்க.
      ________________________________

10.    மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண்ஆகித்
துக்கம் கெடுப்பது நூல்

 *    பொருள்களின் உண்மை இயல்பை உணரச் செய்து, உயிர்களுக்குப் பாதுகாப்பாகி, பிறவித் துயரங்களை கெடுக்கவல்லது நூல்.
     

**    முனி

11.   இந்திரியத்தை வென்றான் தொடர்பட்டோ(டு) அரம்பம்
முந்து துரந்தான் முனி.

*     ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி, அகப்புறப் பற்றுகளை நீக்கி,தொழில் அனைத்தும் முற்றுமாக துறந்தவர் முனிவர் ஆவர்
________________________________________

12.    தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு.

*     எழுவகைத் தத்துவங்களை அறிந்து, தள்ளத்தக்கன தள்ளி, கொள்ளத்தக்கன கொண்டு, தியானங்களில் பொருந்தல் முனிகளது பெருமையாம்.
________________________________________

13.    எட்டுவகை உறுப்பிற்று ஆகி இயன்றது
சுட்டிய நற்காட்சி தான்

*     ஆகமங்கள் போற்றிக்கூறும் நற்காட்சியானது எட்டுவகை உறுப்புகளோடு அமைந்தது ஆகும்
________________________________________
**    நற்காட்சி வேண்டுபவை

14.   ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை
மெய்பெற இன்னவை நான்கு

*     (இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி பொருள்களில்)ஆசையின்மை,(துறவோரிடம்)அருவெறுப்பு இன்மை, ( பிற சமயநெறிகளை நம்பும்) மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும்.

________________________________________

15.    அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல்
அறத்துக்கு அளவளா மூன்று

*     (அறவோரின்) குறைகளை நீக்கல் (விரதங்களில் வழுவினாரை) மீண்டும் அவ்வழி நிறுத்தல்,(அறவோர்களிடம்) அன்பு செலுத்துதல் என இவை மூன்று.
  

16.    அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு
     
*     அறத்தின் உண்மையை அனைவருக்கும் விளங்கக் கூறுதல் என்னும் உறுப்புடன் நற்காட்சியின் உறுதி காட்டும் உருப்புகள் எட்டாகும்.

      ________________________________

**     ஐயம் இன்மை

17.    மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்
ஐயம் இலாத உறுப்பு
     
*     இறைவன் அருளிய உண்மை நெறியில் உறுதியுடன் இருத்தல் நற்காட்சியின் ஐயம் இல்லாத உறுப்பாகும்

      ________________________________

 **    அவா இன்மை
18.    தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்(று) அவாஇன்மை நற்கு

  *   நிலையற்ற புலன் இன்பங்களில் பற்று வைக்காமை தான் பிறவியை ஒழிக்கும் நல்ல அவாமின்மை உறுப்பாகும்

      ________________________________

**     உவர்ப்பின்மை

19.    பழிப்பில் அருங்கலம் பெய்துடம்பு என்று
இழிப்பின்மை மூன்றாம் உறுப்பு

 *    (குறையில்லாத மும்மணி பெய்த உடம்பு என்று துறவியரது மாசுண்ட உடலை இழிவாகக் கருதாமை உவர்ப்பு இன்மை உறுப்பாகும்.


      ________________________________

**     மயக்கமின்மை

20.    பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
மோவம் இலாத உறுப்பு.

  *   தீவினைக்கு ஏதுவான மாறுபட்ட நெறியினைச் சேராமையும், அந்நெறியாரைப் போற்றாமையும், 'மயக்கம் இன்மை' உறுப்பாகும்


**     அறப்பழி நீக்கல்

21.    அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும்
திறத்தின் உவ கூவனம்

*      அறத்துள்ளாருக்கு நேரும் தவறுகளை எவ்வாறேனும் வெளிப்படுத்தாது காத்து அவருக்கு வரும் பழியை நீக்கல் அறப்பழி நீக்கல் உறுப்பாகும்
      ________________________________________

**     அழிந்தாரைத் தாங்கல்

22.    அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்
சிறப்புடை ஆறாம் உறுப்பு

*     அறவழியினின்றும் எப்படியோ தவறினவர்களை மீண்டும் நன்னெறிப்படுத்துதல் மேன்மைமிக்க அழிந்தாரைத்தாங்கல் உறுப்பு.

      ________________________________________

**     அறத்திற்கு அளவளாவல்

23.    ஏற்ற வகையில் அறத்துளார்க் கண்டுவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு.

*     அறவழியில் நிற்போருடன் தக்க முறையில் அன்புடன் உறவாடுதல் சொல்லிய அறத்துக்கு அளவளாவலின் பெருமையாம்.

      ________________________________________

**     அறத்தை விளக்கல்

24.    அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்கல் நன்கு

*      அனைவருக்கும் அறத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்க வைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம்.

      ________________________________________

**     எடுத்துக்காட்டு கதைகள்

25.    அஞ்சன சோரன், அனந்தமதி, உலகில்
வஞ்சம் இல் ஒத்தா யணன்.

*      முதல் மூன்று உறுப்புகளுக்கு அஞ்சன சோரன், அனந்தமதி, ஒத்தாயணன் வரலாறுகள் விளக்கம் தரும்.
       

26.    இரேவதை யாரும் சிநேந்திர பத்தரும்
தோவகையின் பாரிசரும் சொல்.

*     இரேவதை, சிநேந்திர பத்தர், பாரிசர் இவர்தம் வரலாறு மயக்கமின்மை. அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல் உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டாம்.
      ________________________________________

27.    வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும்
நிச்சயம் எட்டும் உரை.

 *    வச்சிர முனிவர், விக்ஷ்ணுமுனிவர் வரலாறுகள் முறையே அறத்திற்கு அளாவளாவல், அறத்தை விளக்கல் இரண்டுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
      ________________________________________
     
28.    உறுப்பில் குறையின் பயனின்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று.

*     முற்கூறிய எண்வகை உறுப்புகளில் ஒன்று குறைந்தலும் மாறுபட்ட மந்திரம் போலப் பயனற்றதாகும்
      ________________________________________
**     நற்காட்சிக்கு வேண்டாதவை

29.    மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகைஇல் காட்சியார்க்கு இல்.

 *    குற்றமற்ற நற்காட்சியாளரிடம் மூவகை மூடங்கள் எண்வகை மதங்கள் இருப்பதில்லை.
      ________________________________________

**     மூடம்

**     உலக மூடம்

30.    வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறுஆடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு

 *    மலையிலிருந்து வீழ்ந்தும், நெறுப்பில் பாய்ந்தும் நீர் நிலைகளில் மூழ்கியும் இறத்தல் புண்ணியம் என் நம்புதல் உலக மூடம் ஆகும்.


**     தேவ மூடம்

31.    வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு.

*     தெய்வங்கள் நன்கு வாழ வைக்கும் என்று அறியாமை கொண்டு வணங்குதல் மிக மோசமான தெய்வ மூடம்.

      ________________________________________

32.    மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை ஏத்தல்
துயக்குடைத் தெய்வ மயக்கு.

**      (பிறவிக்குக் காரணமான) மோகம், ஆசை, கோபம் முதலான பண்புகளை உடையாரைத் தெய்வங்களாகப் போற்றுதல் ந்ம்பிக்கைத் தளர்ந்தாரது தெய்வ மூடமாகும்.

      ________________________________________

**     பாசண்டி மூடம்

33.    மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
பாசண்டி மூடம் எனல்.

       பிறவியில் அழுத்தும் நெறியில் நின்ற மாற்றுக் காட்சியாரைப் போற்றி வணங்குதல் பாசண்டி (வேட) மூடம் எனப்படும்.

      ________________________________________

**     மதம்

**     எண் வகை மதங்கள்

34.    பிறப்பு குலம்வலி செல்வம் வனப்பு
சிறப்புதவம் உணர்வோடு எட்டு.

      குடி, குலம், வலிமை, செல்வம், எழில், பெருமை, தவம், அறிவு இவை எட்டாகும் மதம்.
      ________________________________________

 **    செருக்கால் வீழ்ச்சியே

35.    இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்.

*     இவ்வெட்டுச் செருக்குகளால் 'எமக்கு ஒப்பு இல்லை நாமே மேலானவர்' என்று இறுமாந்து பிறரை இகழின் நற்காட்சி நாசம் அடையும்.


** நற்காட்சியின் சிறப்பு

36.    அறமுண்டேல் யாவரும் எள்ளப் படாஅர்
பிறகுணத்தால் என்ன பயன்?

*     நற்காட்சி இருக்குமானால் அனைவராலும் போற்றப் படுவர். இதை விடுத்து பிற குணங்களால் என்ன பயன்? ஏதுமில்லை.
      _________________________________

37.    பறையன் மகன்எனினும் காட்சி உடையான்
இறைவன் என உணரற் பாற்று.

*     இழி குலத்தில் தோன்றிய ஒருவனும் நற்காட்சியுடையனாயின் இறைவனாவான் என உணர்தல் வேண்டும்.

      _________________________________

38.    தேவனும் நாயாகும் தீக்காட்சி யால் நாயும்
தேவனாம் நற்காட்சி யால்

*     நற்காட்சி இல்லாதவன் தேவனாக இருப்பினும் நாயாகப் பிறப்பான்; நற்காட்சி உண்டானால் நாயும் தேவ கதியைச் சேரும்.

      _________________________________

**     அவிநயம்

39.    அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பார் இடை.

*     நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும்.

      _________________________________


40.    நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று.

 *    இறைவன் ஆகமம், எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவிநயம் என்பர் நல்லோர்.

_________________________________
     
**  வணங்கத் தகாதார்

41.    மிச்சை இலிங்கியர்நூல், தெய்வம், அவாவினோடு
அச்சம், உலகத்தோடு ஆறு

*     பொய்க்காட்சியுடைய தவத்தர், நூல், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தாலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவிநயம் ஆகும்.

      _________________________________

**     அவிநய நீக்கம்

42.    இவ்வாறும் நீக்கி வணங்கார்; அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது.

 *    இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.

      _________________________________

**     நற்காட்சியின் இல்லார் அழிவு

43.    காட்சி, விசேட உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும்.

*     நற்காட்சியினால்தான் ஞானமும், ஒழுக்கமும் நல்ஞானமும், நல்லொழுக்கமுமாகப் பெருமை பெறும்.

      _________________________________


44.    நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்
ஒற்கா ஒசிந்து கெடும்

 *    நற்காட்சி இல்லாரது ஞான ஒழுக்க பெருமைகள் வறிதாகி முறிந்து கெடும்

      _________________________________

45.    அச்சுஇலேல் பண்டியும் இல்லை சுவர்இலேல்
சித்திரம் இல்லதே போன்று.

 *    அச்சு இல்லாமல் வண்டியும், சுவர் இல்லாமல் சித்திரமும் இல்லாதது போல நற்காட்சி இல்லாமல் மற்றவை இல்லை.

_________________________________

**     நற்காட்சியின் இல்லார் அழிவு

46.  காட்சியோடு ஒப்பதுயாம் காணோம் வையத்து
மாட்சி உடையது உயிர்க்கு.

*   இவ்வுலக உயிர்களுக்கு நற்காட்சிக்கு ஒப்பாக பெருமை உடையது வேறு ஒன்றுமில்லை.

________________________________________

**  நற்காட்சி உடையோர் பெருமை

47.  விரதம் இலர்எனினும் காட்சி உடையார்
நரகம் புகுதல் இலர்.

*    நற்காட்சியைப் பெற்று விரதம் கைக்கொள்ளாவிடினும் அவர் நரகம் புகார்.

________________________________________

48.  கலங்கல்இல் காட்சி உடையார் உலகில்
விலங்காய்ப் பிறத்தல் இலர்.

*    கலங்கமற்ற நற்காட்சியாளர் விலங்காகவும் பிறவார்.

________________________________________

**   பெண்பிறப்பும் அலிப்பிறப்பும்

49.  பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக்
கொண்ட நற்காட்சி யாவர்

*    குறை நீங்கிய நற்காட்சியுடையவர் பெண்ணாகவும் அலியாகவும் பிறவார்.

________________________________________

**    இழிகுலப் பிறப்பு

50.  இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்
பழியறு காட்சி யவர்

*    இறைவன் அருளிய பழிப்பில்லாத நற்காட்சியுடையவர் எக்காலத்தும் தாழ்ந்த குலத்தில் தோன்றுவதில்லை..


_________________________________

**     ஊனமுற்றுப் பிறத்தல்

51.    உறுப்புஇல் பிறர்பழிப்ப என்றும் பிறவார்
மறுப்பாடுஇல் காட்சி யவர்

*     குற்றமில்லாத நற்காட்சியுடையவர் பிறர் எள்ளுமாறு ஊனமுள்ளவராக எப்போதும் பிறவார்.

      ________________________________________

**     வறுமை வாட்டுவதில்லை

52.    குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்
பெறுவாழ்க்கை யுள்பிறத்தல் இல்.

*     நற்காட்சியுடையார் அற்ப ஆயுள், நோய், வறுமை முதலியவற்றைப் பெறுதல் இலர்.

      ________________________________________

**     சிறப்புப் பிறப்புகள்

53.    அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர்
புரைதீர்ந்த காட்சி யவர்.

*     குறையற்ற நற்காட்சியுடையார் அரசர், இளவரசர், பெருவணிகர் என இப்படித்தான் பிறப்பர்.

      ________________________________________

**     தேவர் பிறப்பு

54.    மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர்
தோவகைஇல் காட்சி யவர்.

*     குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர்.

      ________________________________________

**     உயர் தேவராகப் பிறத்தல்

55.    விச்சா தரரும் பலதேவரும் ஆவர்
பொச்சாப்புஇல் காட்சி யவர்

*     வித்தியாதரராகவும் பலதேவராகவும் பிறப்பர், மறதி அற்ற நற்காட்சியர்.
.
________________________________________

**     அருக பதவி

56.    முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சி யவர்

*     ஆசையை அறுக்கும் காட்சியுடையவர் இந்நிரபதவி, மன்னர்பதவி, அருகபதவியோடு வீடுபேறும் பெறுவர்.

________________________________________

**     நல் ஞானம்

57.    பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல்
மருள்அறு நல்ஞான மாண்பு.

*     உயிர் முதலாகிய ஒன்பது பொருள்களின் உண்மை இயல்பை உள்ளவாறு உணர்தல் மயக்கம் அறுக்கும் நல் ஞானத்தின் பெருமையாம்.

________________________________________

**     ஆகமங்கள்

58.    சரிதம் புராணம் அருத்தக் கியானம்
அரிதின் உரைப்பது நூல்

*     (சிறப்புடை ஒருவர் வரலாறு கூறும்) சரிதமும், (மகாபுருடர்களின் வரலாறு கூறும்) புராணமும், ( நான்கு புருஷார்த்தங்களைக் கூறும்) அருத்தக் கியானமும் ' பிரதமாநுயோகம்' நூலாம்.

________________________________________

59.    உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவுஇன்று உரைப்பது நூல்

*     உலக அமைப்பையும், கால நிலைகளையும் முரண்பாடு இல்லாமல் உரைப்பது கரணானுயோக நூலாம்

________________________________________

60.    இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
      புல்ல உரைப்பது நூல்

*     இல்லறம், துறவறம் இவ்விரண்டினையும் பொருத்தமாக விளங்க உரைப்பது சரணானு யோக நூலாம்.




__________________________________  


61.    கட்டோடு வீடும் உயிரும் பிறபொருளும்
முட்டின்றிச் சொல்லுவது நூல்.

*     வினைபந்திக்கும் நிலையும், வீடுபேறு நிலையும், சீவ, அசீவ பொருள்கள் நிலையும் முழுதாக உரைப்பது திரவியானுயோக நூலாம்.

      __________________________________

**     நல்லொழுக்கம்

62.    காட்சி உடையார் வினைவரும் வாயிலின்
மீட்சியா நல்லொழுக்கம் நன்று

*     நற்காட்சியாளரின் உயிரில் வினைகள் வந்து சேராவண்ணம் அவ்வழியை அடைத்து அவரை நன்கு மீளச்செய்வது நல்லொழுக்கம் ஆகும்

      __________________________________

**     மகாவிரதம்

63.    குறைந்தூஉம் முற்ற நிறைந்ததூஉம் ஆக
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு

*     அந்த நல்லொழுக்கம் அணுவிரதம் மகாவிரதம் என இரண்டு என்று சொல்லுவர்

      __________________________________ 


64.    நிறைந்தது இருடிகட்கு ஆகும்; மனையார்க்கு
ஒழிந்தது; மூன்று வகைத்து.

*     மகாவிரதம் முற்றும் துறந்த முனிவர்களுக்கும் , அணுவிரதம் இல்வாழ்வார்க்கும் உரியதாம்; அணுவிரதம் மூவகைப்படும்.

      __________________________________

**     இல்லறத்தார் விரதம்

65.    அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம்.

*     ஐந்து பகுதிபட்ட அணுவிரதமும், மூன்று பகுதிபட்ட குணவிரதமும், நான்கு பகுதிபட்ட சிக்கா விரதமும் இல்லறத்தார் விரதம் என அறிக.


 __________________________________

**  அணுவிரதம்

66.    பெரிய கொலைபொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து.

*     இயங்குயிர்களைக் கொல்லாமை, பொய் கூறாமை, திருடாமை, பிறர்மனை விரும்பாமை, மிகுபொருள்விரும்பாமை என அணுவிரதம் ஐந்தாகும்.

      __________________________________

**     கொல்லாமை

67.    இயங்குயிர் கொல்லாமை, ஏவாமை ஆகும்
பெருங்கொலையின் மீட்சி எனல்

*     இயங்குயிரைத் தான் கொல்லாமலும் கொல்லுவித்தல் செய்யாமலும் இருத்தல் இயங்குயிர் கொல்லாமை அணுவிரதம் ஆகும்.

      __________________________________

**     அதிசாரம் ஐந்து

68.    அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்
இறப்பப் பொறை இறப்புஒர் ஐந்து

*     உறுப்பைக் குறைத்தலும், அடித்து வருத்துதலும், நெருங்க அடைத்து வைத்தலும், கயிறு முதலானவற்றால் கட்டிப்போடுதலும், மிகுபளு எற்றலூமாகிய ஐந்தும் அதிசாரமாம்.

      __________________________________

**     பொய்யாமை

69.    பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும் இரண்டாம் வதம்.

*     பாவத்திற்குக் காரணமானவற்றைப் பேசாது இருத்தலும், பிறரைப் பேச ஏவாது இருத்தலும் பொய் கூறாமை எனும் இரண்டாவது விரதமாகும்.

      __________________________________

**     அதிசாரம்

70.    குறளை மறைவிரி, இல்லடை வௌவல்
புறவுரை பொய்ஓலை கேடு

*     கோள் சொல்லலும், இரகசியங்களைக் கூறலும், ஒப்படைத்த பொருளை இல்லை என்றலும், உண்மைக்கு மாறாக உரைத்தலும், பொய்க்கடிதம் எழுதுதலும் பொய்யாமைக்குக் கேடாம்.
__________________________________

**  அணுவிரதம்

*     திருடாமை

71.    கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்
கொடாதது கொள்ளா வதம்.

*     உரியார் தராமல் பிறர் பொருளை எடுத்தலும், பிறர் எடுத்துவர ஏவாமல் இருத்துலும் திருடாமை வதம் ஆகும்.
      __________________________________

72.    குறைவு, நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்
மறைய விராதல் இறப்பு.

*     குறைத்துக் கொடுத்தலும், கூடுதலாக எடுத்தலும், கொள்ளை அடித்தலும், கலப்படம் செய்தலும் கொடாது, கொள்ளாமை விரதத்திற்கு அதிசாரம் ஆகும்.

      __________________________________

73.    கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை
உள்ளினர் கோடலோடு ஐந்து

*     திருடர்களுடன் தொடர்பு கொள்ளுதலும், அவர் கொடுக்கும் பொருளை மலிவாகப் பெறுதலோடும் திருடாமையின் அதிசாரம் ஐந்தாகும்

      __________________________________

**     காமமின்மை

74.    விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல்
மதிப்பின்மை நான்காம் வதம்.

*     தனக்குரியாளைத் தவிர்த்து பிற பெண்டிரைக் கூடுதலை மனத்தாலும் எண்ணாமை 'பிறன் மனைநயவாமை' என்னும் நான்காம் விரதமாகும்.

      __________________________________

**     அதிசாரம்

75.    அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
மனங்கொள் விலார்இணை கேடு

*     காமசேவைக்கு உரிமை இல்லாத உறுப்புகளில் விளையாடுதல், வரம்பு கடந்த காம உணர்வு, பரத்தையர் தொடர்பு பிரம்மசரியத்துக்கு கேடு தருவன.

__________________________________

**     சோரம் போதல்

76.    பிறர்மனை கோடல், பிறர்க்குச் செல்வாளைத்
திறவதில் கோடலோடு ஐந்து.

*     பிறர் மனைவியைச் சேரல், பிறர்க்கு உறுதி செய்தவளை வலிந்து கொள்ளலோடு இதன் அதிசாரங்கள் ஐந்தாம்.

      __________________________________

**     பொருள் வரைதல்

77.    பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை
இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம்.

*     தேவைப்பட்ட பொருளையே வைத்திருத்தலும் , பொருளாசையை அடக்குதலும், பிறர்வழி பொருளைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவிரதமாம்.

      __________________________________

78.    இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்புமிகைக் கோடலோடு ஐந்து

      விலங்குகள் மீது நெடுந்தூரப் பயணமும் நெடுநாள் தானியங்களைச் சேமித்து வைத்தலும், லோபமும், பிறர் ஆக்கம் கண்டு பொறாமையும், ஆற்றல் மீறிய செயலில் இரங்குதலும் இதன் ஐந்து அதிசாரங்களாம்.

      __________________________________

**     அணுவிரதச் சிறப்பு

79.    ஐயைந்து இறப்புஇகந்த ஐந்து வதங்களும்
செய்யும் சுவர்க்கச் சுகம்.

*     அதிசாரங்கள் இருபத்தைந்தும் இல்லாது கைக்கொண்ட அணுவிரதம் ஐந்தும் தேவ இன்பத்தைத் தரும்.

      __________________________________

**     அணுவிரத்தால் சிறப்படைந்தவர்கள்

80.    சட்டி தனதேவன் பாரீசன் நீலியும்
பெற்றர் சயனும் சிறப்பு.

*     கொல்லாமையினால் சட்டி புலையனும், பொய்சொல்லாமையால் தனதேவனும், களவு செய்யாமையால் பாரிசேனன், பிரம்மச்சரியத்தால் நீலி நங்கையும், மிகு பொருள் விரும்பாமையால் ஜயகுமரனும் ஆகிய ஐவரும் அணுவிரதத்தால் சிறப்படைந்தமைக்குச் சான்றாவர்


__________________________________

**  விரதமின்மையால் கேடடைந்தவர்கள்

81.    தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நனைதாடி வெண்ணெய் உரை

*     தனஸ்ரீ கொலைக் குற்றத்தாலும், சத்தியகோடன் பொய் குற்றத்தாலும், உறித்தாபதன் திருட்டு குற்றத்தாலும் , தளவரன் காமக் குற்றத்தாலும், தாடிவெண்ணெய்காரன் பேராசைக் குற்றத்தாலும் ஆகிய ஐவரும் அணுவிரதம் இல்லமையால் கேடு அடைந்தமைக்குச் சன்றாவர்.

      __________________________________

**     எட்டு மூலகுணம்

82.    கள்ளொடு தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்
தெள்ளுங்கால் மூல குணம்

*     புலால் உண்ணாமை, கள்குடியாமை, தேன் அருந்தமையொடு மேற்கூறிய ஐந்து அணுவிரதமும் தெளியுங்கால் மூல குணம் எனப்படும்.

      __________________________________

**     குணவிரதம்

**    திசை விரதம்

83.    வரைப திசைபத்தும் வாழும் அளவும்
புரைவுஇல் திசைவிரதம் என்.

*     வாழ்நாள் முழுவதும் திசை பத்திலும் குறித்த தொலைவுக்கு மேல் செல்லுதல் இல்லை என உறுதி எடுத்தல் குற்றமில்லாத திசை விரதமாம்.

      __________________________________

**     திசை விரத எல்லைகள்

84.    ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு.

*     ஆறு, மலை, கடல், காடு, இவற்றை எல்லையாகக் கொள்ள வேண்டும் என்று அறிஞர் கூறுவர்.

      __________________________________

**     மகாவிரதம்

85.    எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று

*     வரையறுத்த எல்லைக்கப்பால் நடைபெறும் பாபங்கள் அணு விரதியைச் சேராமையால் இவ்விரதத்தை மாவிரதத்தோடு ஒப்பாக சொல்லுவர்.

__________________________________


**     முற்றும் துறத்தல்

86.    சிறியகொலை பொய் களவொடு காமம்
பொருளைத் துறத்தலோடு ஐந்து.

*     தாவரங்களையும் கொல்லாமை, பொய், களவு, காமம், பொருட்பற்று இவை இல்லாமை யாகிய ஐந்தும் மகாவிரதம் ஆகும்.

      ________________________________________

**     எட்டு மூலகுணம்

87.    கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல்
தலையாய மாவத மாம்

*     கொலை முதலிய ஐந்தினையும் முழுமையாக துறத்தல் தலையாய மகா விரதமாகும்.

      ________________________________________

**     திசை விரதத்தின் இறப்பு

88.    இடம் பெருக்கல், எல்லை மறத்தல் கீழ்மேலோடு
உடன் இறுத்தல், பக்கம் இறப்பு

*     முன்பே முடிவு செய்த இடங்களின் எல்லைகளை விரிவாக்குதல், அல்லது மறந்துவிடுதல், அனைத்து திசைகளிலும் தன் அளவை மீறி செல்லுதல் திசை விரததின் அதிசாரங்களாகும்.

      ________________________________________

**     பயனில செய்யாமை

**    அனர்த்த தண்ட விரதம்

89.    எல்லை அகத்தும், பயம் இல மீண்(டு) ஒழுகல்
நல்அனத்த தண்ட வதம்.

*     வரையறைக்குட்பட்ட இடத்திலேயும் பயனற்ற செயல்களைப் புரியாமல் போற்றுதல் நல்லதோர் அனர்த்த தண்ட விரதமாகும்.

      ________________________________________

90.    ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளிச்
சிந்திக்கச் செய்வன் தெரிந்து.

*     ஆகமத்தில் கூறிய வண்ணம் ஐந்துவகையான அனர்த்ததண்ட விரதங்களையும் அனைவரும் அறியுமாறு முறையாகக் கூறுகின்றேன்.


__________________________________

**     தீய சிந்தை

91.    ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்
தீயுறு தீச்சிந்தை யாம்.

*     .விருப்பு வெறுப்புகளை வளர்க்கும் தீய எண்ணங்கள் கொடிய பாபத்திற்குக் காரணமான தீச்சிந்தை எனப்படும்.

      __________________________________


**     பாப உபதேசம்

92.    சேவாள், விலைகொளல் கூறுதல் கூட்டுதல்
பாபஉப தேசம் எனல்

*     பறவை, விலங்கு, அடிமைகள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் கொள்ளவும் கவரவும் வழி கூறுவதைப் பாபோபதேசம் என்பர்.

__________________________________

**     பயனில் செயல்

93.    பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயம்இல் பமாதம் எனல்.

*     காரணமிண்றி தாவரங்களை அழிப்பதும் , பூமியை அகழ்வதும் பயனற்ற பிரமாதம் எனப்படும்.

      __________________________________

**     கொலை கொடுத்தல்

94.    தீகருவி, நஞ்சு, கயிறு, தடி, நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம்

*     கொடிய கொலைக்கருவிகளையும், தீ, நஞ்சு, கயிறு, தடி, நார் போன்றவற்றையும் தானமாக வழங்குதல் ஹிம்சாதானம்எனப்படும்.

__________________________________

**     தீயன கேட்டல்

95.    மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொற்கேட்டல்
பாவச் சுருதி எனல்

*     ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் பாவச் சுருதிஎனப்படும்.

__________________________________
**     ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்பு

96.    நகையே நினைப்பு மொழியின்மை கூறல்
     மிகைநினைவு நோக்கார் செயல்.

*     நகைச்சுவைப் பேச்சு, குரும்பு செயல், பயனற்ற சொற்கள் துய்ப்புணர்வு, சிந்தனையற்ற செயல் ஆகியவை அனர்த்தண்ட விரதத்தின் அதிசாரங்களாம்..

__________________________________

**     வரும் முன் காத்தல்

97.    ஐந்துஅனத்த தண்ட விரதக்கு இறப்பிவை
முந்துஉணர்ந்து காக்க முறை

*     மேற்கூறிய ஐந்து இறப்புகளும் நேராதபடி உணர்ந்து விழிப்புடன் முறையாக அனர்த்ததண்ட விரதத்தை அணுசரித்தல் வேண்டும்.

__________________________________

**     ஐந்தன் சுவை அடக்கல்

**     பரிக்கிரக பரிமாண விரதம்

98.    போக உபபோக பரிமாணம் என்றுரைப்பர்
வாயிற் புலன்கள் வரைந்து.

*     ஐம்பு நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஓர் அளவுடன் வரையறுத்து துய்ப்பது பரிக்கிரக பரிமாண விரதம்எனப்படும்.

__________________________________

**     போகப் பொருள்கள்- உபபோகப் பொருள்கள்

99.    துய்த்துக் கழிப்பன போகம்; உபபோகம்
துய்ப்பாம் பெயர்த்தும்எனல்.


*     ஒரேமுறை துய்த்தற்குரியவை போகப்பொருள், மீண்டும் மீண்டும் பயன் படுபவை உபபோகப் பொருள் எனப்படும்.

__________________________________

100.   மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளும் மதுவும்
துயக்கில் துறக்கப் படும்.

*     அறிவை மயக்குவதாலும், கொலைப் பாபம் நேர்வதாலும், கள், தேன் இவற்றை அறவே நீக்குவது அவ்விரதத்தின் பாற்படும்.


__________________________________

101.   வேப்ப மலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழம்
நீப்பர் இவைபோல் வன.

*     விரதமுடையவர்கள் வேப்பம்பூ இஞ்சி, வெண்ணெய், அத்திப்பழம் இவற்றையும்
உண்ணாது ஒழிப்பார்கள்
      __________________________________
     
102.   இயமங்கள் கால வரையறை இல்லை;
நியமங்கள் அல்லா வதம்

*     இறக்கும் வரை ஏற்கும் விரதம் 'இமயவிரதம்'; இவ்வளவு காலம் என வரையறுத்து மேற்கொள்வது ‘நியமவிரதம்’ ஆகும்

      __________________________________

103.   உடுப்பன, பூண்பன, பூசாந்தும் ஊர்தி
படுப்ப , பசிய நீராட்டு

*     ஆடை, அணி, மலர், மணப் பொருள், ஊர்தி படுக்கை, குளிர்ந்த நீரல் நீராடுதல்

__________________________________

104.   கோலம் இலைகூட, நித்த நியமங்கள்
கால வரையறுத்தல் நற்கு

*     வெற்றிலைச் சுவைத்தல் போன்றவற்றைத் தமது ஆற்றலுக்கேற்ப அன்றாடம் வரையறுத்து ஏற்றல் பயன் தருவதாகும்.

      __________________________________

**     வரையறுத்துக் கொள்ளும் நியமமுறை

105.   இன்றுபகல், இரா இத்திங்கட்கு, இவ்ஆண்டைக்கு
என்று நியமம் செயல்

*     ஒரு பகல், ஓர் இரவு, இத்தனைத் திங்கள், இத்தனை ஆண்டுகள், என்று கால வரையறை செய்தல் நியமமாகும்


__________________________________

**     பரிமாண விரதத்தின் இயல்பு

106.   வேட்கை, வழிநினைப்பு, துய்ப்பு மிகநடுக்கு,
நோக்கு இன்மை ஐந்தாம் இறப்பு

      நீக்கிய பொருள்களை விரும்புவதும் அவை பெறும் வழிச் சிந்திப்பதும் அவற்றை துய்த்தலும் தளர்வதும் விரதம் நினையாமையும் அதிசாரங்களாகும்

      __________________________________

**     சிக்கா விரதம்

*     சாமாயிகம்

107.   கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டுஒழுகல் சாமா யிகம்

*     ஏற்றுக் கொண்ட உறுதி குலையாமல் கொலை முதலிய ஐம்பாவங்களையும் நினையாது ஆன்மத் தியானத்தில் நிலைத்தல் சாமாயிகம் எனப்படும்.

      __________________________________

**     கட்டுகளாவன

108.   கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை
கூறிய கட்டுஎன்று உணர்

*     ஆடைகள் அவிழாமை தலைமயிர் கலையாமை விரல் பியாமை நிலை குலையாது நிற்றல் அமர்தல் கட்டு எனப்படும்.

      __________________________________

**     சாமாயிக விரத்திற்கு உரிய இடங்கள்

109.   ஒருசிறை இல்லம் பிறவுழி யானும்
மருவுக சாமா யிகம்

*     இல்லத்தின் ஒரு பக்கத்திலோ அல்லது வேறு அமைதியான இடங்களிலோ சாமாயிகத்தை மேற்கொள்ள வேண்டும்.

      __________________________________

**     சாமாயிக விரத்திற்கு உரிய காலம்

110.   சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய்
ஓதிய காலம் அதற்கு

*     இறைவன் திருஉருவங்களை வணங்கும் போதும் உபவாசம் மேற்கொள்ளும் காலத்தும் சாமாயிகம் கொள்ளுதல் வேண்டும்

__________________________________

**     சாமாயிகம் முழுமையாக நிறைவு பெறுதல்

111.   பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம்.

*     நல்லதோர் சூழலைப் பெற்று ஆற்றலுக்கேற்ற வகையில் மகிழ்ச்சியுடன்
எண்ணிய காலம் வரை சாமாயிகத்தை மேற்கொண்டால் அது நிறைவைத் தரும்.

      __________________________________

**     உடல் வேறு உயிர் வேறு

112.   தனியன் உடம்புஇது; வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப் படும்.

*     சாமாயிகத்தின்போது இவ்வுடம்பு சுற்றம் முதலியன வேறானவை உயிருக்கும் இவற்றிற்கும் உறவில்லை என்பதை சிந்தித்தல் வேண்டும்.

__________________________________

**     வருந்துதலும் திருந்துதலும்

113.   இறந்தன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்தொழியா மீட்டல் தலை.

*     தான் செய்த தீமைகளுக்குத் தன்னை இழித்து நிந்தித்து மீண்டும் தவறியும் அவ்வாறு நேராது அடங்கிப் போற்றுதல் சாமாயிகத்தின் சிறப்பாகும்.
      __________________________________

114.   தீயவைஎல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித்
தூயவழி நிற்றலும் அற்று.

*     தீவினைக்குக் காரணமானவற்றைச் செய்யாது அடங்கி உயர் நெறியில் நிற்றலும் சாமாயிகம் ஆகும்

      __________________________________

**     வருந்துக

115.   ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையே
நின்று நினைந்து இரங்கற் பாற்று

*     சாமாயிகம் செய்வோர் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளைப் பற்றிச் சிந்தித்து இரங்குதல் வேண்டும்.


__________________________________


**     நல்லனவே நினைத்தல்-சொல்லல்-செய்தல்


116.   தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொற்செய்கை
மனத்தினில் சிந்திக்கற் பாற்று.

*     தனது உயிருக்கும் மற்ற உயிர்களுக்கும் மனம் மொழி செயல்களால் நன்மையே புரிய சிந்தித்தல் வேண்டும்.

      __________________________________

**     மறந்தும் தீயன நினையாமை

117.   பிறர்கண் வருத்தமும் சாக்காடும் கேடும்
மறந்தும் நினையாமை நன்று

*     பிறரை வருத்தவோ கெடுக்கவோ கொல்லவோ மனதாலும் நினையாதிருத்தல் நன்மை பயப்பதாகும்.

      __________________________________

**     வேண்டா உறவு

118.   திருந்தார் பொருள்வரவும் தீயார் தொடர்பும்
பொருந்தாமை சிந்திக்கற் பாற்று.

*     கெட்டவர்கள் முலம் பொருள் திரட்டலும் தீயோர்களுடன் நட்பு கொள்வதும் பொருந்தா என்பதை சிந்தித்து உணர்தல் வேண்டும்.

      __________________________________

**     ஆத்மா ஒன்றே நிலையானது

119.   கூடியவை எல்லாம் பிரிவனவாம்; கூடின்மை
கேடுஇன்மை சிந்திக்கற் பாற்று

*     சேர்ந்த அனைத்தும் நிலையற்றன விலகுவன என்பதையும் உயிர் நிலையானது பிறவற்றோடு கூடாதது என்பதையும் உணர்தல் வேண்டும்

      __________________________________

120.   நல்லறச் சார்வும் நவைஅற நீக்கலும்
பல்வகையால் பார்க்கப்படும்

*     உயர் அறத்தின்பால் பற்றுக் கொண்டு துன்பதத்திற்குக் காரணமான வினைகளை நீக்கும் உறுதியினைப் பலவகையாலும் உணர்தல் வேண்டும்.

 _____________________________

121.   உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை
உள்ளார் மறத்தல் இறப்பு

*     மனம் மொழி செயல்களால் மாறுபடுதலும் சாமாயிகத்தில் விருப்பக் குறைவும் காலத்தில் செய்யாமையும் சாமாயிகத்தின் அதிசாரங்களாம்.

      __________________________________

**     உண்ணா விரதம்

122.   உவா அட்டமியின்கண் நால்வகை ஊணும்
அவாஅறுத்தல் போசதம் எனல்

*     சதுர்தசி அட்டமி ஆகிய திதிகளில் நால் வகை உணவிலும் விருப்பமின்றி இருத்தல் போசத உபவாசம் எனப்படும்.

      __________________________________

**     உண்ணாநோன்பின் போது வேண்டாதவை

123.   ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று.

*     மகளிர் ஐம்பாவச் செயல்களையும் ஆடவர் அறுவகைத் தொழில்களையும் நீக்கி நீராட்டு மலர்ச்சூட்டு சந்தனம் முதலியவற்றை ஒதுக்குதல் வேண்டும்

      __________________________________

**     நோன்பின் போது வேண்டத்தகுவன

124.   அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதின் செய்யப் படும்.

*     உபவாச காலத்தில் அறம் கேட்டல் சிந்தித்தல் பிறருக்குரைத்தல் இவற்றைத் தவறாது மேற்கொள்ளல் வேண்டும்.

      __________________________________

**     ஒரு வேளை உண்ணுதல்

125.   உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல ஒருபோது எனல்.

*     நால்வகை உணவினை அறவே நீக்குதல் உபவாசம் என்றும் ஒரு வேளை ஏற்றல் போசதம் என்றும் கூறப்படும்

__________________________________

**     தொடர் உண்ணாவிரதம்

126.   போச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு
ஆரம்பம் செய்யான் எனில்

*     பட்டினி இடைவிட்டு முன்னாளும் பின்னாளும் ஒரு வேளை உண்ட தொழில் புரியாது ஆன்ம உணர்வில் இருத்தல் போசத உபவாசம் ஆகும்

      __________________________________

**     உண்ணாநோன்பிற்கு இறப்புகள்

127.   நோக்கித் துடையாது கோடல் மலம் துறத்தல்
சேர்கைப் படுத்தல் இறப்பு.

*     கவனிக்காமல் பொருள்களைக் கையாளலும், மலஜலம் கழித்தலும், படுக்கையில் படுத்தலும் உண்ணாநோன்பிற்கு இறப்புகளாகும்

      __________________________________

**     உண்ணா நோன்பை நசிப்பன

128.   கிரியை விருப்பு கடைப்பிடி இன்மை
உரிதின் இறப்பு இவைஐந்து.

*     சாமாயிகம், ஜபம் இவற்றை விரும்பாமையும் மனதைப் பலவாறு அலையச் செய்வதும் ஐந்து அதிசாரங்களாம்.


      __________________________________

**     இடம் வரைதல்

**     தேசம் கடக்காமை

129.   தேசம் வரைந்தொழுகல் கால வரைறையில்
தேசாவ காசிகம் என்.

*     குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட நாட்டிற் கப்பால் செல்வதில்லை என உறுதி செய்து ஒழுகல் தேசாவ காசிகம் ஆகும்.
      __________________________________

**     தேச வரையறை

130.   மனைச்செரி ஊர்புலம் ஆறுஅடவி காதம்
இனையஇடம் வரைதல் என்

*     இல்லம், சேரி, ஊர், வயல், ஆறு, காதம் இனையன எல்லைகளாக வரையப்படும்

__________________________________

**     கால வரையறை

131.   ஆண்டொடுநாள் திங்கள் இத்துணை என்றுஉய்த்தல்
காண்தகு காலம் அதற்கு

*     ஆண்டு, திங்கள், நாள் இத்துணை என வரையறுத்தல் கால வரையறையாம்
      __________________________________

**     எல்லைக்கு புறம்பான பாவம்

132.   எல்லைப் புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின்
புல்லுக நாளும் புரிந்து.

*     இதனால் அந்த எல்லைக்கப்பாலிருந்து பாபங்கள் வருவது தடைபடுவதால் இந்த விரதங்கள் விரும்பி ஏற்கக் கடவதாகும்.

      __________________________________

**     தேச வரையறைக்கு இறப்பு

133.   கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்
யாது ஒன்றும் விட்டு எறிதல் கேடு

*     எல்லைக்கப்பால் உள்ளவர்களுடன் பேசுதல், அங்கிருந்து பொருள் பெறுதல், பிறரை அங்கு அனுப்புதல், தன் உருக்காட்டுதல், பொருள் அவ் எல்லையில் எறிதல் ஆகியவை அதிசாரங்களாகும்.

      __________________________________

**     ஈகை

**     விருந்தோம்பல்

134.   உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்
கொண்டுஉய்த்தல் நான்காம் வதம்

*     உணவு, மருந்து, இடம், நூல் இவற்றைக் தானமாக தன் சக்திக்கேற்ப நல்லவர்கட்கு அளித்தல் அதிதிசம்விபாகம்என்னும் நான்காவது விரதமாகும்.

      __________________________________

**     துறவிகட்கு அறம் செய்தல்

135.   தானம் செயல் வையாவச்சம் அறம் நோக்கி
மானம்இல் மாதவர்க்கு நற்கு

*     அறம் உணர்ந்து செருக்கின்றி மாதவதத்தினைப் புரியும் முனிவர்களுக்கு நான்கு வகைத் தானங்களைச் செய்தல் வையா விருத்யம் எனப்படும்.


__________________________________

136.   இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படும்என்ப பண்புடை யார்க்கு.

*     துறவியர் மேலான இல்லறத்தோர் இவர் தம் துன்பங்களைப் போக்குதல் தன் ஆற்றலுக்கேற்ப உதவுதல் ஆகியவையும் வையா விருத்யம் எனப்படும்.

      __________________________________

**     உத்தம தானம்

137.   உத்தமர்க்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தம தானம் எனல்

*     மேலான துறவியர்க்கு ஒன்பது வகையான உயர் முறைபடி உணவளித்தல் மேன்மையான ஆகார தானம் எனப்படும்.

      __________________________________

**     இரட்டைக் கொடைகள்

138.   உத்தம தானம் தயாதானம் தம்மளவில்
வைத்துஒழியான் செய்க உவந்து.

*     தமது சக்திக்கேற்ப மாமுனிவர்களுக்கு அகாரமளித்தல் உயிர்களுக்கு அபயமளித்தல் ஆகிய இவற்றை மகிழ்வுடன் இடையறாது செய்வார்களாக.
     
__________________________________

**     துறவியர்க்கு வழங்கலின் பயன்

139.   மனைவாழ்க்கை யால் வந்த பாவம் துடைத்தல்
மனை நீத்தார்க்கு ஈயும் கொடை.

      அனைத்தையும் துறந்த முனிவர்களுக்கு அளிக்கும் ஆகாரதானத்தின் பயனால் இல்வாழ்வில் நம்மையுமறியாமல் சேர்ந்த பாபங்கள் நீங்கும் என்பதாகும்.

      __________________________________

140.   தான விடயத்தில் தடுமாற்றம் போம்துணையும்
ஈனம்இல் இன்பக் கடல்

*     இதுவரை கூறிய தானங்களினால் பிறவிப்பிணி நீங்கி வீடுபெறுகின்ற வரையில் குறைவற்ற கடல் போன்ற இன்பத்தை எய்தலாம்
 
__________________________________

**     எடுத்துக் காட்டுகள்

141.   சிரிசேன், இடபமா சேனையே,பன்றி
உரைகோடல் கொண்டை, உரை.

*     ஸ்ரீசேணன், விருக்ஷப சேனை, பன்றி, கௌண்டேசர் இவர் நம் வரலாறுகள் தானங்கள் பயனுக்கு எடுத்துக்காட்டுகளாம்.
      __________________________________

**     விருந்தோம்பலை வீணாக்குவன

142.   பசியதன் மேல்வைத்தல், மூடல், மறைத்தல்
புரிவுன்மை, எஞ்சாமை கேடு

*     ஆகாரத்தைப் பச்சையிலையில் வைப்பதும், அதனால் மூடுவதும், பச்சைப் பொருள்களைக் கலந்து மறைவாகத் தருவதும், விருப்பமின்றி அளிப்பதும், காலந்தவறி கொடுப்பதும் அதிசாரங்களாகும்.

      __________________________________

**     துறவறத்தாற்கு

**     பூசை

143.   தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை
ஓவாது செய்க உவந்து.
*
      தேவாதி தேவனாகிய அருக பெருமானின் அழகிய திருவடிகளுக்கு மகிழ்ச்சியுடன் இடையறாது பூஜை முதலியவற்றைப் புரிதல் வேண்டும்.

      __________________________________

**     வழிபாட்டின் வெற்றிக்கு சான்று

144.   தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்
மையுறு தேரை உரை

*     அருக பெருமானின் அடிகளைப் பூஜிப்போர் அடையும் சிறப்பினை அறிய கரிய தவளையின் வரலாறு எடுத்துக்காட்டாகும்.
      __________________________________

**     வடக்கிருத்தல்

**     சல்லேகனை

145.   இடையூறு, ஒழிவுஇல்நோய், மூப்பு, இவைவந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை

*     பலவழிகளில் வரும் துன்பங்கள், தீராத நோய், மிக்க மூப்பு இவை காரணமாக தொழில் புரிவதையும், உணவுகொள்வதையும் ஒழித்து நிற்றல் சல்லேகனை எனப்படும்.

__________________________________

**     எடுத்துக் காட்டுகள்

146.   இறுவாக்கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி
மறுஆய நீக்கப் படும்.

*     இறுதிக்காலத்தில் அறிவு, காட்சி, பலம், சுகம் ஆகிய உயிர்த்தன்மைகளை அடைவோம் என்ற உறுதியுடன் தீய எண்ணங்களை நீக்குதல் வேண்டும்.

      __________________________________

147.   பற்றொடு செற்றமே அற்றம் தொடர்ப்பாடு
முற்றும் துறக்கப் படும்

*     ஆசை, செற்றம், சுற்றம், பற்று இவற்றை அறவே நீக்குதல் வேண்டும்

      __________________________________

148.   ஆலோ சனையின் அழிவுஅகற்றி, மாதவன்கண்
மீள்வுஇன்றி ஏற்றுக் கொளல்.

*     உயிர் நெறியினின்றும் மனம் மாறுபட்டுச் சென்று தான் ஏற்ற விரதத்திற்குக் குறை நேர்ந்திருந்தால் அதை ஒளிக்காமல் குருவினிடம் வெளிப்படுத்தி மீண்டும் விரதத்தில் நிலைத்திருத்தல் வேண்டும்.

      __________________________________

149.   கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து

*     இளக்கமும் கலக்கமுமின்றி மனத்தை நிலையாக மகிழ்ச்சியுடன் ஆன்மத் தியானத்தில் இருத்த வேண்டும்.

      __________________________________

**     உண்ணாமை- பருகாமை

150.   ஊணொடு பானம் முறைசுருக்கி, ஓர்ந்தூணர்ந்து
மானுடம்பு வைக்கப் படும்

*     முறையாக உண்பதையும் பருகுவதையும் குறைத்து, மறுமைக்கு உறுதியானவற்றை ஆய்ந்தறிந்து இப்பெறுதற்கரிய உடலினின்று நீங்குதல் வேண்டும்.

__________________________________

**     எடுத்துக் காட்டுகள்

151.   மந்திரங்கள் ஐந்தும் மனத்துவரச் சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே என்.

*     சல்லேகனை காலத்து ஐந்து மந்திரங்களையும் மனத்தே இருத்திச் சிந்தித்தவர்கள் ஜினேந்திர பதவியை எய்துவர்.

      __________________________________

**     சல்லேகனையின் இறப்பு

152.   சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு

*     இறப்பதற்கும், இருப்பதற்கும் அஞ்சுதலும், செருக்குறுதலும், துய்த்த இன்பத்தை எண்ணுதலும், தொடர்புபட்டாரை நினைதலும்,

      __________________________________

153.   நிதானத் தோடு ஐந்து இறப்புமின்றி முடித்தார்
பதானம் அறுத்தார் எனல்.

*     தான் இந்நிலை எய்தல் வேண்டும் என எண்ணுதலும் ஆகிய ஐந்தும் அதிசாரமின்றி சல்லேகனையை முடித்தவர் பரிவர்த்தனை ஐந்தினைக் கெடுத்தவராவர்.

      __________________________________

**     அறத்தின் பயன்

154.   அறத்துப் பயனைப் புராண வகையில்
திறத்துஉள்ளிக் கேட்கப் படும்

*     அறத்தினால் விளையும் ஆக்கங்களைப் புராணங்கள் முதலியவற்றில் நன்கு கற்று கேட்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

      __________________________________

155.   பிறப்புபிணி, மூப்பு சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன்.
     
*     பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு இந்நான்கினையும் ஒழிப்பதுதான் அறத்தின் பயனாகும்.
__________________________________


**     எடுத்துக் காட்டுகள்

156.   பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை
உருவின் பிறப்புல் லவர்க்கு.

*     உடலுடன் சேர்ந்த பிறவியை ஒழித்த வீட்டுயிர்களுக்கு விருப்பு, வெறுப்பு, அச்சம் ஆகிய எதுவும் எப்போதும் இல்லை.

      __________________________________

157.   கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல
விட்டு விளங்கும் உயிர்.

*     வீட்டுயிர்கள் அப்பழுக்கில்லாத தூய்மையான பொன்னைப் போன்று விளங்கும் தன்மை உடையவை

      __________________________________

158.   எல்லைஇல் இன்பம் உணர்வு வலிகாட்சி
புல்லும் வினைவென் றவர்க்கு.

*     வினைகளை வென்றவர்களிடம் எல்லையற்ற இன்பம், ஞானம், வலிமை, காட்சி விளங்கித் தோன்றும்.

      __________________________________

159.   உலக மறியினும் ஒன்று மறியார்
நிலைய நிலைபெற் றவர்

*     ருக்கால் இவ்வுலகமே நிலைமாறினாலும் வீட்டுநிலை எய்தியவர்கள் மீண்டும் பிறவியை எய்தமாட்டார்கள்.

      __________________________________

160.   மூவுலகத்து உச்சிச் சூளாமணி விளக்குத்
தோவகையில் சித்தி யவர்.

*     குற்றமற்ற வீட்டுலகெய்திய சித்த பரமேட்டிகள், மிக உயர்ந்த இடத்தில் உள்ள மணிவிளக்கு ஒளிருமாறு விளங்குகின்றார்கள்.

__________________________________


**     இல்லறத்தார்

161.   பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப் படும்

*     நமது ஆகம நெறிப்படி இல்லறத்திலிருப்போர் பதினோரு நிலையினர் என்பதை உணரல் வேண்டும்.

      __________________________________

**     தரிசனிகன்

162.   காட்சியில் திண்ணனாய், சீல விரதம் இலான்
மாட்சிஉறு தரிசன் ஆம்.

*     நற்காட்சியில் உறுதியுடையவன், ஆனால் விரதங்களை ஏற்காதவன் தரிசனிகன்.

      __________________________________

**     விரதிகன்

163.   வதம் ஐந்தும் சீலம்ஓர் ஏழும்தரித்தான்
விதியால் விரதி எனல்.

*     ஐந்து அணுவிரதங்களையும் , எழு சீலங்களையும் ஏற்று ஒழுகுபவன் ஆகமப்படி விரதிகன் எனப்படுவான்.

      ________________________________________

**     சாமாயிகன்

164.   எல்லியும், காலையும் ஏத்தி நியமங்கள்
வல்லியான் சாமா யிகன்.

*     இரவும் பகலும் ஏற்ற நேரத்தில் நாள் தவறாது ஆன்ம சிந்தனைச் செய்யும் ஆற்றலுடையோன் 'சாமாயிகன்' .

      ________________________________________

**     போசத உபவாசன்

165.   ஒருதிங்கள், நால்வகைப் பவ்வமே, நோன்பு
புரிபவன் போசன் ஆம்.

*     மாதத்தில் நான்கு திதிகளில் உண்ணாவிரதத்தை ஏற்பவன் போசதன் ஏன்னும் ' புரோசதோபவாசன்' எனப்படுவான்.
_________________

**     அச்சித்தன்

166.   பழம், இலை காயும், பசியத் துறந்தான்
அழிவுஅகன்ற அச்சித்தன் ஆம்

*     இலை, காய், கனியாத பழங்கள் இவற்றை உண்ணாது ஒதுக்கியவன் குற்றமற்ற அச்சித்தன் என்னும் ' சத்சித்த விரதனாகும்.'

      __________________________________

**     இரவு உண்ணான்

167.   இருளின் கண் நால்வகை ஊணும் துறந்தான்
இராத்திரிஅ புக்தன் எனல்.

*     இரவில் நால்வகை உணவுகளில் எதையும் உண்பதில்லை என நீக்கியவன் ' இராத்திரி அபுக்தன்' எனப்படும்.

      __________________________________

**     பிரமசாரி

168.   உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துஉணர்ந்து, காமம்
அடங்கியான் பம்மன் எனல்.

*     உடலின் தன்மைகளை நன்கு உணர்ந்து காம உணர்ச்சியை அடக்கியான் பம்மன் எனும் ' பிரம்மசாரி' எனப்படுவான்.
     
__________________________________

**     அநாரம்பன்

169.   கொலைவரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகில் அநாரம்பன் எனல் .

*     மிகுதியான உயிர்க் கொலைக்குக் காரணமான தொழில்கள் எதையும் செய்யாதொழிந்து விட்டவன் அநாரம்பன்எனப்படுவான்.

      __________________________________

**     அபரிக் கிரகன்

170.   இருதொடர்ப் பாட்டின் கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக் ரகன்.

*     அகப்பற்றுக்களில் மனதைச் செலுத்தாது ஆர்வத்தை அடியோடு நீக்கியவன் அபரிக் கிரகன்என்னும் நிலைக்குரியவன்.

_____________________

**     அனனு மதன்

171.   யாதும் உடன்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன்
மாசுஇல் அனனு மதன்.

*     மற்றவர் செய்யும் தொழில்களுக்கும் உடன்பாடு இல்லாதவன் அதாவது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாதவன் மாசற்ற அனனு மதன்எனப்படுவான்.

      __________________________________

**     உத்திட்டபிண்டன்

172.   மனைதுறந்து, மாதவர் தாளடைந்து, நோற்று,
வினை அறுப்பான் உத்திட்டன் ஆம்.

*     இல்லைத்துறத்து மாமுனிவர்பால் சென்று விரதங்களை ,மேற்கொண்டு வினைகளை கெடுக்க முயலும் பக்குவம் அடைந்தவன் உத்திட்டபிண்ட விரதனாவான்’.

      __________________________________

**     பதினொரு நிலைகலின் இயல்பு

173.   முன்னைக் குணத்தொடு தம்தம் குணம்உடைமை
பண்ணிய தானம் எனல்

*     பதினொரு நிலைகளும் அந்த அந்த நிலைகளுக்குக் கூறப்பட்ட குணங்களோடு தன் தன் முன் நிலைக்குரிய குணங்களையும் உள்ளடக்கியதாம் என அறிதல் வேண்டும்.

      __________________________________

**     நூலை உணரும் முறை

174.   பாவம் பகையொடு, சுற்றம் இவைசுருக்கி
மோவமோடு இன்றி உணர்.

*     பாவச் செயல், பகையுணர்வு, சுற்றத்தினர்பால் பற்று இவற்றை முறையாக நீக்கி அறியாமை நீங்கி நல்ஞானத்துடன் நடுமைபிறழாது ஆகமங்களை அறிவாயாக

      __________________________________

**     அருங்கலச் செப்பின் சிறப்பு

175.   அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்பு திரு.

*     அருங்கலச் செப்பு என்னும் இந்நூலினை ஆய்ந்துணர்ந்தவர்கள் மாண்பமைந்த மனித இன்பத்திலிருந்து முக்தி நிலை வரை எய்துவர்.

__________________________________
     
176.   வந்தித்துஆய்ந்து, ஓதினும், சொல்லினும், கேட்பினும்
வெந்து வினையும் விடும்

*     இந்நூலினைப் போற்றி உணர்ந்தாலும் மற்றவர்க் குரைத்தாலும் மற்றவர் கூறக் கேட்டாலும் அவரிடம் இறுகியுள்ள வினைகள் அழிந்தொழியும் என்பதாம்.

_________________________________

**     அருங்கல செப்பின் பயன்கள்

177.   தப்பினில் மீளா, கடுந்தவம் நீர்உற்ற
உப்பினில் மாய்ந்து கெடும்

*     இந்நூலில் கூறிய நெறிமுறைகளைத் தவறாது மேற்கொள்பவரின் தீவினைகள் நீரில் கரையும் உப்பு போல் மாய்ந்து தொழியும்.

      __________________________________

178.   காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

*     ஆசை, வெகுளி, மயக்கம் இவை மூன்றும் அடியோடு ஒழியுமானால் பிறவிப்பிணியும் அவற்றுடன் ஒழியும் என்பதாம்.

      __________________________________

179.   முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்கெல்லாம்
சித்தி அருங்கலச் செப்பு.

*     உயர்ந்தவை அனைத்தையும் அளிக்கவல்ல இந்நூல் வீட்டு நெறியாதார்க்கு அந் நெறியினை உணர்த்தும் ஆற்றல் பெற்றதாகும்.

      __________________________________

180.   தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச் செப்பு.

*     தீர்த்தற்கரிய தீவினைகளை நீக்கி வீட்டினை அளிக்கும் ஆற்றல் பெற்ற இந்நூலினை ஆய்ந்துணர்ந்து அதன் படி நடப்பாயாக.

      __________________________________

181.   நச்சரவு அணிநிழல் பச்சைமா மலைதனை
நிச்சலும் நினைப்பவற்கு அச்சம்இல்லையே.

*     நஞ்சினைப் பெற்ற பாம்பின் பட நிழலில் வீற்றிருக்கும் பச்சைமலை போன்ற பார்சுவ தீர்த்தங்கரரை நாள்தோறும் தொழுவார்க்குப் பிறவித்துன்பங்கள் இல்லை என்பதாம்.
      __________________________________

      அருங்கலச் செப்பு –

மூலமும் உரையும் முற்றும்.



No comments:

Post a Comment